PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM

கரூர் மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் கவிதா தலைமையில் நடந்தது. கரூர் குளத்துப்பாளையம் மீன் சந்தை கடைகள் குறித்து தீர்மானம் வைக்கப்பட்டது.
அப்போது கமிஷனர் சுதா பேசுகையில், 'குளத்துப்பாளையம் மீன் சந்தையில், 25 கடைகளுக்கு மாதம், 42,847 ரூபாய் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கடைக்கு மாதம், 3,500 ரூபாய் செலுத்த நேரிடும்' என்றார்.
உடனே மேயர் கவிதா, துணைமேயர் தாரணி சரவணன், 4வது மண்டல தலைவர் ராஜா உள்ளிட்ட கவுன்சிலர்கள், 'மார்க்கெட் விலையை விட கூடுதல் வாடகை நிர்ணயம் செய்வதால், யாரும் கடைகளை எடுக்க முன்வருவதில்லை' என்று கொந்தளித்தனர்.
இதனால் கமிஷனர் சுதா, கால்குலேட்டரில் கணக்கிட்டு, 'ஒரு கடைக்கு மாதம், 1,700 ரூபாய் தான் வரும்' என்றார். உடனே, 'தீர்மானங்கள் ஆல் பாஸ்' எனக்கூறி, கூட்டத்தை முடித்தனர்.
பார்வையாளர் ஒருவர், 'இப்படி, 50 சதவீதம் வாடகையை அதிரடியா குறைச்சா, மாநகராட்சி போண்டியாகிடும்...' என, முணுமுணுத்தபடியே நடையை கட்டினார்.