PUBLISHED ON : ஜூன் 07, 2025 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழக பல்கலைகளில் நிர்வாக பிரச்னைகளால், கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் பல பாடப்பிரிவுகளையே, தி.மு.க., அரசு மூடிக் கொண்டிருக்கிறது. நான்காண்டுகளாக துாங்கிவிட்டு, இப்போது புதிய பல்கலை, கல்லுாரிகள் திறக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை, தமிழக மக்களும், மாணவர் சமுதாயமும் நம்ப தயாராக இல்லை.
டவுட் தனபாலு: அது சரி... பள்ளிக்கல்வித் துறையிலதான் படுமோசமான நிர்வாகம் இருக்குதுன்னு நினைத்தால், உயர்கல்வித் துறையிலும் நிலவரம் சரியில்லையா... பல்கலைகளில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்காமல், எத்தனை கல்லுாரிகளை திறந்தாலும், அதனால் பலன் கிட்டுமா என்பது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, த.வெ.க., சார்பில் விருது வழங்கும் விழா, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. த.வெ.க., தலைவர் விஜய் வீடு மற்றும் கட்சி அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், கட்சி நிகழ்ச்சிகளை எல்லாம் அங்கேயே நடத்தி வருகிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, மாநிலம் முழுதும் அவர் வலம் வந்தால்தான் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என, அக்கட்சியினர் கருதுகின்றனர்.
டவுட் தனபாலு: அடடா... இ.சிஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில இருந்தே, கட்சியை நடத்திடலாம்னு நினைக்கிறாரோ... தப்பித்தவறி நாளைக்கு விஜய் ஆட்சிக்கு வந்தாலும், தலைமை செயலகத்தையே இ.சி.ஆருக்கு மாத்திடுவாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகம் முழுக்க எட்டு பேர், ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தின் எந்த பகுதியிலும், மக்கள் அச்சமின்றி நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பதும், சட்டம்- - ஒழுங்கை நிலைநிறுத்துவதும் தான், அரசின் முதல் கடமை. அதை செய்யத்தவறிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பதாகக் கூறி, மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
டவுட் தனபாலு: அது சரி... கிட்டத்தட்ட, 8 கோடி மக்கள் தொகை இருக்கும் தமிழகத்தில், ஒரே நாளில் எட்டு பேர் கொலை பெரிய விஷயமா...? முதல்வர் பாணியில் சொன்னால், 'அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த சம்பவங்கள்'தானே... அதை போய் பெரிதுபடுத்தலாமா என்ற, 'டவுட்'தான் வருது!