sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

இன்னும் பல நுாறு நீதிபதிகள் தேவை!

/

இன்னும் பல நுாறு நீதிபதிகள் தேவை!

இன்னும் பல நுாறு நீதிபதிகள் தேவை!

இன்னும் பல நுாறு நீதிபதிகள் தேவை!


PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதி, செல்வந்தருக்கு ஒரு நீதி என்று கூறப்படுவது உண்டு. கடைக்கோடி அரசு ஊழியர்களில் ஒருவர் லஞ்சம் வாங்கினாலே கைதாவதும், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதும் நாம் அறிந்ததே.

ஆனால், அரசியல் தலைவர்கள் எத்தனை கோடிகள் ஊழல் செய்தாலும், அதற்காக வெட்கப்படுவதோ, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் அஞ்சுவதோ இல்லை.

சமீபத்திய உதாரணம் செந்தில் பாலாஜி. இதற்கு, அவர்கள் சட்ட வல்லுனர்களை வைத்து, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதே காரணம்.

இருப்பினும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவர்களின் சகாக்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா போன்றோர், தற்போதும் இருப்பதால் தான், ஓரளவுக்காவது நீதித்துறை உயிர்ப்புடன் இருக்கிறது.

ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது, அவர்களை தன் சவுக்கடி தீர்ப்புகளால் திருத்தி கடிவாளம் போடுகிறது. தமிழகத்தில், கடந்த பல ஆண்டுகளாக, ஊழல் வழக்குகளில் சிக்கிய பல பிரபலங்கள் தங்களுக்கு சாதகமான சூழல் வரும் போது, வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.

இதற்கு எல்லாம் சாவு மணி அடித்தவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர், தற்போது அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு, இதுபோல ஊழல் வழக்குகள் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் துாக்கத்தை கெடுத்திருக்கும்.

அமைச்சர் பெரியசாமியின் வழக்கிலும், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி கீழமை நீதிமன்றத்தில் வழக்கை முழுமையாக நடத்தாததால், சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

நல்லவேளை, தற்போது அந்த வழக்கை வரும் ஜூலை 31க்குள் விசாரணை நடத்தி முடிக்க நீதிபதி உத்தரவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல்வாதிகளின் ஊழல் குறைய, நமக்கு இவரை போல பல நுாறு நீதிபதிகள் தேவை!



உதயநிதியின் கூற்று உண்மையாகட்டும்!


மரகதம் ராகவசிம்ஹன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், நெல்லை மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதில் பங்கேற்ற விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, 'சென்னையில் கிடைக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளும், திருநெல்வேலி, தென்காசியிலும் கிடைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எங்கள் திராவிட மாடல் அரசு செய்யும்' என்று கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

இதுவரை ஆட்சி செய்தோர், தி.மு.க.,வையும் சேர்த்து தான், பல திட்டங்களையும் தலைநகர் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே துவங்கினர்.

பன்னாட்டு நிறுவனங்களின் ஐ.டி., கம்பெனி களும், கல்வி நிறுவனங்களும் இந்த நான்கு மாவட்டங்களில் தான் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வேலை தேடியும், உயர்கல்வி பெறவும், மக்கள் பல இடங்களில் இருந்தும் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர்.

இதனால், சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகரித்து, வீடுகளின் விலை மற்றும் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் கூட்ட நெரிசலாலும், வாகனங்களின் புகையாலும் மாசு அதிகரித்துள்ளது. எங்கே பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல், சுத்தமான காற்று கிடைக்காததால் மக்கள் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற வியாதிகளால் அவஸ்தைப்படுகின்றனர்.

அதனால், சென்னை தவிரவும், மற்ற மாவட்டங்களிலும் உயர்கல்வி படிக்கவும், வேலைவாய்ப்பு பெறவும் மக்களுக்கு அரசு வசதி செய்து தர வேண்டும். கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதால் அந்த ஏரியாவில் சாலைகள் சீரமைக்கப்படும். அப்பகுதி மக்களின் பொருளாதாரமும் மேம்படும்.

எனவே, இனி பெரிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை இதர பின்தங்கிய மாவட்டங்களிலும் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அமைச்சர் உதயநிதியின் பேச்சு, வெறும் மேடை பேச்சாகமட்டுமல்லாமல், காரியத் திலும் செய்து காட்டினால், அவரை பாராட்டலாம்.



ரயில் சேவையில் குறைகள் களையப்படுமா ?


சொ.முத்துக்குமரன், சிதம்பரம், கடலுார் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: இன்றைய காலத்தில், போக்குவரத்திற்கு ரயில்களையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதற்கு முக்கிய காரணம், மற்ற போக்குவரத்தை ஒப்பிடுகையில், பயணக் கட்டணம் மிகவும் குறைவு, பாதுகாப்பான பயணம், அன்றாடம் நடக்கும் சாலை விபத்துகளுக்கு மத்தியில், ரயில் விபத்து அபாயம் மிக குறைவு.

எல்லாவற்றுக்கும் மேலாக, மோடியின் ஆட்சியில் ரயில்வே துறையில் விரைவு, அதிவிரைவு, வந்தே பாரத் மற்றும் அந்தியோதயா போன்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, பயண நேரத்தை குறைக்க அவற்றின் வேகம் அதிகரிக்கப்படுகிறது.

ரயில் நிலையங்களை நவீனப்படுத்தவும், தண்ட வாளத்தின் தரத்தை உயர்த்த உயர் தொழில்நுட்ப சிக்னல்கள் அமைக்கவும், பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பத்துடன், புல்லட் ரயில் சேவைக்கான பணிகளும் நடைபெறுகின்றன.

இந்த நிறைகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் களையப்பட வேண்டிய சில குறைகளும் உள்ளன...

ரயில் நிலையங்களில் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் பயணியர் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. இங்கு விற்கப்படும் காபி, டீ மற்றும் உணவுகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.

சில ரயில் பெட்டிகளின்கழிப்பறைகளில் சரியாக தண்ணீர் வருவதில்லை. சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. குளிர்சாதன பெட்டிகளில், எலிகளின் நடமாட்டம் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

மொபைல் போன் பார்த்தபடியே, பயணியரின் சந்தேகங்களுக்கு டிக்கெட் கவுன்டர்களில் அலட்சியமாக பதில் சொல்கின்றனர்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் பயணியர் ரயில்களை, விரைவு ரயில் என பெயரை மட்டும் மாற்றி, கூடுதல் கட்டணம் வாங்குகின்றனர்.

கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் கொண்டு வரப்படவே இல்லை. முன்பதிவு செய்யாத பயணியர், முன்பதிவு பெட்டிகளில் ஏறி, தகராறு செய்வதை ரயில்வே காவலர்கள் கண்டு கொள்வதில்லை.

மேற்கூறிய குறைகள் மீது, ரயில்வே துறை கவனம் செலுத்தி, இவற்றை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுத்தால், ரயில் பயணம் பயணியருக்கு இனிமையானதாக அமையும்.








      Dinamalar
      Follow us