சாலையோரம் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையோரம் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் அவதி
PUBLISHED ON : மார் 22, 2026 05:21 AM

ஏனாத்துார்: ஏனாத்துார் பிரதான சாலையோரம் அப்பகுதி மக்கள் கொட்டும் குப்பையை துாய்மை பணியாளர்கள், தீயிட்டு எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் இருந்து, சுங்குவார்சத்திரம் வழியாக காஞ்சிபுரம் வரும் வாகன ஓட்டிகள், பொன்னேரிக்கரை, புதிய ரயில் நிலையம் வழியாக சுற்றி கொண்டு காஞ்சி நகருக்குள் செல்வதை தவிர்க்கும் வகையில், ஏனாத்துார் புறவழிச் சாலையை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏனாத்துார் சாலையோரம் வசிப்போர் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பையை சாலையோரம் உள்ள காலி மனைகளில் கொட்டி வருகின்றனர். ஊராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பையை அகற்றாமல் தீவைத்து எரிக்கின்றனர்.
குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் மாசடையும் சூழல் உள்ளது.
எனவே, ஏனாத்துார் பிரதான சாலையோரம் உள்ள காலிமனையில், அப்பகுதி மக்கள் கொட்டும் குப்பையை தீயிட்டு எரிக்காமல், முறையாக அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
