PUBLISHED ON : ஜூன் 15, 2025 12:00 AM

எஸ்.கீதாஞ்சலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்ட விரோத குடியேறிகளால், இன்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் லாஸ் ஏஞ்சலஸ் சிட்டி, பற்றி எரிகிறது!
'நாடற்றவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும்' என்று உலகிற்கு பாடம் எடுத்த அமெரிக்கா, இன்று தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கண்டு அச்சம் அடைந்து, அவர்களை வெளியேற்ற துடிக்கிறது.
காரணம், இவர்களில், 90 சதவீதம் பேர் சிரியா, ஈராக், பாகிஸ்தான், சோமாலியா, வங்கதேசம், எகிப்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள். பயங்கரவாதம் மற்றும் அடிப்படை மதவாத சித்தாந்தத்தைக் கொண்ட இந்நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை, 4 லட்சத்தை தாண்டுகிறது.
இதை தடுக்க வேண்டிய கலிபோர்னியா போன்ற மாகாணங்கள், ஓட்டு வங்கி அரசியலுக்காக அவர்களுக்கு சிறப்பு குடியுரிமையையும், ஓட்டுரிமையும் வழங்கி வருகின்றன. அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை கபளீகரம் செய்யும் இவர்கள், அரசுக்கு வரியும் செலுத்துவது இல்லை.
அதேநேரம், அமெரிக்கர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளும், உரிமைகளும் தங்களுக்கும் வேண்டும் என்று போர் கொடி துாக்குகின்றனர்.
இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் பெரும் பங்கு வகிப்பதால், பிற்காலத்தில் அமெரிக்கா பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் குறியாக இருக்கிறார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஆனால், இவர்களை ஓட்டு வங்கியாக நினைப்போர் எதிர்க்கின்றனர். அதுவே, அமெரிக்காவின் இன்றைய நிலைக்கு காரணம்.
அமெரிக்காவின் நிலையைப் பார்த்து, நம் நாடு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறுவோரால், நம் நாட்டிலும் இத்தகைய சூழ்நிலை ஏற்படலாம்.
இதை கருத்தில் வைத்தே பிரதமர் மோடி சி.ஏ.ஏ., - என்.ஆர்.சி., போன்ற சட்டங்களை இந்தியாவில் அமல்படுத்தியுள்ளார். ஆனால், இங்குள்ள எதிர்க்கட்சிகள், சிறுபான்மை ஓட்டுகளை மனதில் கொண்டு இச்சட்டங்களை எதிர்த்து, தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று வீர வசனம் பேசுகின்றன.
போர் மற்றும் பிற காரணங்களால் நம் நாட்டிற்கு அகதிகளாக வருவோரை, சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அந்நாடுகளில் நிலைமை சீரடைந்த பின், அவர்களை திருப்பி அனுப்பி விட வேண்டும்.
அமெரிக்காவின் இன்றைய நிலையை எண்ணி, ஓட்டு அரசியலை கைவிட்டு, நாட்டு நலனில் தங்கள் அக்கறையை காட்ட வேண்டும் எதிர்க்கட்சிகள்!
அரசியல் நாகரிகம்!
முனைவர்
வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி, இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து
சொல்லியுள்ளார். அதை கடுமையாக விமர்சித்துள்ளார், பால்வளத் துறை அமைச்சர்
மனோ தங்கராஜ்.
மோடி இரட்டை வேடம் போடுவதாகவும், சட்டத்தை
மதிக்காதவர் என்றும், அவரது செயல்கள் அரசியலமைப்பு சட்டத்தை காறி உமிழ்வதை
போல் உள்ளது என்றும் வசைபாடியுள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமர் தன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து சொன்னால், அரசியலமைப்பு சட்டத்தை காறி உமிழ்வது போல் உள்ளதாம்...
மதச்சார்பின்மை
என்ற போர்வையில், தமிழகத்தில் பிரிவினை அரசியல் செய்யும் முதல்வர்
ஸ்டாலினை பார்த்து, அவரின் அடித்தொட்டு நடப்பவர்கள் தானே இவர்கள்...
இப்படித்தான் பேசுவர்!
தமிழக முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை பிற மத
பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதும், ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்த மறுப்பதற்கும்
பெயர் தான் மதச்சார்பின்மை!
இதே பாணியை மோடியிடம்
எதிர்பார்த்துள்ளார், மனோ தங்கராஜ். ஆனால், மோடி மனித நாகரிகத்தோடு,
இந்நாட்டின் பிரதமராக இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அது,
இவருக்கு நாடகமாக தோன்றுகிறது.
ஓர் ஆட்சியாளன் குடிமக்கள்
அனைவரிடமும் பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்வதற்கு பெயர் தான் அரசியல்
நாகரிகம். ஆனால், ஹிந்து மதம் என்றால் சுண்ணாம்பும், மற்ற மதங்களுக்கு
வெண்ணையும் வைத்துள்ள தி.மு.க.,வினருக்கு மோடியின் செய்கை நாடகமாகத் தான்
தோன்றும்.
மதச்சார்பின்மை என்ற பெயரில், தமிழகத்தில் நடப்பது தான்
அரசியல் நாடகம். திறந்த மனதோடு இஸ்லாமியர்களுக்கும் மோடி வாழ்த்து
சொல்லிஇருப்பது அரசியல் நாகரிகம்!
மிரட்டல்தி.மு.க.,விடம் பலிக்குமா?
என்.ஏ.நாகசுந்தரம்,
குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம்,சமீபத்தில்
பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, 'கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,
தந்த தொகுதிகளை பெற்றுக் கொண்டோம். தற்போது, அது போல் நடந்தால் சம்மதிக்க
மாட்டோம். காலம் மாறி போச்சு' என்று பேசியுள்ளார்.
அதேநேரம், 'பா.ஜ., தமிழகத்தில் பரவலாக காலுான்றி விட்டது' என, தி.மு.க., தலைமைக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியோ, ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்குகேட்கிறது.
வி.சி., தலைவர் திருமாவளவனுக்கோ நெஞ்சு நிறைய ஆசை... அதிக தொகுதிகளுடன், துணை முதல்வர் பதவியும் வேண்டும் என்று!
'ஆசை
இருக்க தாசில் செய்ய; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' என்பது போல்,
வெறுமனே ஆசைப்பட்டால் போதுமா... நேற்று கட்சி ஆரம்பித்து, இன்று தேர்தலில்
போட்டியிடும் கட்சியா தி.மு.க.,? விஜய் போன்று, 'கேட்பதை எல்லாம்
தருகிறேன்' என்று இரு கை நீட்டி வரவேற்க!
என்னதான் குட்டிக்கரணம்
போட்டாலும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை தி.மு.க., ஒருபோதும்
ஏற்காது. 'நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். ரெண்டு பேரும்
ஊதி ஊதி தின்னுவோம்' என்ற கொள்கை கொண்டவர்கள் தி.மு.க.,வினர்.
அதனால், மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்பதிலிருந்து மருந்துக்கும் மாற்றி யோசிக்க மாட்டார்கள்.
தி.மு.க.,வின்
நான்காண்டு ஆட்சியில் ஊழல், பாலியல் குற்றங்கள், கள்ளச்சாராய மரணங்கள்,
நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்று வெற்றியை பாதிக்கும் ஏகப்பட்ட விஷயங்கள்
இருப்பதால், அதை கூட்டணி கட்சிகள், தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்த
துடிக்கின்றன.
ஆனால், என்னதான் கரடியாக கத்தினாலும், 'எதிர்
அணிக்கு சென்று விடுவேன்...' என்று மறைமுக மிரட்டல் விடுத்தாலும், கழுவிய
மீனில் நழுவிய மீனாகவே தி.மு.க., நடந்து கொள்ளுமே தவிர, இவர்கள் நினைப்பது
ஒருபோதும் நடக்காது!