கடல் தாமரை
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துள்ளித் திரிந்த பருவத்திலே, டி.வி.ஆரின் பள்ளிக்கூட வாழ்க்கை பற்றி நமக்கு இன்று கூறக்கூடிய வர் அதிகம் இல்லை. (டி.வி.ஆரும் எதையும் எழுதி வைக்கவில்லை) தன் சொந்தக்காலில் நின்று, தானே திட்டமிட்டு, தமிழக மக்களின் நாடித் துடிப்புகளைச் சரியாக கணக்கிட்டு, அவர்களது அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பாடுபட்டு, தனக்கென்று தமிழகத்தில் ஒரு தனி இடத்தைப் பெற்றவர், டி.வி.ஆர்., என்பதில் இரு வேறு கருத்துக் களுக்கு இடமில்லை. ஒரு தனி மனிதர் இந்த நிலைக்கு வரவேண்டு மானால், அதற்கான அடிச்சுவடுகள் அவரது இளமைக் காலத்திலேயே உருவாகி இருக்க வேண்டும். அந்தக் காலம் இந்திய நாடு முழுவதும் ஆங்கிலேய ஆட்சியாளர் களிடம் அடிமைப்பட்டிருந்த காலம். அதே சமயம் நாஞ்சில் நாடோ, ஒரு மன்னரின் ஆளுகையில் இருந்தது. ஆங்கிலேயருக்குத் தாங்கள் அடிமைகள் என்ற உணர்வு அவர்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்;
|
அரசியல், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் தமிழகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற ஜீவானந்தம் கூறுகிறார்: நாங்கள் இருவரும் பள்ளித் தோழர்கள். அந்தக் காலத்திலேயே அவர் வித்தியாசமானவர். பல முற்போக்கு எண்ணங்கள் உண்டு. இது மேல்தட்டு மாணவர்களுக்குப் பிடிக்காது. பார்ப்பதற்கு ராமசுப்பு சாதுவாக இருந்ததால் (பார்ப்பதற் குச் சாதுபோல் என்றுதான் ஜீவா னந்தம் கூறினாரே தவிர, அவர் ஒரு சாது என்று கூறவில்லை) மேல் தட்டு மாணவர்கள் சிலர், அவரது போக்கை மறைமுகமாகக் கேலி செய்வர். அது எனக்குத் தெரிந்தால் போதும், நான் அந்தப் பையன்களை நையப் புடைத்து விடுவேன். அப் போதெல்லாம் ராமசுப்பு, ‘ஏன் எனக்காக வீணாய்ச் சண்டைக்குப் போகிறாய் . . . சொன்னால் சொல்லி விட்டுப் போறான்’ என்று என்னி டம் கூறுவார். . .
ஜீவானந்தம் குறிப்பிடும் மேல் தட்டு மாணவர்கள் யார் என்ற ஆராய்ச்சி நமக்கு இப்போது தேவை யில்லை. டி.வி.ஆரின் பெரும் பாலான நண்பர்கள் பிராமணர் கள் இல்லை. அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட கூட்டுக் காண முடி யாதது. இதுவே அவரை வித்தியாச மானவராக காட்டினாலும், ‘இதை யும் விட ஏதாவது ஒன்று மாதிரிக் குச் சொல்லுங்களேன்’ என்று வெ.நாராயணன் அவர்களிடம் கேட்டபோது, அவர் கூறினார்:
* வெ.நாராயணன் நாகர்கோவில் தழியல் மகாதேவர் கோவில் கிராமத்தில் ஏப்., 14, 1913ல் பிறந்த வெ.நாராயணன் முதுபெரும் எழுத்தாளர். இளமை முதலே அரசியல், இலக்கியம், கலைத் துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டதால், அவையே பின்னர் அவரை எழுத்தாளராக்கியது. கலை இலக்கியத்துறை பேரறிஞர்கள் பலரைக் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து, இலக்கிய மாநாடுகள் நடத்தியவர். | |
ஏராளமாகக் கூறலாம். ஒரு சுவையான சம்பவத்தை மட்டும் உதாரணத்திற்குக் கூறுகிறேன். ஒரு பிரச்னை என்று வந்தால், அந்தச் சிறு வயதிலேயே அதை வெற்றிகர மாக முடிக்கத்தக்க அளவு அவ ருக்கு ஆற்றல் இருந்தது. உடன் பழகும் சிறுவர்களுக்கும் அன் றைக்கு அவர்தான் தலைவர். டி.வி.ஆர்., இயல்பாகவே புரட்சி மனப்பான்மை உடையவர். அந் நாளில் எல்லாரும் குடுமி வைத்தி ருப்பர். நாகரிகம் வளர வளரக் குடுமி கிராப்பாக மாறிக் கொண்டே வந்தது. குடுமிக் காரர்கள் கேலிக்குள்ளாக வேண் டிய நிலை வந்தது. சிறுவர்களுக் கெல்லாம், ‘கிராப்பு வைத்துக் கொண்டால் என்ன?’ என்று ஆசை; பெரியவர்கள் எதிர்ப்போ, மிகப் பயங்கர மானது. தீண்டாமையும், ஜாதிக் கட்டுப்பாடும், ஆசாரங்களும் தலைவிரித்தாடிய காலமது. கிராப்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்று வெளிப்படை யாகச் சொல்லும் துணிச்சல் யாருக்கும் வந்ததில்லை.
அந்நாளில் ஊருக்கு, தெரு வுக்கு, ஜாதிக்கு என்று தனித்தனி முடி திருத்தும் கலைஞர்கள் உண்டு. அவர்கள் பெரியவர் களின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட வர்கள். இவர்களில் மேல் ஜாதிக்கு வேலை செய்யக்கூடிய வர்கள், கீழ்ஜாதிக்கு வேலை செய்யக்கூடியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வும் உண்டு. கிராமத்துச் சிறுவர்களுக்குக் கிராப்பு வைத்துக்கொள்ள ஆசை. இது பற்றித் தலைவர் டி.வி.ஆரைக் கலந்தாலோசித் தோம். ஒரு முடிவு எடுக்கப்பட் டது. இதை ஏற்று நடத்தி வைத் தவரே டி.வி.ஆர்., தான்.
எல்லாச் சிறுவர்களும் ஒன் றாகக் கிராப்பு அடித்துக் கொண்டுவிட்டால், பெரியவர்களின் எதிர்ப்பு, கோபம் எல்லாம் கொஞ்சம் நேரத்திற்கு இருக்கும். அப்புறம் சமாளித்து விடலாம் என்பதுதான் டி.வி.ஆர்., எடுத்த முடிவு. இதுபற்றி உள்ளூர் முடி அலங்காரக் கலைஞரை அணுகியபோது அவர்கள், ‘எங்களுக்கு வேண்டாம் இந்தப் பொல்லாப்பு’ என்று மறுத்துவிட்டனர். பின் வேறு ஒரு முடி அலங்கார கலைஞர் ஏற்பாடு செய்யப்பட்டார். அவர் சிலோன் போய் வந்தவர். அதனால், தைரியமாக ஒப்புக் கொண்டார்.
ஒரு நாள் காலை, சொல்லி வைத்தபடி எல்லாரும் தெருவுக்குப் பின்பக்கமாக உள்ள ஒரு குளத்தில் கூடினோம். முடி அலங்கரிப்பவ ரும் சதிபண்ணாமல் வந்து சேர்ந்தார். சாதாரணமாக அப்போது ஆளுக்கு ஒரு அணா, இரண்டு அணாதான் கூலி தருவது வழக்கம். ஆளுக்கு நாலு அணா வைத்துக் கொடுத்தோம். எல்லாக் கிராப்பும் பத்து மணியோடு நிறைவேறியது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒளிந்து, ஒவ்வொருவராக ஆற்றங்கரைக்குப் போய்க் குளித்துவிட்டு வந்தோம். எப்படியோ சமாளித்து நடுங்கியபடி வீடு போய்ச் சேர்ந்தோம். எதிர்பார்த்த திட்டிற்கும், கூப்பாட்டிற்கும் குறைவில்லை.
டி.வி.ஆருடைய தாத்தா வெங்கடபதியுடைய வசவுதான் மிகவும் கோரமாக உச்சத்தில் இருந்தது. அவர் மகா கோபக்காரர். கண்டிப் பானவர். தெருவில் அவரைக் கண்டால் எல்லாரும் பயப்படுவர். அவர் எதிர்ப்புத்தான் அதிகமாக இருந்தது. காலப்போக்கில் எல்லாம் சரியாகப் போய்விட்டது. ‘எல்லாரும் ஒன்றாகச் செய்து கொண்டு விட வேண்டும்’ என்ற டி.வி.ஆரின் யோசனைதான் அந்த வெற்றிக்குக் காரணம் என்றார். வெ.நாராயணன் கூறுவதில் இருந்து, நமக்கு டி.வி.ஆரின் இளமைக்கால குணங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. முதலாவது, தனது வயது ஒத்த மாணவர்களிடையே அவர் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். ஒரு தலைவன் தனது அணியினருக்கு ஏற்படும் சிக்கல்கள் தீரச் சரியான வழியைக் காட்ட வேண்டும். வழி காட்டுவதோடு, அந்த வழி வெற்றி தேடித் தரத்தக்கதாகவும் இருக்க வேண்டும். இரண்டு குணங்களும் இல்லாத ஒருவனால் தலைமைப் பீடத்தில் இருந்திருக்க முடியாது.
இதே குணங்களால் டி.வி.ஆர்., பிற்காலத்தில் பல பெரிய சாதனைகளைச் செய்துள்ளார். அவரது இளமைக்கால வாழ்க்கை லட்சியங்கள் கொஞ்சமல்ல. . . மிக அதிக வித்தியாசமானதாகவே இருந்துள்ளது என்பதைப் பின்னர் தெரிந்துகொள்ளப் போகிறோம். கோட்டார் உயர்நிலைப்பள்ளியில் 1925ல் தாங்கள் ஒன்றாகப் படித்ததாக கூறிய, தேரூர் பிரபல டாக்டர் முத்துக்கருப்ப பிள்ளை, அந்தக் காலத்திலேயே விளையாட்டில் டி.வி.ஆருக்கு தனி ஆர்வம் இருந்தது. சிறந்த டென்னிஸ் வீரர் என்றார். டென்னிசில் அதிக ஆர்வம் இருந்ததாக நகர சபைத் தலைவர், எம்.எல்.ஏ., போன்ற பதவிகளில் இருந்த அனந்தராமன் கூறினார். |
திருமணத்திற்குப் பின் டி.வி.ஆர்., பல பொதுக் காரி யங்களில் தீவிரமாக ஈடுபட் டார். திருமணத்திற்கும் அவ ரது பொதுக் காரியங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவரது வாழ்க்கை முறைகளைச் சரியாக சொல்லக்கூடியவர்கள் நமக்குக் கிடைக்காதது ஒரு பெரும் குறையே. ஒன்றை மட்டும் நாம் நிச்சயமாக ஊகிக்க முடிகிறது. இளமைக் காலத்தில் இருந்தே டி.வி.ஆர்க்குத் தாம் பிறந்து வளர்ந்த இந்தச் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் கனன்று கொண்டிருந் திருக்கிறது. இதைப் பின்னால் உள்ள வாழ்க்கை நிகழ்ச்சிகள் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன.
அதில் மிகவும் முக்கியமானது ஜாதி உயர்வு தாழ்வுகளை நீக்கப் பாடுபட்டாக வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றுள்ளது. தான் தன் சொந்தக் காலில் நிற்கும் நிலைக்கு வராத நிலையில் இவற்றைச் செய்வது சரியல்ல என்றும் அவர் எண்ணி இருக்கிறார். வெகு விரைவிலேயே அவர் தனது திறமையால், தன் காலில் பலமாக நிற்கவும் தொடங்கி விட்டார். அந்த நிலை வந்ததும், தனது சமூகப் பணிகளைத் தீவிரமாக செயலாக்கத் தொடங்கி உள்ளார். அதில் முக்கிய பங்கு வகிப்பது அரிஜன முன்னேற்றப் பணிகளாக இருப்பதால் அதைப் பற்றி முதலில் பார்த்துவிடுவோம்.
Advertisement
Advertisement