
மேற்கு தொடர்ச்சிமலையில், ஆழியாறு அருகே கூட்டமாக வசித்தன யானைகள்.
அடிவாரம் வரை அடிக்கடி வந்து செல்லும்.
கூட்டத்தில் ஆண், பெண், குட்டி என, 10 யானைகள் இருந்தன.
அவை குட்டி யானையிடம் பாசத்துடன் கொஞ்சி மகிழ்ந்தன.
மலை அடிவாரத்தில் ஏராளமான கறிவேப்பிலை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.
குட்டி யானையிடம், 'கறிவேப்பிலையில், இரும்பு, பாஸ்பரஸ், புரோட்டின், கார்போைஹட்ரேட், கால்ஷியம் என, ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அடிக்கடி தின்றால், தெளிவான பார்வை கிடைக்கும். பகல் நேரத்திலும் கூட நிலவை பார்க்கலாம்...' என அம்மா யானை கூறியது.
ஆனால், உபதேசம் செய்த அம்மா யானைக்கு கூட, கறிவேப்பிலையை தின்னும் பழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. அதன் பார்வையும் மங்கலாகத்தான் இருந்தது.
அப்போது தான் குட்டி யானை, தாய் பால் குடிப்பதை நிறுத்தியிருந்தது.
அம்மா யானை அறிவுரைத்தபடி, கறிவேப்பிலையை காணும் போதெல்லாம் விரும்பி சுவைத்து வந்தது. மிகுந்த ஆரோக்கியமுடன் காணப்பட்டது.
ஒருநாள் -
கூட்டமாக மலை அடிவாரத்தை விட்டு நகர்ந்து வந்தன யானைகள்.
அங்கு முள்கம்பியால் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
அதற்குள், பெரிய கரும்பு தோட்டம் இருந்தது.
பசுமையுடன் வளர்ந்திருந்த கரும்பு பயிரைக் கண்டதும் அங்கு நுழைந்தன யானைகள்.
இனிமை தந்த கரும்புகளை மனம்போல் ருசித்து மகிழ்ந்தன.
யானைகள் தின்றதால் கரும்பு பயிர்கள் சேதமடைந்தன. அதை தடுக்க மின் வேலி போட்டான் தோட்டக்காரன்.
அன்று கரும்பை சுவைக்க, யானைகள் தணியாத ஆர்வத்துடன் மீண்டும் புறப்பட்டன.
தொலைவில் வந்தபோதே கரும்பு தோட்டத்தை உற்று பார்த்தபடி, 'ஆபத்து... ஆபத்து... யாரும் கம்பி வேலியை நெருங்காதீர்...' என எச்சரித்தது குட்டி யானை.
அலட்சியமாக, 'ஏய்... என்ன உளறுகிறாய்... உனக்கு அனுபவம் பத்தாது... பேசாமல் எங்களுடன் வா...' என்றது கூட்டத்தில் இருந்த மற்றொரு யானை.
பொறுமையுடன், 'என் பேச்சை கேளுங்க... தோட்டக்காரர், நம்மை தீர்த்து கட்ட ஏதோ சதி செய்திருக்கிறார். அதோ பாருங்கள்... மின் கம்பத்திலிருந்து ஒயர் வேலியோடு இணைக்கப்பட்டிருக்கிறது...' என்றது குட்டி யானை.
'அப்படி ஒன்றும் கண்களுக்கு தெரியவில்லையே...'
தோட்டத்தின் அருகில் நெருங்கி சென்றன யானைகள்.
அப்போது தான் அவற்றின் கண்களுக்கு, அந்த ஒயர் தெரிந்தது.
உடனே, ஆண் யானை ஒன்று, அருகில் கிடந்த இரும்பு கம்பியை துதிக்கையால் துாக்கியது. தோட்டத்து கம்பி வேலி மீது அதை வீசியது.
'பட்... பட்... படார்...'
பட்டாசு வெடிக்கும் சத்தத்துடன் தீப்பொறி பறந்தது.
கம்பி வேலியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதை உணர்ந்தன யானைகள்.
'நல்ல வேளை... குட்டி யானையின் கண்களுக்கு அந்த இணைப்பு ஒயர் தெரிந்திருக்கிறது. இல்லையென்றால், அனைவரும் மின்வேலியில் சிக்கி மடிந்திருப்போம்...' என்றது அம்மா யானை.
குட்டி யானைக்கு நன்றி சொல்லி கொஞ்சி மகிழ்ந்தன.
மிகவும் அமைதியாக, 'கறிவேப்பிலை தந்து உதவிய அந்த மரங்களுக்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்...' என்றது குட்டி யானை.
தவறாமல் கறிவேப்பிலையை ருசிப்போம் என உறுதி எடுத்தது யானைக் கூட்டம்.
குழந்தைகளே... உண்ணும் உணவுடன் வரும் சத்துமிக்க கறிவேப்பிலையை வீணாக்க கூடாது. அதையும் உண்டு ஆரோக்கியம் மிக்க பார்வை பெற்று தெளிவான அறிவுடன் வாழ்வோம்!
எஸ்.டேனியல் ஜூலியட்