/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உழைப்பு, நேர்மை நம்மை சாதிக்க வைக்கும்!
/
உழைப்பு, நேர்மை நம்மை சாதிக்க வைக்கும்!
PUBLISHED ON : ஜூன் 11, 2025 12:00 AM

'கிளாசிக் போலோ' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவராம்: அப்பா சின்னதா ஒரு ஸ்பின்னிங் மில் நடத்தி வந்தார். நான், தங்கை, இரண்டு அண்ணன் என மொத்தம் நான்கு பேர்.
திடீரென அப்பா காலமாகி விட்டதால், ஸ்பின்னிங் மில்லை நடத்த வேண்டிய பொறுப்பு அண்ணன்களிடம் வந்தது.
அனுபவம் இல்லாத காரணத்தால், உழைப்புக்கான பலன் கிடைக்கவில்லை. அதனால், இயந்திரங்களை விற்று, கடனை அடைத்தோம். இரு அண்ணன்களும், உறவினரின் கம்பெனிக்கு வேலைக்கு சென்றனர்.
நானும் பாலிடெக்னிக் படித்து முடித்ததும், அண்ணன்கள் வேலை செய்து கொண்டிருந்த கம்பெனியிலேயே வேலைக்கு சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தோம். அனுபவம் கிடைத்ததும் சொந்தமாக தொழில் துவங்க நினைத்தோம்.
மற்ற எந்த ஊர்களிலும் இல்லாத ஒரு தனித்துவமான விஷயம் திருப்பூரில் இருக்கிறது. இங்கு, ஒரு நிறுவனத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்து தொழிலை வளர்த்து கொடுக்கிற மேலாளருக்கு, லாபத்தில் 1 சதவீதத்தை பங்கு கொடுப்பர்.
அப்படி சம்பளம் போக எங்கள் மூவருக்கும் சேர்த்து, 5 லட்சம் ரூபாய் கிடைத்தது. 3 லட்சம் ரூபாயாகவும், 2 லட்சத்திற்கு மெட்டீரியலையும் கொடுத்து, 'இதை வைத்து நீங்கள் தொழில் நடத்துங்கள்' என்று வாழ்த்தி அனுப்பினார் அந்த முதலாளி.
கடந்த 1991ல், 'ராயல் கிளாசிக் மில் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்தோம். 50 லட்சம் ரூபாய்க்கு முதல் ஆர்டர் கிடைத்தது. கடுமையாக உழைக்க ஆரம்பித்தோம்.
தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக, வங்கியில் 25 லட்சம் ரூபாய் லோன் வாங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்து, பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறினோம்.
எங்களது ராயல் கிளாசிக் மில் பிரைவேட் லிமிடெட் வாயிலாக, ஏற்றுமதியில் காலுான்றி, 10 ஆண்டுகளுக்கு பின், இந்திய மக்களுக்கென ஒரு தனி பிராண்ட் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது; அப்போது உருவானது தான், 'கிளாசிக் போலோ' நிறுவனம்.
டி - ஷர்ட்டில் ஆரம்பித்து, இன்று ஆண்களுக்கான எல்லா ஆடைகளையும் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கிறோம்.
மேலும், சிறார்களுக்கென, 'சிபி பாய்ஸ்' என்று ஒரு பிராண்டை உருவாக்கி இருக்கிறோம்.
வெறும் எட்டு பேருடன் துவங்கிய எங்கள் நிறுவனத்தில் தற்போது, 6,000 பேர் பணிபுரிகின்றனர்.
எங்களுக்கு இப்போது, 11 இடங்களில் தொழிற்சாலை இருக்கிறது. ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய், 'டேர்ன் ஓவர்' செய்கிறோம். உழைப்பும், நேர்மையும் தான், எங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.