/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
ஜம்மு - லடாக் - மணாலி: தன்னந்தனியே ஒரு போலீஸ் வீடியோகிராபரின் பயணம்
/
ஜம்மு - லடாக் - மணாலி: தன்னந்தனியே ஒரு போலீஸ் வீடியோகிராபரின் பயணம்
ஜம்மு - லடாக் - மணாலி: தன்னந்தனியே ஒரு போலீஸ் வீடியோகிராபரின் பயணம்
ஜம்மு - லடாக் - மணாலி: தன்னந்தனியே ஒரு போலீஸ் வீடியோகிராபரின் பயணம்
PUBLISHED ON : அக் 30, 2024

மரமில்லா மலைகள்... கரடுமுரடு சாலைகள். பயம் காட்டும் பனிபள்ளத்தாக்குகள்.. பார்க்க இருக்குது ஏராளம்.. பார்த்துவிட்டால் மனசு லேசாகும்.. என திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கையின் கொடையை ரசிக்க மனது லயிக்கும் எண்ணற்ற இடங்கள் இந்தியாவில் இருந்தாலும், அத்தனை அழகையும் ஒருங்கே கொண்ட இடம் ஜம்மு, லடாக், மணாலி என்கிறார் மதுரையில் போலீஸ் வீடியோகிராபராக பணிபுரியும் திருப்பதிகாந்தி. தனிமையாக சுற்றுலா சென்று படங்களை 'சுட்டு' வருவதில் ஆர்வம் கொண்டவர். இவரது அண்மை பயணம் குறித்து நம்மோடு பகிர்கிறார்...
நான் முதலில் இமயமலை பேஸ்கேம்ப் செல்ல தான் முடிவு செய்தேன். தரைமட்டத்திலிருந்து 17500 அடி உயரத்தில் உள்ள பேஸ்கேம்ப் சென்றால் அங்கிருந்து இமயமலை ஏறலாம். ஆனால் அதற்கான செலவு ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும் என தெரிந்ததால் அந்த முடிவை கைவிட்டேன்.
பின்னர் அதே உயரத்தில் த்ரில் பயணம் செய்ய லடாக், மணாலியை தேர்வு செய்தேன். அதற்கு பட்ஜெட் ரூ.60 ஆயிரத்திற்குள் முடிந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே.
அலுவலகத்தில் விடுமுறை எடுத்து கிளம்பினேன். மதுரை டூ சென்னை 'வைகை எக்ஸ்பிரஸ்'. சென்னை டூ டில்லி 'தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்'. டில்லியில் ஒரு நாள் உள்ளூர் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு, அங்கிருந்து ரயிலில் ஏறி ஜம்முவில் இறங்கினேன்.
பெயருக்கு ஏற்றாற்போல் ஊரும் குளுகுளுவென 'ஜம்மென்று' இருந்தது. அங்கிருந்து ஸ்ரீநகருக்கு பஸ் பயணம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 30 பேருக்கு மேல் இருந்தால் தான் பஸ் கிளம்பும். அதனால் அங்கிருந்து ஷேர்டாக்ஸியில் (ரூ.1200) கிளம்பினேன்.
ஸ்ரீநகர் சென்ற பின் 'தால்' ஏரி பகுதியில் உள்ள ஓட்டல்களில் ரூம்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த ஏரியில் படகு சவாரி சிறப்பானது. ஸ்ரீநகரில் ரூ. 800 முதல் ரூ.1500 வரை கட்டணத்தில் டூவீலர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அங்கிருந்து முதல் நாள் 90 கி.மீ., தொலைவில் பஹல்காம் புறப்பட்டேன்.
கையில் மேப் கிடையாது, அலைபேசியில் 2ஜி கிடைப்பதே ஒரு சில இடங்களில் தான். அதனால் கூகுள் மேப் செயல்படாது. ரோட்டின் இருபுறமும் குங்குமப்பூ விவசாயத்தை ரசித்து கொண்டே செல்லலாம். சில இடங்களில் ஆப்பிள் தோட்டங்களையும் பார்க்கலாம். இந்த ரோட்டில் தான் புல்வாமா உள்ளது. மாலை நேரத்தில் ஸ்ரீநகர் திரும்பினேன்.
மறுநாள் ஸ்ரீநகர் டூ லடாக் ஷேர்டாக்ஸியில் (ரூ.1750) கிளம்பி சென்றேன். லடாக்கில் இருந்து மீண்டும் வாடகை டூவீலரில் லே நோக்கி பயணம். பனி மூடிய மலைகள், உயரமான சிகரங்கள், கடினமான பாதைகள் மட்டுமின்றி இங்குள்ள மலையில் ஒரு மரத்தையும் பார்க்க முடியாது. ரோடு கரடு முரடாக இருக்கும். அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால் இந்த நிலை. மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் தான் இங்கு செல்ல முடியும்.
உயரமான ஏரி
இந்திய-சீனா எல்லையில் உள்ள உயரமான ஏரி பாங்காங். இந்த ஏரி நீர், நீல நிறத்தில் உள்ளதால் மனதை கொள்ளை கொள்ளும். இந்த கடல்நீர் போல் உப்பு அதிகமாக உள்ளதால் ரசிக்க மட்டுமே. லடாக் பைக் பயணத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. அதைத்தொடர்ந்து சங்கலா பாஸ் மலைப்பகுதி பயணம் செய்யும் ரோடு. கவனம் சிதறாமல் வண்டி ஓட்டவேண்டும். அதைத்தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு திகில் நிறைந்த பயணத்தை கொடுக்கும். ரோடு எங்கே செல்லும் என தெரியாது, மக்கள் நடமாட்டமே இருக்காது, இதே வழியில் 75கி.மீ., தொலைவில் சியாச்சின் உள்ளது. பனிபாறைகளால் சூழ்ந்த பகுதி. பனி மலையில் தண்ணீர் உருகி வரும் காட்சிகள் இதயத்தை பரவசப்படுத்தும்.
ரோடும் ஆறும் இந்தப்பகுதியில் சில இடங்களில் இணைந்து செல்லும், சில இடங்களில் ஆற்றின் நீரோட்டம் நமக்கு எதிராக வரும். சில பகுதிகளில் ஆற்றில் நாம் டூவீலர் ஓட்டும் நிலையும் வரும். 'லே'வுக்குள் நுழைந்ததும் நாம் குறைந்தது அரை நாளாவது ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். மறுநாள் லே வில் உள்ள அரண்மனை, புத்த மடாலயங்கள், மார்க்கெட் போன்ற இடங்களை பார்த்து ரசிக்கலாம்.
அடுத்த நாள் லே டூ மணாலி ஷேர்டாக்ஸியில் பயணம். மணாலியில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம் அவற்றுள் ஜோகினி நீர்வீழ்ச்சி, கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா, நேரு குண்ட், நாகர்கோட்டை, சோலாங் பள்ளத்தாக்கு, பிருகு ஏரி, ரோக்தாங் பாஸ் போன்ற இடங்கள் மனதில் என்றும் நிற்கும். மீண்டும் மணாலி டூ சண்டிகர் (275
கி.மீ.,) பஸ் ஏறினால், சண்டிகர் டூ மதுரை ரயில்(2 பகல், 2 இரவு பயணம்) நமக்கு தயாராக இருக்கும். 22 நாட்களில் 9000 கி.மீ., பயணம் செய்துள்ளேன்.
உடல் நமக்கு ஒத்துழைத்தால் மட்டுமே இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் அனைத்தும் சமாளிக்க தெரிந்தால் பயணம் மேற்கொள்ளலாம் என்றார்.
மேலும் அறிய 98431 97297
தண்ணீர் குடியுங்கள்
டூவீலர் பயணத்தில் வானிலையை கணிக்க முடியாது. வெப்பநிலை, வானிலையில் அடிக்கடி மாற்றங்கள் உருவாகும். ஜெர்க்கின், கையுறைகள் உள்ளிட்ட நம் உடம்பிற்கு சூடு ஏற்றும் ஆடைகளை எடுத்துச் செல்வது அவசியம். கண்ணில் நுழையும் பனி காற்றை தடுக்க சன் கிளாஸ் முக்கியம். தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும். உதடுகள் காயக்கூடாது. தரமான ஹெல்மெட், சவாரி பூட்ஸ் அவசியம். முதலுதவி பெட்டி, வைத்திருப்பது மிகவும் நல்லது.