/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பெண்களை சொடக்கு போட்டு அழைக்கும் அதிகாரி!
/
பெண்களை சொடக்கு போட்டு அழைக்கும் அதிகாரி!
PUBLISHED ON : ஜூலை 01, 2025 12:00 AM

படித்துக் கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''யாருமே ஆய்வுக்குப் போறது இல்ல வே...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறை விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்துல கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், பண்டக சாலைகள், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடி, மருந்தகம், காய்கறி கடைகளை எல்லாம் நடத்துதே... கடந்த பிப்ரவரியில் மாநிலம் முழுக்க துவங்கப்பட்ட, 1,000 முதல்வர் மருந்தகங்களையும் இந்த கூட்டுறவு சங்கங்கள் தான் நடத்துது வே...
''கூட்டுறவு துறை உயரதிகாரிகள் ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு அடிக்கடி போய் ஆய்வு செய்வாவ... குறிப்பா, முதல்வர் மருந்தகங்களுக்கு இடம் பார்க்கவே அதிகாரிகள் தெருத்தெருவா அலைஞ்சு திரிஞ்சாவ வே...
''ஆனா, இப்ப இருக்கிற உயரதிகாரிகள் ஆய்வுக்கே போறது இல்ல... 'கூட்டுறவு இணை, துணை பதிவாளர்களும் அலட்சியமா செயல்படுறதால பண்டகசாலை, சங்கங்களின் விற்பனை குறைஞ்சிட்டு'ன்னு ஊழியர்களே புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க முடிவு பண்ணியிருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யார் மேல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சார் - பதிவாளர் அலுவலகத்துல இருக்கிற அதிகாரி, 'டபுள் மீனிங்'ல பேசுறதுல வல்லவராம்... குறிப்பா, பெண் ஊழியர்களிடம் எப்பவும் கோக்குமாக்காவே பேசுறாருங்க...
''இவர், ஏற்கனவே பணியில இருந்த பெரியநாயக்கன் பாளையத்துலயும் இப்படித்தான் வாய்ஜாலம் காட்டி, பிரச்னையாகிடுச்சு... இதனால, அங்க இருந்து இங்க துாக்கியடிச்சாங்க...
''இங்க வந்தும், திருந்தாம பழையபடியே பேசிட்டு இருக்காருங்க... 'சார் இதெல்லாம் தப்பு'ன்னு அவரிடம் சிலர் எடுத்து சொல்லியும், காதுல வாங்காம இருக்காருங்க... இதனால, அவர் மீது துறையின் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாம, போலீஸ் எஸ்.பி.,யிடமும் புகார் அளிக்க பெண் ஊழியர்கள் முடிவு பண்ணியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ராமமூர்த்தி தள்ளி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''என்கிட்டயும் பெண் ஊழியர்கள் பிரச்னை ஒண்ணு இருக்கு ஓய்...'' என்றார்.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''தமிழக அரசின் நிதித்துறையின் கீழ் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை இயங்கறது... இங்க இருக்கற ஒரு அதிகாரி, ஏற்கனவே பணிபுரிந்த இடங்கள்லயும் பல சர்ச்சைகள்ல சிக்கியவர் தான் ஓய்... எங்கயுமே, பெண் ஊழியர்களை மதிக்கவே மாட்டார்...
''தணிக்கை துறையில இருக்கற பெண் ஊழியர்களை எப்பவுமே சொடக்கு போட்டுதான் கூப்பிடறார்... பெண் ஊழியர்களிடம், பைல்களை எல்லாம் தலைமை செயலகம் எடுத்துட்டு வரச் சொல்லி பார்க்கறார் ஓய்...
''பெண்கள் ரொம்ப நேரம் அங்கயே காத்துக் கிடந்து, வீடு திரும்ப ராத்திரியாயிடறது... இதனால, அதிகாரி மீது மகளிர் கமிஷன்ல புகார் குடுக்க பெண் ஊழியர்கள் எல்லாம் முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''நிறைய படிச்சிருந்தும் பெண்களை மதிக்க தெரியாதவங்களா இருந்தா என்ன அர்த்தம் பா...'' என, முணுமுணுத்தபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.