/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வீட்டில் இருந்து மாற்றங்கள் துவங்கணும்!
/
வீட்டில் இருந்து மாற்றங்கள் துவங்கணும்!
PUBLISHED ON : மே 14, 2025 12:00 AM

தமிழக வரலாற்றில் முதல் முறையாக, தீயணைப்பு துறையில் பணியாற்றி, ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வு பெற்று, விருதுநகர் மாவட்ட துணை கலெக்டராக பணியாற்றி வரும் பிரியா ரவிச்சந்திரன்:
என் சொந்த ஊரு சேலம். விவசாய குடும்பம். நான், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் அதிகாரி சைரன் வைத்த காரில் வந்ததை பார்த்தேன்.
அவரின் ஆளுமை என்னை கவர்ந்தது. 'அவர் யார்' என அப்பாவிடம் கேட்டதற்கு, 'ஐ.ஏ.எஸ்., ஆபீசர்' என்றார். அன்று முதல் எனக்கும் ஐ.ஏ.எஸ்., கனவு வந்தது.
சென்னை எத்திராஜ் கல்லுாரியில் இளங்கலையும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுகலை சோஷியாலஜியும் முடித்தேன்.
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். முதல் முயற்சியிலேயே குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்றேன்; தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில், 2003ல் வேலைக்கு சேர்ந்தேன்.
பணிக்கு சேர்ந்த புதிதில், 'இவங்க பீல்டுக்கு வருவாங்களா, மீட்புக்கான அழைப்புகளை எப்படி எதிர்கொள்வாங்க?' என்று நிறைய தயக்கங்கள் சக பணியாளர்களுக்கு இருந்தது.
எல்லாவற்றையும் உடைத்து, களத்துக்கு செல்ல ஆரம்பித்தேன். தீப்பிடித்த இடத்தில் இருந்து அனைவரும் உயிருக்கு பயந்து வெளியே ஓடி வரும் நேரத்தில், நாங்கள் உயிரை காப்பாற்ற உள்ளே செல்வோம்.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம், சென்னை, எழிலகத்தில் தீ விபத்து என, எனக்கு போன் வந்ததும் உடனே கிளம்பி ஸ்பாட்டுக்கு சென்று விட்டேன். எழிலகம் ஏராளமான அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படும் பழமையான கட்டடம். தீயை அணைக்க நிறைய போராடினோம்.
எதிர்பாராத விதமாக கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து என் மேல் விழுந்தது. உடல் முழுக்க தீக்காயங்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்தனர்.
'ஆண் தீயணைப்பு வீரர்கள் இருந்தபோது, நீ ஏன் உள்ள போன' என்று பலர் கேட்டனர். காயங்களை விட, இப்படியான பாலின பாகுபாடு தான் உண்மையில் வலித்தது.
ஆறு மாதத்தில் மீண்டும் வேலைக்கு சென்றேன். காயத்தின் வடுக்களை இப்போது என் துணிச்சலின் அடையாளமாக பார்க்க பழகி விட்டேன்.
பொதுவாக, குரூப் 1 அரசு அதிகாரிகள், மாநில அரசின் பரிந்துரையின்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். அதன்படி, தீயணைப்பு துறையில் இருந்து முதன் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆனேன். இப்போது துணை கலெக்டர் பணி.
கணவரும், குடும்பமும் என் வேலையை சரியாக புரிந்து கொண்டதால் தான், என்னால் தொடர்ந்து இயங்க முடிகிறது. இந்த ஆதரவு அனைத்து குடும்பத்தில் இருந்தும், எல்லா பெண்களுக்கும் கிடைக்கணும். வீட்டில் இருந்து மாற்றங்கள் துவங்கினால், நிறைய பெண்கள் இன்னும் சாதிப்பர்.