PUBLISHED ON : ஜூலை 18, 2026 03:00 PM

கடும் வறுமைக்கு இடையிலும் உழைப்பில் அசத்தும் சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த, 80 வயதாகும் பாட்டி கமலம், 17 வயதாகும் அவரது கொள்ளுப்பேத்தி அன்னபூரணி:
* கமலம்: அன்னபூரணி என் பேத்தியின் மகள். பேத்தியின் முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர், முதல் திருமணத்தில் பிறந்த ஐந்து மாத பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனால், தாயை பிரிந்த இவளை நான் துாக்கி வந்து விட்டேன்.
என் கணவர் காலமாகி, 23 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு ஆறு பிள்ளைகள். அவர்களில் ஒரு மகளும், மகனும் மட்டுமே உயிருடன் உள்ளனர்; அவர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால், நானே வேலைக்கு சென்று இந்த குழந்தையை வளர்க்க ஆரம்பித்தேன்.
மூன்று இடங்களில் வீட்டு வேலை செய்கிறேன்; உடலில் தெம்பு இல்லை. ஆனாலும், கொள்ளு பேத்தி நன்கு படித்து, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதை கண்ணால் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், உயிரை கையில் பிடித்துக் கொண்டு, 17 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன்.
* அன்னபூரணி: அம்மா, அப்பா, நண்பர் எல்லாமே என் பாட்டி தான். எப்போதாவது அம்மாவை பார்க்கலாம் என்ற ஆசை வரும். ஆனால், என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அம்மாவுக்கு ஒரு முறை கூட வரவில்லை என்ற விஷயம், பருவ வயதில் தான் எனக்கு புரிந்தது.
அதன்பின், 'அவங்க எங்க இருக்காங்க, எப்ப வருவாங்க' என எந்த கேள்விகளும் மனதுக்குள் வந்ததே இல்லை. பாட்டி ஒரு நாள் கூட, வீட்டில் படுத்து ஓய்வு எடுத்து பார்த்தது இல்லை. எனக்கு ஒரு பாடப் புத்தகம் வேண்டும் என்றால், மற்றொரு வீட்டில் கூடுதலாக வேலை செய்வார்.
பாட்டி படும் கஷ்டத்தை பார்த்து, நானும் வீட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன். பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் வீட்டு வேலைக்கு செல்கிறேன். வேலை முடிந்து வீட்டுக்கு வரவே இரவு, 9:00 மணி ஆகிவிடும். 11:00 மணி வரை படிப்பேன். இது எதுவுமே எனக்கு கஷ்டமாக தெரியவில்லை.
பிளஸ் 2 விடுமுறையில் ஒரு டீக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தேன். யார் மூலமாகவோ என்னை பற்றி கேள்விப்பட்டு, எத்திராஜ் கல்லுாரியில் இருந்து கூப்பிட்டனர். இப்போது, முழு உதவித்தொகையுடன் செயற்கை நுண்ணறிவு எனப்படும், ஏ.ஐ., இளங்கலை படித்து வருகிறேன்.
நன்றாக படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும். 'நான் வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன்; நீங்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் பாட்டி' என்று சொல்ல வேண்டும். கண்டிப்பாக அது நடக்கும். எது இல்லை என்றாலும், படிப்பு இருந்தால், நிச்சயம் எல்லாம் தேடி வரும்.
'கைத்தறி புடவை வாங்கினால் நெசவாளர்களுக்கு வாழ்வு கிடைக்கும்!

நெசவு தொழிலின் சிரமங்கள் குறித்து கூறும், திருவண்ணாமலை மாவட்டம், இருப்பேடு கிராமத்தைச் சேர்ந்த, ராஜிவ் ஆனந்த் - கங்கா தேவி தம்பதி:
ராஜிவ் ஆனந்த்: எங்கள் வீட்டில் மொத்தம் ஏழு குழந்தைகள். பெற்றோருக்கு தெரிந்ததெல்லாம் கைத்தறி வேலை தான்.
குடும்ப கஷ்டத்தால் பள்ளி செல்லவில்லை; வீட்டிலேயே தறி போட்டு நெய்ய ஆரம்பித்தேன். மிகவும் கஷ்டப்பட்டு, சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். சில ஆண்டுகளில் எனக்கும் திருமணமானது.
புடவை நெய்வதற்கு முதலில், கடையில் இருந்து பட்டு நுால் வாங்கி, அதை நம் தறிக்கு ஏற்ற மாதிரி பிரித்து, சாயப்பட்டறையில் கொடுத்து சாயம் போட்டுக் கொள்வோம்.
அதன்பின் தெருவில் கம்பு கட்டி, அணி பிரித்து ரோலில் சுற்றி, தறியில் கொண்டு வந்து மாட்ட வேண்டும். ஒவ்வொரு இழையையும், ஒவ்வொரு முறையும் பார்த்து பார்த்து பக்குவமாக பதமாக நெய்ய வேண்டும்.
நம் உடம்பில் கை, கால் மாதிரி முக்கியமான உறுப்பு தான் புடவைக்கு ஒவ்வொரு இழையும். கிட்டத்தட்ட 2,000 இழைகள் அதில் இருக்கும். அதை பார்க்காமல் விட்டு விட்டால், அது சுற்றி, பக்கத்தில் இருக்கும் இழையையும் அறுத்து விடும்.
சில சமயம் ஏதாவது பூச்சியோ, கொசுவோ புடவையில் உட்கார்ந்து கறை ஆகிவிடும். ஞாபக மறதியாக நாமே கூட தெரியாமல் எதிலாவது கை வைத்து, புடவையை தொட்டாலும் கறை ஆகிவிடும். இந்த மாதிரி கறை, டிசைனில் பெரிய தவறு இருந்தால், கடையில் வாங்க மாட்டார்கள்; திருப்பிக் கொடுத்து விடுவர் அல்லது கூலியை குறைத்து விடுவர்.
கங்கா தேவி: கைத்தறி புடவைகளை விட, விசைத்தறி புடவைகள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றன.
நாங்கள் 10 நாட்கள் நெய்யும் புடவையை, இயந்திரங்கள் வெறும் இரண்டு மணி நேரத்தில் நெய்து முடித்து விடுகின்றன. இயந்திரங்கள் தயாரிக்கும் புடவைக்கும், நாங்கள் தயாரிக்கும் புடவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
விசைத்தறி புடவைகள், 1,500 - 2,000 ரூபாய்க்குள்ளேயே கிடைக்கின்றன. ஆனால், கைத்தறி பட்டுப் புடவையின் ஆரம்ப விலையே 3,000 ரூபாய்க்கு மேல் தான் இருக்கும்.
அதனால், முன் போல் கைத்தறி புடவைகள் விற்பது இல்லை. எங்களுக்கும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற மாதிரி வருமானம் கிடைப்பது இல்லை. மிகவும் கஷ்டமான சூழலில் எங்கள் வாழ்க்கை நகர்கிறது.
இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டால், கைத்தறியே இல்லாமல் போய் விடும். அதனால், முடிந்த வரை பாரம்பரியமான கைத்தறி தொழிலுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
ஒரு கைத்தறி புடவையை வாங்குவது, ஒரு நெசவு குடும்பத்திற்கே வாழ்க்கை கொடுப்பது போன்றது!
