PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தி.மு.க., உடன் மீண்டும் கரம் கோர்ப்பதில், எந்த மாற்றமும் இல்லை. வேறெந்த கட்சியுடனும் கூட்டணி சேர்வதற்கான அவசியமும் இல்லை. இதுகுறித்து ரகசியமாக பேசும் பழக்கமும் எங்களுக்கு இல்லை. கூட்டணி தொடர்பாக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கற்பனையாக பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். பா.ம.க., வலுவான கட்சி; தற்போது அங்கு நிலவுவது உட்கட்சி பிரச்னை. தந்தை, மகன் கருத்து வேறுபாட்டால், இரு அணி போல தெரிகிறது. கூட்டணியில் பா.ம.க., இணையுமா என்பதை, தி.மு.க., தலைமையே முடிவெடுக்கும்.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணி யில் பா.ம.க., இணையுமா, இணையாதா என்பதெல்லாம் உங்க கையில் தான் இருக்கு... தி.மு.க., தரும் சொற்ப சீட்களை வாங்கிட்டு கம்முன்னு இருந்துட்டா, பிரச்னையில்லை... கூடுதல் சீட்கள் கேட்டு நீங்க குடைச்சல் கொடுத்தால், உங்களுக்கு, 'அவுட்' கொடுத்துட்டு, பா.ம.க.,வை, 'இன்' பண்ணிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: தமிழகத்தில், 30 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ள கள்ளை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இறக்கி, மக்களுக்கு வழங்குகிறார். கள் இறக்கும் விவசாயிகள் சிறைக்கு செல்கின்றனர். ஆனால், மரம் ஏறி கள் இறக்கிய சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு உள்ளது. சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... சாதாரண பனை ஏறும் தொழிலாளி கள் இறக்கினால், அவர் மீது வழக்கு பதிவு பண்ணி கைது பண்ணிடுறாங்க... ஆனா, 'டிவி'க்களில் நேரடி ஒளிபரப்புடன் கள் இறக்கிய சீமானை கண்டுக்காம இருப்பதில், ஆளுங் கட்சியின் ஓட்டு வங்கி அரசியல் ஒளிந்திருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., செய்தி தொடர்பு குழு செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்: தி.மு.க., கூட்டணி கட்சிகள், அதிக தொகுதிகள் கேட்பது அவரவர் உரிமை. அதை தவறு என சொல்ல முடியாது. ஆனால் இருப்பது, 234 தொகுதிகள் மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பதை, இருக்கும் தொகுதிகள் குறைந்து விடக்கூடாது என்பதற்கான உத்தியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: இதன் மூலமா, 'கடந்த 2021 தேர்தல் போலவே இம்முறையும், கூட்டணி கட்சிகள் எல்லாத்துக்கும் தலா ஆறு சீட்கள் கண்டிப்பாக ஒதுக்கப்படும்... அதுக்கு மேல எதிர்பார்க்காதீங்க' என்பதை சொல்லாம சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!