PUBLISHED ON : ஜூலை 27, 2026 01:42 AM

ஜூலை 27, 1876
கன்னியாகுமரி மாவட்டம், தேரூரில், சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி தம்பதியின் மகனாக, 1876ல் இதே நாளில் பிறந்தவர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தேரூரில் பள்ளிப் படிப்பை முடித்தார். தன், 20 வயதிலேயே கவிதைகள் எழுத தொடங்கினார். ஆசிரியர் பயிற்சி பெற்று, கோட்டார் ஆரம்பப் பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, திருவனந்தபுரம் மகாராஜா பெண்கள் கல்லுாரியில் ஆசிரியராக பணியாற்றினார்.
இவர், 'ஆசிய ஜோதி, உமர் கய்யாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தை பாடல்கள், காந்தளூர் சாலை' உள்ளிட்ட நுால்களை எழுதினார்.
இவருக்கு, 'கவிமணி' என்ற பட்டத்தை தமிழ்வேள் உமாமகேஸ்வரம் பிள்ளை வழங்கினார். இவர், தன் 78வது வயதில், 1954, செப்டம்பர் 26ல் மறைந்தார்.
தமிழக அரசு, கன்னியாகுமரி பேருந்து நிலையத்துக்கு இவரது பெயர் சூட்டி, இவரது இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது.
இவரது பிறந்த தினம் இன்று!
