/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
முறையாக, தரமாக செய்து தருவதே எனக்கான விளம்பரம்!
/
முறையாக, தரமாக செய்து தருவதே எனக்கான விளம்பரம்!
PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM

அலுமினிய சட்டம் வைத்த கண்ணாடி ஜன்னல் தொழிலில் அசத்தும், தஞ்சாவூர் அருகே உள்ள நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த என்.கே.சேகர்:
பிளஸ் 2 வரையே படித்த நான், ஊரில் விவசாய வேலை செய்து வந்தேன். பின், வெளிநாடு செல்ல முடிவெடுத்து, 26 வயதில் மலேஷியாவுக்கு சென்றேன்.
ஓராண்டு ஆன நிலையில், நான் வேலை செய்த கம்பெனியில் சில சூழல்களால், பலரை வேலையை விட்டு நிறுத்தினர்; அதில் நானும் ஒருவன்.
அந்த கம்பெனி முதலாளி, 'உங்களுக்கு கைத்தொழில் ஏதாவது தெரிந்தால், நானே இங்கு வேறு வேலை வாங்கிக் கொடுத்து விடுவேன்' என்றார்; ஆனால், எனக்கு எந்த தொழிலும் தெரியாது.
கைத்தொழில் கற்றுக் கொண்டிருந்தால், பிழைத்துக் கொள்ளலாம் என்பதை அந்த நெருக்கடியான நேரத்தில் உணர்ந்து, நண்பர் வாயிலாக கண்ணாடி ஜன்னல் செய்யும் வேலைக்கு சேர்ந்தேன். ஓராண்டிலேயே கண்ணாடி மற்றும் அலுமினியம் பேப்ரிகேஷன் வேலையை முழுமையாக கற்றுக் கொண்டேன்.
மலேஷியாவில் இந்த தொழிலுக்கு பெரிய அளவிலான தேவையும் இருந்தது. அலுமினிய ஜன்னல், அலுவலக இன்டீரியர், கண்ணாடியை டிசைனாக கட் செய்வது என, பல நுணுக்கங்கள் உள்ளன; அனைத்தையும் கற்றுக் கொண்டேன். எட்டு பேர் கொண்ட குழுவிற்கு, சூப்பர்வைசர் ஆகும் அளவிற்கு உயர்ந்தேன்.
மனைவி, பிள்ளைகளுடன் ஊரிலேயே செட்டிலாக விரும்பி, 20 ஆண்டுகள் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தஞ்சாவூருக்கே திரும்பி விட்டேன். தஞ்சையில் அலுமினியம் கிளாஸ் ஒர்க் வேலைக்கான தேவை அதிகம் இருப்பதை அறிந்து, 2018ம் ஆண்டில் சொந்தமாக தொழில் துவங்கினேன்.
வேலையின் தரம், சொன்ன நேரத்திற்கு 'டெலிவரி' போன்றவை எனக்கான அடையாளமாக மாறியது. நான் கற்ற வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழிலை செய்ததால், என் வேலையில் இருக்கும் தனித்துவத்தை வாடிக்கையாளர்கள் புரிந்து கொண்டனர்.
அனைத்தும் மிக துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக கட்டிங் துவங்கி, பிட்டிங் வரை நானே முழுக்க ஈடுபடுவேன்; அடிப்படையான உதவிக்கு மட்டும் ஆட்களை அழைத்துச் செல்வேன்.
தற்போது தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை என, பல மாவட்டங்களில் இருந்தும் பணி வாய்ப்புகள் வருகின்றன. இதற்காக, நான் எந்த விளம்பரமும் செய்யவில்லை; முறையாக, தரமாக செய்து கொடுப்பது மட்டுமே எனக்கான விளம்பரம்.
ஆரம்பத்தில், 3 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய இந்த தொழில் வாயிலாக, தற்போது எல்லா செலவுகளும் போக மாதம், ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. கைநிறைய சம்பாதிப்பதுடன், குடும்பத்துடன் சேர்ந்திருப்பதும் மனநிறைவை தருகிறது.