
சென்னை, கோடம்பாக்கம், பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில், 2014ல், 10ம் வகுப்பு படித்தேன். அறிவியல் ஆசிரியையாக இருந்த ரோஸ்மேரி நற்பண்புகள் நிறைந்தவர்.
முழங்கை வரை ரவிக்கை அணிந்திருப்பார். காட்டன் புடவை உடுத்தி கம்பீரமாக வருவார். தலைமுடியை வடிவமாக்கி எழில் கொண்டை போட்டிருப்பார். மிக நேர்த்தியாக உடையணிய எங்களுக்கு கற்றுத்தந்தார்.
புத்தகத்தை கையில் எடுக்காமலே அற்புதமாக பாடம் நடத்துவார். வகுப்பில் எந்த மாணவ, மாணவியருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டார். இயல்பாக பழகுவார். தமிழ், ஆங்கில மொழி பாடங்களையும் நடத்தி பிழையின்றி எழுதவும், படிக்கவும் பயிற்சி தந்தார். உயிரியல் பாட வகுப்பில் இதயம், மூளை செயல்பாட்டை காட்சி மயமாக சித்தரித்தது மனதில் பசுமையாக உள்ளது. எப்போதும் நல்லதையே செய்ய போதித்து வழிநடத்தினார்.
எனக்கு, 25 வயதாகிறது. முகத்தை பொலிவூட்டும் அழகு கலையை சுய தொழிலாக செய்து வருகிறேன். பள்ளி ஆசிரியை ரோஸ்மேரியின் கம்பீர தோற்றமே இந்த தொழில் மீது ஈடுபாடு ஏற்பட துாண்டுதலாக அமைந்தது. வாழ்வின் மேன்மைக்கு முன்மாதிரியாக அமைந்தவரை போற்றுகிறேன்.
- எம்.நிர்மதி, சென்னை.