PUBLISHED ON : ஜூன் 17, 2026 12:30 AM

தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த, காங்கிரஸ் கட்சியின் ஜவஹர்லால் நேருவின் சாதனையை, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் முறியடித்தார். இதை, நாடு முழுதும் பா.ஜ.,வினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில், சமீபத்தில் பா.ஜ., நிர்வாகிகள், பிரதமர் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கேசரி தயார் செய்து எடுத்து வந்திருந்தனர்.
ஆனால், அவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பதிலாக, கட்சி நிர்வாகிகளே பகிர்ந்து சாப்பிட்டு விட்டனர்.
கேசரியை எதிர்பார்த்து, கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த பக்தர் ஒருவர், 'இந்த கேசரியை கூட மக்களிடம் இவங்களால கொண்டு சேர்க்க முடியல... இதுல, பிரதமரின் சாதனையை எப்படி கொண்டு போய் சேர்க்க போறாங்களோ...?' என கிண்டல் அடிக்க, சக பக்தர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.
