/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்கிறேன்!
/
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு வர்த்தகம் செய்கிறேன்!
PUBLISHED ON : பிப் 24, 2024 12:00 AM

மாமல்லபுரத்தில் இயங்கும், 'படைப்பு சிற்பிகள்' சிற்பக்கூடத்தின் உரிமையாளர் பாஸ்கரன்:
மாமல்லபுரத்தில் செயல்படுற அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரியில், ஐந்து ஆண்டு பட்டயப்படிப்பும், மூன்று ஆண்டு பட்டப்படிப்பும் ஒன்றாக முடித்தேன். பின், அதே கல்லுாரியில் சில ஆண்டுகள் ஆசிரியராக வேலை செய்தேன்.
அந்த நேரம், அயர்லாந்தில், 'விக்டர் ஸ்வே - ஆர்ட் பார்க்' என்ற தனியார் புராஜெக்ட் எனக்கு கிடைத்தது. அதற்காக, பேராசிரியர் வேலையை விட்டு விட்டு, 1992ல் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனத்தை சிறு அளவில் துவக்கினேன்.
வாழ்க்கையின் படிநிலைகளை விவரிக்கிற பலதரப்பட்ட சிற்பங்களை இந்தச் சிற்பக்கூடத்தில் வடிவமைத்து, தொடர்ந்து, 15 ஆண்டு கள் அயர்லாந்திற்கு அனுப்பினோம்.
கலை வேலைப்பாடுகள் அதிகமுள்ள அந்தச் சிலைகள், அயர்லாந்திலுள்ள ஒரு பூங்காவில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்த புராஜெக்ட் முடிஞ்சதும், 2007 முதல் பலதரப்பட்ட ஆர்டர்களையும் எடுக்கத் துவங்கினேன். எனக்கு முன்பு குடும்பத்தில் யாரும் பிசினசில் இல்லை. சிற்பக்கலை ஆர்வத்தை மூலதனமாக வைத்து தான் இந்தத் தொழிலை துவங்கினேன்.
வங்கிக் கடனுடன், லாபத்தையும் முதலீடாக பயன்படுத்தி, மலேஷியா, சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சிலைகளை ஏற்றுமதி செய்கிறேன்.
எங்கள் நிறுவனத்தில், 45க்கும் மேற்பட்ட சிற்பிகள் பணியாற்றுகின்றனர். கை வேலைப்பாடுகளால் உருவான சிலைகள் அதிக கலைநயத்துடன், நெடுங்காலத்துக்கு சேதாரமின்றி இருக்கும்.
இதை உணர்ந்து, வெளிநாட்டினர் அதிக அளவில் கற்சிற்பங்களை விரும்பி வாங்குகின்றனர்.
கடவுள் சிலைகளை பெரும்பாலும் ஒரே கல்லில் தான் செய்வோம். வேலைப்பாடுகளை பொறுத்து, சிலைகளின் விலை நிர்ணயிக்கப்படும். இந்தத் தொழிலில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறேன்.
சிற்பக் கலையில் ஆர்வமுள்ளவர்களும், கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரியில் படிக்கும் மாணவர்களும் சொந்தமாக தொழில் துவங்குவது அதிகமாகி வருகிறது. இந்தத் தொழிலைப் பெரிதாக கொண்டு போக முதலீடு அதிகமாக தேவைப்படும்.
வங்கிக் கடனையும் தாண்டி, நம் கையில் இருந்தும் பணத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும். இந்த விஷயங்களுடன் நிலையாக ஆர்டர்கள் எடுப்பதிலும் தெளிவு இருந்தால், சிலைகளை போல உங்கள் தொழிலும் பிரகாசிக்கும்.
கலை திறமையுடன், ஜெயிப்பதற்கான வழிமுறைகளும் தெரிந்திருந்தால் நிச்சயம் சாதிக்கலாம். இந்த பாரம்பரியக் கலை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்!