PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: பிறப்பித்த
அரசாணையை அமல்படுத்துவது தான் ஓர் அரசின் கடமை. மாறாக, அரசு
மருத்துவர்களின் ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாடு, ஊதிய உயர்வு குறித்த அரசாணை
எண் 354ஐ ஆராய குழு அமைத்திருக்கிறோம் என்று அரசாணை பிறப்பித்த தி.மு.க.,
அரசே சொல்வது, மருத்துவர்களை ஏமாற்றும் செயலாகும்.
ஏமாத்துறாங்கன்னு
தான் மருத்துவர்களுக்கே தெரியுமே... ஆனா, 10 வருஷம் ஆட்சியில் இருந்த
அ.தி.மு.க., மருத்துவர்களுக்கு ஏதாச்சும் செய்ததா?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டுவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப் பட்டால், வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
இதுபோன்ற விஷயங்களுக்கு, உடனே போராட்டத்தில் குதிக்கிற இவர் உட்பட தி.மு.க., கூட்டணி கட்சிகள், போராட்டத்தை மறந்து பல ஆண்டுகள் ஆகிடுச்சே!
பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு: வடலுார் வள்ளலார் பெருவெளியில் கட்டுமான பணியோ, விவசாய பணியோ செய்யக்கூடாது என்று உள்ளது. வள்ளலாருக்கும், தி.மு.க-.,விற்கும் என்ன சம்பந்தம். ஆன்மிகத்திற்கும், விவசாயத்தை அழிக்கும் தி.மு.க.,விற்கும்எந்த சம்பந்தமும் இல்லை. வள்ளலார் சர்வதேச மையத்தை என்.எல்.சி., இடத்திலோ, சென்னையிலோ அமைக்கலாம் அல்லது திட்டத்தை கைவிடலாம். ஏன் எதிர்ப்பை மீறி கட்ட அடம் பிடிக்கிறீர்கள்.
எதிர்ப்பை மீறி கட்டணும்னு இருக்காங்கன்னா, வேற எங்க இருந்தோ ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் இருக்குன்னு அர்த்தம்... இவருக்கு இது தெரியலையா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: அரசியல் என்பது சமுதாய பணி. ஆனால், சமுதாய விரோத, சட்ட விரோத நபர்களின் நடவடிக்கைகளை, அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஊக்குவிக்கும் போக்கு அதிகரித்து வருவது, தமிழகத்தின் கலாசாரத்தை, பெருமையை, ஒழுக்கத்தை சீரழிக்கும் குற்றவாளிகளை, ஊழல்வாதிகளை, தீயசக்திகளை ஊக்குவித்து, குடிமக்களை 'குடிக்கு' அடிமையாக்கி, வருங்காலத்தை நாசமாக்குவது தான் திராவிட மாடலோ?
பிரபல ரவுடிகளை எல்லாம் வரிசை கட்டி பா.ஜ.,வில் சேர்த்து, பொறுப்பும் கொடுப்பது மட்டும் சரியா?

