PUBLISHED ON : ஜூன் 26, 2025 12:00 AM

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: முருகன் பெயரை வைத்து, தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என பா.ஜ., மூத்த தலைவர் அமித் ஷா நினைக்கிறார். வேலையும், முருகனையும் வைத்து வெற்றி பெறுவோம் என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தான் வேலுவும், துரைமுருகனும் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
டவுட் தனபாலு: தி.மு.க., அமைச்சரவையில் வேலுவும், முருகனும் இருக்காங்க என்பது உண்மைதான்... ஆனா, அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு வந்த அமைச்சர் வேலுவுக்கு கிடைக்கும் மதிப்பும், மரியாதையும், கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், கட்சியின் பொதுச்செயலருமான துரைமுருகனுக்கு கிடைக்குதா என்ற, 'டவுட்'டுக்கு பாரதியிடம் பதில் இருக்கா?
பத்திரிகை செய்தி: அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது, அவருடைய தனிச்செயலராக இருந்தவர் சுவாமிநாதன். அவரை, கடந்த 13ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தனது தனிச்செயலராகவும், செய்தித் தொடர்பாளராகவும் நியமித்தார். இதன் தொடர்ச்சியாக அன்புமணி, 'எக்ஸ்' பக்கத்தில், 'எனது முன்னாள் உதவியாளர் சுவாமிநாதனுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை. பா.ம.க.,வினர், எனது நலன் விரும்பிகள் சுவாமிநாதனுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்' என அறிவித்துள்ளார்.
டவுட் தனபாலு: தன் தந்தைக்கு உதவியாளரா இருப்பவரிடம், எனது நலம் விரும்பிகள் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாதுன்னு சொல்லியிருக்காரே... இதன் மூலமா, 'என் நலன் விரும்பியாக, என் தந்தை இல்லை' என்பதை அன்புமணி பகிரங்கமா சொல்லிட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மன்னார்குடியை சேர்ந்த த.வெ.க., தொண்டர் முருகேசன்: நீண்ட நாட்களாக விஜய் ரசிகராக இருந்து, த.வெ.க.,வில் இணைந்தேன். வெகுகாலமாக அவரை நேரில் சந்திக்க முயற்சித்தேன். இந்த பிறந்த நாளில், எப்படியும் கட்சியினரை அவர் சந்திப்பார் என்று நம்பி, கட்சி அலுவலகம் இருக்கும் சென்னை, பனையூருக்கு சென்று, நாள் முழுதும் காத்திருந்தேன். ஆனால், கடைசி வரை, பனையூர் பக்கமே அவர் வரவில்லை. கட்சியின் தலைவராக இருப்பவரை, தொண்டர்களே பார்க்க முடியாத நிலை இருக்கும்போது, அவரால், மக்களுக்காக எப்படி பணியாற்ற முடியும்?
டவுட் தனபாலு: சபாஷ், சரியான கேள்வி... இதையே தேர்தல் நெருக்கத்துல, வாக்காளர்களும் தங்களுக்குள்ள கேட்டுக்கிட்டாங்க என்றால், விஜய் கட்சி வேட்பாளர்களுக்கு டிபாசிட்டாவது தேறுமா என்பது, 'டவுட்'தான்!