/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
வானத்து நிலாவாக ஜொலித்த கோட்டூர் சிறுமி
/
வானத்து நிலாவாக ஜொலித்த கோட்டூர் சிறுமி
ADDED : ஜன 27, 2024 07:31 AM

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் கோட்டூரில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வழிபாடு செய்யும் நிலா பெண் நிகழ்ச்சியில் மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
வேடசந்துார் ஒன்றியம் குட்டம் ஊராட்சி கோட்டூரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இங்கு ஒவ்வொரு ஆண்டும் நிலா பெண் வழிபாடு நடக்கிறது. இதற்காக தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் ஊர் மக்கள் ஒன்று கூடி 10 வயதிற்கு உட்பட்ட அதே ஊரை சேர்ந்த ஜெயபிரகாஷ்-, சுதா தம்பதியின் மகளான சிறுமி யாழினியை நிலா பெண்ணாக தேர்வு செய்தனர்.
அவருக்கு உள்ளூர் மக்கள் பால், பழம் உள்ளிட்ட சத்தான உணவுகளை கோயிலில் வைத்து கொடுத்தனர். சிறுமியின் தாய் மாமன்கள் மாசடச்சியம்மன் கோயிலில் தென்னை மர மட்டையால் குடிசை கட்டி சிறுமியை உள்ளே அனுப்பினர்.
பின் சுவாமி கும்பிட்டு தப்பாட்டத்துடன் ஊர்வலமாக மலை பகுதியை நோக்கி நடந்து சென்றனர். மலை யடிவாரத்தில் உள்ள சரளைமேடு பகுதிக்குச் சென்று அங்கு வெளிச்சம் பொருத்தப்பட்ட பகுதியில் பூ மாலை ஜோடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது உடன் சென்ற பெண்கள் அனைவரும் ஆவாரம் பூக்களை மாலையாக கோர்த்து அந்த சிறுமியின் தலை, கை, இடுப்பு, கால் பகுதிகளில் கொலுசு, ஒட்டியாணம் போல் மாட்டினர்.
அங்கிருந்து மீண்டும் தாரை தப்பட்டை முழங்க ஆடல் பாடலுடன், ஊருக்குள் உள்ள மாரியம்மன் கோயில் முன் வந்து சேர்ந்தனர். அங்கு ஆவாரம் பூ கூடையுடன் நடந்து வந்த சிறுமியை உட்கார வைத்து, பெண்கள் சுற்றி வலம் வந்து கும்மியடித்து பாட்டு பாடினர்.
கையில் தீப விளக்குடன் சென்று ஊர் மந்தையில் உள்ள கிணற்றில் மிதக்க விட்டு ஆவாரம் பூக்களையும் துாவி வழிபட்டனர்.

