PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: தமிழகத் தில் தேர்தலுக்கு பின் அமையும் தி.மு.க., ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழக காங்., நிர்வாகிகள் பலரும் கேட்கின்றனர். ஆனால், தி.மு.க.,விடம் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் ஆகியோர் எங்களிடம் எதுவும் கூறவில்லை.
டவுட் தனபாலு: அதெப்படி...? உங்களுக்கு பசித்தால் நீங்க தான் சாப்பிடணும்... கார்கேயும், ராகுலுமா தமிழக அமைச்சர்களாக போறாங்க... ஆட்சியில் பங்கு கேட்டால், ஆளுங்கட்சியான தி.மு.க., கோபித்து கொள்ளும் என்பதாலும், அதுவும் இல்லாம ஆளுங்கட்சியிடம் இப்ப கிடைக்கும் சலுகைகள் பறிபோயிடும் என நீங்க பயப்படுவதும், 'டவுட்' இல்லாம தெரியுது!
*******************
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சினிமாவில் உயர்ந்த நடிகராக இருக்கிறார்; அவருக்கென சந்தை மதிப்பு இருக்கிறது. அதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், 'மக்களுக்காக என் உச்சத்தை, என் வருவாயை விட்டு விட்டு வந்தேன்' என, அடிக்கடி அவர் கூறுவதை கேட்டால், யார், அவரை சினிமாவை விட்டு வரச் சொன்னது என்ற கேள்வி தான் எழுகிறது.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... 'தமிழகம், தலைவன் இல்லாம தள்ளாடிட்டு இருக்கு... நீங்க வந்து கோட்டையில் முதல்வராக உட்கார்ந்து தான், எங்க தலைவிதியை மாத்தி எழுதணும்'னு எந்த வாக்காளரும் விஜய் வீட்டு வாசல்ல போய் அழுது புலம்பலையே... அவருக்கு சினிமாவுல கிடைச்ச புகழ் போதை போதாமல் தான், அரசியலுக்கு வந்திருக்காரோ என்ற, 'டவுட்'தான் வருது!
*******************
தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி: தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 125 சட்டசபை தொகுதிகளில் கவனம் செலுத்த உத்தரவு போட்டு உள்ளார். சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமாரும், ஆட்சியில் பங்கு, அதிக இடங்களை பெற வேண்டும் என்கிறார். தமிழக காங்கிரசாரின் உணர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, நானும் டில்லி மேலிடத்தில் எடுத்து சொல்வேன்.
டவுட் தனபாலு: நீங்க மாநில தலைவராக இருந்தப்பவே, உங்க குரலுக்கு உள்ளூர் காங்கிரசாரே மதிப்பு தர மாட்டாங்க... இப்ப முன்னாள் தலைவராகிட்ட சூழல்ல, ஆட்சியில் பங்கு குறித்து எடுத்து சொன்னாலும், உங்க டில்லி மேலிடம் அதை காதுல போட்டுக்குமா என்பது, 'டவுட்' தான்!
*******************