PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM

கண்ணாடி பாட்டில்கள் வாங்கி விற்கும், 'டிரேடிங்' தொழிலில், தமிழகத்தில் முன்னிலையில் இருக்கும் ஆனந்தகுமார் - சுகன்யா தம்பதி:
சுகன்யா: தேசிய பங்கு சந்தையின் சென்னை பிரிவில், அசிஸ்டன்ட் மேனேஜராக இருந்தேன்.
இரண்டு பிள்ளைகள் பிறந்ததும், வேலையில் இருந்து பிரேக் எடுத்திருந்தேன். வீட்டிலிருந்தபடியே பேக்கிங் தொழில் செய்த நான், அதற்கான பாட்டில்களை தேடி அலைந்தேன்.
கண்ணாடி பாட்டில்களை விற்பனை செய்து வந்த என் கணவரின் நண்பர், இந்த தொழிலுக்கான வரவேற்பை எடுத்துச் சொன்னார். விளம்பரத் துறையில் பேக்கேஜிங் ஆலோசகராக இருந்த கணவரும் வேலையில் இருந்து விலகினார்.
கடந்த 2018ல், 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிலை துவங்கினோம். நிறைய ரீ - செல்லர்கள் மற்றும் உணவு விற்பனையாளர்களை அணுகினோம்; பலரும் ஆர்டர் கொடுக்க துவங்கினர்.
லாபத்தை தொழிலிலேயே முதலீடு செய்ததோடு, கடன் வாங்கியும் நிறுவனத்தை விரிவுபடுத்தினோம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகே நிலையான வளர்ச்சி கிடைத்தது.
ஆனந்தகுமார்: சுயதொழில் செய்யும் பலரும், கவர்ச்சிகரமான பாட்டிலை பயன்படுத்தினால், விற்பனை அதிகரிக்கும்னு தப்பா கணக்கு போட்டு நஷ்டமடையுறாங்க.
தினசரி பயன்பாட்டுக்கு ஏதுவாக, 'ஜாம், ஊறுகாய், ஹெல்த் மிக்ஸ்' நெய், தேன் போன்ற பாட்டில்களோட வாய்ப்பகுதி அகலமாக இருக்கணும்.
குடிக்க ஏதுவாக, குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களில் வாய்ப்பகுதி குறுகலாக இருக்கணும்.
வாடிக்கையாளர்களிடம் இதையெல்லாம் எடுத்து சொல்லி, முதலில் சாம்பிள் பாட்டில்கள் கொடுப்போம். பின், வாடிக்கையாளர்கள், 'பீட்பேக்' மற்றும் விற்பனைக்கேற்ப பாட்டில்களை மொத்தமாக வாங்கி பயன்படுத்த சொல்வோம்.
துவக்கத்தில், டூ - வீலரில் வந்து எங்ககிட்ட பாட்டில்கள் வாங்கிட்டு போனவங்க, அடுத்த சில ஆண்டுகளில் டெம்போவுல வாங்கிட்டு போற அளவுக்கு வளர்ந்தாங்க. இப்போது கன்டெய்னரில் டெலிவரி அனுப்புற அளவுக்கு நாங்களும் வளர்ந்திருக்கோம்.
பாட்டிலில், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, லோகோ மற்றும் பெயர்களையும் பிரின்டிங் செய்து கொடுக்கிறோம். கோவை மற்றும் சிவகாசியிலும் எங்கள் நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன.
மாதந்தோறும், 80 டன் அளவுக்கு பாட்டில்களை விற்பனை செய்கிறோம். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
துவக்கத்தில் அடுக்கடுக்கான சோதனைகளை எதிர்கொண்டோம். ஆனாலும், ஒருமுறை கூட தொழில் மீதான நம்பிக்கை குறையவில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் நாங்கள்!

