/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.63 கோடி ஸ்டேடியத்தை நிர்வகிக்கும் தற்காலிக பணியாளர்!
/
ரூ.63 கோடி ஸ்டேடியத்தை நிர்வகிக்கும் தற்காலிக பணியாளர்!
ரூ.63 கோடி ஸ்டேடியத்தை நிர்வகிக்கும் தற்காலிக பணியாளர்!
ரூ.63 கோடி ஸ்டேடியத்தை நிர்வகிக்கும் தற்காலிக பணியாளர்!
PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM

டீயை பருகியபடியே, ''உள்ளாட்சி அமைப்புகள்ல புகுந்து விளையாடுதாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''பொள்ளாச்சி லோக்சபா தொகுதி ஆளுங்கட்சி புள்ளியை தான் சொல்லுதேன்... இப்ப, ஊரக உள்ளாட்சி அமைப்புகள்ல தலைவர், கவுன்சிலர்கள் இல்லாம, அதிகாரிகள் தானே நிர்வாகம் பண்ணுதாவ வே...
''அந்த அதிகாரிகளிடம் தி.மு.க., புள்ளி, 'லே - அவுட் அங்கீகாரம், வீடு கட்ட அனுமதி, டெண்டர்கள் எதையும் எனக்கு தெரியாம செய்யக்கூடாது... எல்லாத்துக்குமான கமிஷன் எனக்கு கரெக்டா வந்துடணும்'னு கறாரா கேட்டு வசூல் பண்ணுதாரு வே...
''அதுவும் இல்லாம, பொது இடங்கள்ல அதிகாரிகளை மிரட்டுதாரு... சமீபத்துல, உடுமலை கூடுதல் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவுக்கு வந்த ஒரு அதிகாரி, அவசரமா வந்து சீட்ல உட்கார்ந்துட்டாரு வே...
''உடனே கோபமான முக்கிய புள்ளி, 'உங்களுக்கு மரியாதை தெரியாதா... நான் வந்து உங்களுக்கு வணக்கம் வைக்கணுமா'ன்னு கேட்டு வறுத்து எடுத்துட்டாரு... இதனால, 'பொள்ளாச்சி தொகுதியை அந்த ஈஸ்வரன் சாமி தான் காப்பாத்தணும்... இவரை கட்சி தலைமை கண்டிச்சு வைக்கலன்னா, சட்டசபை தேர்தல்ல அதிருப்தி ஓட்டுகள் அதிகரிக்கும்'னு கட்சிக்காரங்களே புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பழைய பொருட்கள்ல காசு பார்த்துட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்துக்கு சொந்தமா, சென்னை பாரிமுனையில் குறளகம் என்ற கட்டடம் இருக்கு... இந்த கட்டடத்தை இடிச்சுட்டு, மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலமா புது கட்டடம் கட்ட போறாங்க...
''அரசிடம் எந்த அனுமதியும் வாங்காமலும், டெண்டர் ஏதும் விடாமலும், குறளகம் கட்டடத்தில் உள்ள, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரும்பு உத்திரங்கள், தேக்கு மர பொருட்கள், மின் தளவாடங்களை ஒரு பெண் அதிகாரி, தனக்கு தெரிஞ்ச நிறுவனத்துக்கு புறவாசல் வழியா அனுப்பிட்டு இருக்காங்க... இதுல, அதிகாரிக்கு நல்ல வருமானம் கிடைக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
மொபைல் போனை பார்த்த குப்பண்ணா, ''மகேஸ்வரி மெசேஜ் அனுப்பியிருக்காங்க...'' என முணுமுணுத்தபடியே, ''அதிகாரியே கிடைக்கலையான்னு கிண்டல் பண்றா ஓய்...'' என்றார்.
''எந்த துறைக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை, அலங்காநல்லுார் கீழக்கரை அருகில், 22 ஏக்கர்ல 63 கோடி ரூபாய் செலவுல, பிரமாண்டமான ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டி ரெண்டு வருஷம் ஓடிடுத்து... 'இங்க தான், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்'னு அரசு அறிவிச்சது ஓய்...
''ஆனா, இதுக்கு அந்தந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அரசு பின்வாங்கிடுத்து... இப்ப, பெயருக்கு மற்ற ஊர் ஜல்லிக்கட்டு போட்டிகளை இங்க நடத்தறா ஓய்...
''ஸ்டேடியத்துல ஜல்லிக்கட்டு மியூசியம், வரலாற்று மியூசியம், மாடுபிடி மைதானம் எல்லாம் பிரமாண்டமா இருக்கு... இதை பராமரிக்க சுற்றுலா துறை சார்புல, முதல்ல ஒரு அதிகாரியை நியமிச்சு, அப்புறமா அவரையும் மாத்திட்டா ஓய்...
''இப்ப, தற்காலிக பணியாளர் ஒருத்தரை நியமிச்சிருக்கா... '63 கோடி ரூபாய் ஸ்டேடியத்தை நிர்வகிக்க, ஒரு அதிகாரியை கூட நியமிக்க முடியாத நிலையிலா சுற்றுலா துறை இருக்கு'ன்னு உள்ளூர்காரா புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.