/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குறைகூற வேண்டாம் என அறிவுறுத்திய தி.மு.க., செயலர்!
/
குறைகூற வேண்டாம் என அறிவுறுத்திய தி.மு.க., செயலர்!
குறைகூற வேண்டாம் என அறிவுறுத்திய தி.மு.க., செயலர்!
குறைகூற வேண்டாம் என அறிவுறுத்திய தி.மு.க., செயலர்!
PUBLISHED ON : ஜூன் 18, 2025 12:00 AM

மெதுவடையை கடித்தபடியே, ''அப்ரூவல்ல அமோகமா கொழிக்கறா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''நீலகிரியில், 35 கிராம ஊராட்சிகள் இருக்கு... ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிஞ்சிட்டதால, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் பி.டி.ஓ.,க்களை ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களா நியமிச்சிருக்கா ஓய்...
''கட்டட அனுமதி கேட்டு வர்ற விண்ணப்பங்களை பரிசீலித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கறது இவா வேலை... இதுல, தனி அலுவலர்கள், கிராம ஊராட்சிகள் உதவி இயக்குநர்கள், ஊராட்சி செயலர்கள் கூட்டணி போட்டு, விண்ணப்பிக்கறவாளிடம் ஒரு தொகையை கறந்துடறா ஓய்...
''இதே மாதிரி, நீலகிரி மாவட்டத்துல பிரமாண்ட கட்டடங்கள் அதிகரிச்சுண்டே போறது... இதுல, குன்னுார்ல ஒரே சர்வே நம்பர்ல தலா 2,500 சதுர அடியில ரெண்டு கட்டடங்களுக்கு சமீபத்துல அனுமதி தந்திருக்கா ஓய்...
''உள்ளூர் மக்கள் சின்னதா வீடு கட்டறதுக்கு அனுமதி கேட்டா, மாசக்கணக்குல அலைய விடற அதிகாரிகள், வெளிமாநில தொழிலதிபர்களுக்கு மட்டும், ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் சிபாரிசுல அனுமதியை வாரி வாரி வழங்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மீட்டிங் நடத்தியே நோக அடிக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''வேளாண் துறை அதிகாரிகள் அடிக்கடி, 'வீடியோ கான்பரன்ஸ்'ல மீட்டிங் நடத்துதாவ... அதுலயும் சாயந்தரமா மீட்டிங்கை ஆரம்பிச்சு, ராத்திரி தான் முடிக்காவ வே...
''அதுவரை அதிகாரிகள் மட்டுமில்லாம, அவங்களுக்கான புள்ளி விபரங்கள், தகவல்களை சேகரித்து தரும் பிற பிரிவு ஊழியர்களும் ராத்திரி வரைக்கும் அலுவலகத்துல காத்து கிடக்க வேண்டியிருக்கு...
''திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரைக்கும் மாவட்ட வேளாண் அதிகாரிகள் இப்படி பாடா படுத்துறாங்கன்னா, வாரத்துல முதல் நாளான திங்கள் கிழமை சென்னை அதிகாரிகள், அவங்க பங்குக்கு துறை சார்ந்த மீட்டிங்கை போட்டு, எல்லாரையும் அலற விடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நிறைகளை மட்டும் குறிப்பிடுங்கன்னு சொல்லியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சட்டசபை தொகுதிவாரியா தி.மு.க., நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில சந்திச்சு குறை கேட்டுட்டு வர்றாரே... மாவட்ட செயலர்கள் செயல்பாடுகள் பத்தி இதுல விசாரிக்கிறாருங்க...
''சிலர், மாவட்டச் செயலர்கள் பத்தி வெளிப்படையா குறைசொல்ல தயங்குறதால, அவற்றை மனுக்களா எழுதி வெளியில இருக்கிற பெட்டியில போட்டுட்டு போக சொல்றாங்க...
''இதேபோல, முதல்வர் சுற்றுப்பயணம் போகும் ஊர்களிலும் கட்சியினர் கருத்துகளை தெரிவிக்க, புகார் பெட்டி வைக்கிறாங்க... சமீபத்துல, முதல்வர் தஞ்சாவூருக்கு போனப்பவும் இப்படி புகார் பெட்டி வச்சாங்க...
''அதுக்கு முன்னாடியே தஞ்சை மாநகர தி.மு.க., செயலரும், மாநகராட்சி மேயருமான சன்.ராமநாதன், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, 'யாரும் புகார் எதையும் தெரிவிக்காதீங்க... மாவட்ட நிர்வாகிகள் செயல்பாடுகள் சிறப்பா இருக்குன்னு மனுவில் குறிப்பிடுங்க'ன்னு சொல்லியிருக்காருங்க...
''சில நிர்வாகிகள், 'மனுவுல என்ன எழுதணுமோ, அதை நீங்களே எழுதிடுங்க... நாங்க அதுல கையெழுத்து போட்டுடுறோம்'னு வேண்டா வெறுப்பா சொல்லிட்டு கிளம்பிட்டாங்களாம்...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.