/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
எல்லா உயிரினத்துக்கும் பயனளிக்கும் பண்ணை!
/
எல்லா உயிரினத்துக்கும் பயனளிக்கும் பண்ணை!
PUBLISHED ON : ஜூலை 03, 2025 12:00 AM

பூமி வெப்பம் அடைவதை தடுக்க, தன்னால் முடிந்த பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு சூழல் பண்ணையை உருவாக்கி, பராமரித்து வரும் செங்கல்பட்டை சேர்ந்த அஜித் ஜெயின்:
எங்கள் முன்னோர், 100 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு குடியேறி விட்டனர். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கு தான். நகைக்கடை நடத்தி வருகிறேன். இந்த 3 ஏக்கர் நிலத்தை, 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கினேன். என் தேவைக்கான வருமானம் இன்னொரு தொழிலில் கிடைத்து வருவதால், சேவை அடிப்படையில் இயங்கக்கூடிய பண்ணையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
வெப்பத்தை குறைப்பதிலும், காற்றை துாய்மைப்படுத்தும் வகையிலும் சூழல் பண்ணையாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு மரம் வளர்ப்பு தான் சரி என்பதால், இங்கு அரை ஏக்கரில் மா சாகுபடி நடக்கிறது. அதில் ஊடுபயிராக வாழை, மஞ்சள் சாகுபடி செய்கிறேன்.
மீதமுள்ள 2.5 ஏக்கரில் கொய்யா, சப்போட்டா, வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட 25 பழ மரங்கள் இருக்கின்றன. பறவைகள் தங்குவதற்கு மரங்களின் கிளைகளில் மண் குடுவைகள் கட்டி விட்டுள்ளேன். எந்த வெளியூர் சென்றாலும் மரக்கன்றுகள் வாங்கி வருவேன். மரக்கன்றுகள் நடுவதற்கு எந்த இடைவெளியும் பின்பற்றாமல் நெருக்கமாக தான் நட்டுள்ளேன். அதுவே நன்றாக வளர்ந்து நிற்கிறது.
பூமியை பாழ்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில், நிலம் வாங்கியது முதல் இயற்கை விவசாயம் மட்டுமே செய்கிறோம். வீட்டுக்கு தேவையான பழங்கள், கீரைகள், காய்கறிகளை விளைவித்துக் கொள்கிறோம்.
இங்கு மரநாய், நண்டு, நத்தை, அட்டை, தவளை, காட்டு முயல், கீரி, பாம்பு என பலவிதமான உயிரினங்களும் வருகின்றன. சிட்டுக்குருவி, மைனா, கிளி உள்ளிட்ட பறவைகளும் இருக்கின்றன. எல்லா உயிரினங்களுக்கும் பயனளிக்கிற பண்ணையாக மாறி இருக்கிறது.
தினமும் காலை மூன்று மணி நேரம் பண்ணையை பார்வையிடுவேன். ஆரம்ப கட்ட செலவுகள் இல்லாமல், மரக்கன்றுகள் வாங்கியது, அதை நட்டது என கடந்த 10 ஆண்டுகளில், 5 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பேன். ஆனால், இங்கு வளர்ந்து நிற்கும் 5,000 மகோகனி மரங்களை அறுவடை செய்தாலே, 250 டன் கிடைக்கும். 1 டன் 8,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
குறைந்தபட்சம், 7,000 ரூபாய் என விற்பனை செய்தாலும், 17.50 லட்சம் ரூபாய் கிடைக்கும். மூங்கில், சவுக்கு உள்ளிட்ட மரங்களை சேர்த்தால், 2.50 லட்சத்துக்கு மேல் வரும். ஆக, 20 லட்சம் பெறுமானமுள்ள மரங்கள் இருக்கின்றன. இந்த பண்ணையை யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம்.தொடர்புக்கு: 93810 06992