PUBLISHED ON : ஜன 17, 2024 12:00 AM

தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: லோக்சபா
தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன் தமிழக அரசு, கள்ளுக்கு
விதித்திருக்கும் தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில்,
லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி படுதோல்வி
அடையும்.
கள் இறக்க அனுமதிக்கலைன்னா, தி.மு.க., 39 தொகுதிகளிலும்
தோற்கும்னு நீங்களும், 300வது முறையா சாபம் கொடுத்துட்டீங்க...
ஆட்சியாளர்கள் அசையுற மாதிரி தெரியலையே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: இந்தியாவின் துாய்மையான நகரங்களின் பட்டியலில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து முதல், 100 இடங்களுக்குள் வந்த சென்னை, நடப்பாண்டில், 199வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது சென்னை மாநகராட்சி, கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேற்கொள்ளும், துாய்மை பணிகளை கேள்விக்குறியாக்கி உள்ளது.
எங்கேயாவது ஒரு படி முன்னேறினா ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கும் ஆட்சியாளர்கள், இதைப்பற்றி வாயே திறக்க மாட்டாங்களே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற மொஹரம் என்ற பெண்ணை, பணியில் இருந்த மருத்துவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட முக்கியமானது, அவருக்கு அன்பையும், பண்பையும், கண்ணியத்தையும், பொது இடத்தில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டிய கடமையையும் உணர்த்த வேண்டும்.
மருத்துவம் பார்க்க பயிற்சி அளிக்கும் போதே, கிறுக்காமல், 'பிரிஸ்கிரிப்ஷன்' எழுதவும், நோயாளிகள் மீது எரிந்து விழாமல் இருக்கவும் டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கணுமோ?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தகவல் அளிக்க போதுமான அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படவில்லை. இதுபோன்ற விழா காலங்களில் சரியான திட்டமிடுதல் இல்லாமல், அரசு பெயர் வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதால், முன்பதிவு செய்த பயணியரை வேதனைக்கு உள்ளாக்குவது, ஆட்சியாளர்களின் அலட்சிய போக்கையே காட்டுகிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத கடுப்புல, ஒட்டுமொத்த போக்குவரத்து ஊழியர்களும் ஒண்ணு சேர்ந்து அரசின் பெயரை கெடுக்க முடிவு செஞ்சிருப்பாங்களோ?

