sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வேழமலைக்கோட்டை! (9)

/

வேழமலைக்கோட்டை! (9)

வேழமலைக்கோட்டை! (9)

வேழமலைக்கோட்டை! (9)


PUBLISHED ON : ஏப் 27, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 27, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசர் மாயமானதாக தகவல் வந்தது. நாட்டின் எல்லையில் எதிரி நடமாட்டம் அதிகமாகியது. எதிரிகளை முறியடிக்க நடந்த முயற்சிகள் தோல்வியை தந்தன. இதையடுத்து, போர் நடவடிக்கை துவங்கியது. இனி -

தனி ஆலோசனைக்காக அமைச்சர், ராஜகுரு, வைத்தியர் மற்றும் தளபதி கூடியிருந்தனர்.

தளபதியிடம், 'என்னென்ன ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன...' என்று கேட்டார் ராஜகுரு.

'ஆயுதப் பட்டறையில், ஈட்டி, அம்பு என, போர் ஆயுத தயாரிப்பை, மூன்று மடங்காக்கி உள்ளேன். திடகாத்திரமான இளைஞர்களை படையில் சேர்க்க அறிவிப்பு கொடுத்துள்ளேன்...'

'முழு படையும், தயாராக எத்தனை நாட்கள் தேவைப்படும்...'

தகவல் அறியும் விதமாக கேட்டார் ராஜகுரு.

'வீரர்களுக்கு உணவு, தண்ணீரை கிடங்குகளில் சேமிக்க ஏற்பாடு செய்தாயிற்று. குதிரை, யானை படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன...'

'சிறப்பு...'

பாராட்டினார் அமைச்சர்.

'வில், வேல் மற்றும் வாள் திறம்பட கையாளும் வீரர்கள் தினமும், மூன்று வேளை பயிற்சி மேற்கொள்கின்றனர்...'

விவரித்தார் தளபதி.

'போர் வீரர்களின் காயங்களுக்கு, சிகிச்சை செய்ய வைத்தியக் குழுவும் தயார் நிலையில் உள்ளது...'

குறுக்கிட்டு தகவல் அளித்தார் வைத்தியர்.

'வீரர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி சேவை செய்வோர் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்துள்ளேன்...' என்றார் அமைச்சர்.

'நான் குறிப்பிட்டது போல், ஐந்து நாளில் நம் படை ஒருங்கிணைக்கப்பட்டு விடும்...'

உறுதியளித்தார் தளபதி.

சிறிது நேரம் அங்கு, அமைதி நிலவியது.

ஆழ்ந்த சிந்தனையில் இருந்து, மெல்ல நிமிர்ந்தார் ராஜகுரு.

'படை தயாராக இருக்கட்டும். அதற்கு முன், ஒரு சில ஆயத்த பணிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது...'

'ராஜகுருவே... அது என்னவென்று கூறுங்கள்...'

'வீரர்கள் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதை பார்த்தால், எதிரிகள் தரப்பில், 500 வீரர்களாவது காட்டுக்குள் இருப்பர் என எண்ணுகிறேன்...'

'இருக்கலாம் ராஜகுருவே...'

ஒப்புக் கொண்டார் தளபதி.

'அவர்கள் எங்கு, முகாமிட்டுள்ளனர் என்பதை, முதலில், கண்டுபிடிக்க வேண்டும்...'

'அதற்கு, இரண்டு வழிகள் இருக்கிறது ராஜகுருவே...' என்றார் தளபதி.

'குறிப்பிடுங்கள்...'

'ஒன்று, எதிரிகள், நம் காட்டின் அடர்ந்த பகுதியில் முகாம் அமைத்திருக்க வேண்டும். இல்லையேல், கோட்டைக்கு தென் பகுதியில் உள்ள களநில நாட்டில் ஆங்காங்கே சிறு, சிறு குழுக்களாக முகாமிட்டு இருக்க வேண்டும்...'

'அமைச்சரே... களநில நாட்டிலுள்ள நம் ஒற்றர்களிடமிருந்து ஏதாவது தகவல் வந்ததா...' என்றார் ராஜகுரு.

'வழக்கமான ஒற்றுத் தகவல்கள் வருகின்றன. பிற நாட்டு வீரர்களின் நடமாட்டம், உணவு சேகரிப்பு போன்றவை நடப்பதாக இதுவரை தகவல் இல்லை...'

'அப்படியென்றால் எதிரிகள், காட்டுக்குள் தான் முகாமிட்டுள்ளனர். நம் வீரர்களை அனுப்பி, அவர்களுடைய முகாம் எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் தளபதி...'

'அதற்கு வீரர்களை அனுப்புவது அத்தனை உசிதமாக இருக்காது. வீரர்களின் உடலிலுள்ள காயங்கள், வாள் பயிற்சி பெறும் போது கையில் ஏற்படும் தழும்புகள், ஆயுதங்களை பிடித்து காய்ப்பேறிய உள்ளங்கைகளை வைத்து, எதிரிகள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வர்...'

'சரி தான். வேறு ஏதாவது, மாற்று வழி உண்டா...'

'வயது முதிர்ந்த ஆண், பெண் என, ஒரு சிலருக்கு நன்கு பயிற்சி அளித்து காட்டுக்குள் அனுப்பலாம்...'

'இது நல்ல யோசனை. உடனே, செயல்படுத்துங்கள்...' என்றார் ராஜகுரு.

'காட்டின் அமைப்பை நன்கு அறிந்தவர்கள் தான் இந்த பணியை செய்ய முடியும். விறகு பொறுக்குவோர், தேன் எடுப்போர் மற்றும் மூலிகை சேகரிப்போர் என, ஒரு சிலரை அடையாளம் கண்டுள்ளேன்; அவர்களுக்கு பயிற்சி அளித்து உடனே காட்டுக்குள் அனுப்பலாம்; அவர்கள், குழுக்களாக பிரிந்து, காடு முழுதும் அலசி தகவல் கொண்டு வரட்டும்...'

'நிச்சயம், முதியவர்கள், பெண்களை சிறைப் பிடிக்க மாட்டார்கள் எதிரிகள். முகாம் அமைத்திருக்கும் எதிரிகளை அறிந்து வந்து தகவல் அளிப்பர்; அந்தப் பணியை நான் ஏற்கிறேன்...' என்றார் அமைச்சர்.

ஆலோசனை முடித்த பின், மன்னரை காண வந்தனர்.

'மன்னா... படைத்தலைவர்கள், துணைத் தலைவர்களிடம் விபரம் தெரிவித்து, படையை ஒருங்கிணைக்க, போர் எச்சரிக்கை பிரகடனம் செய்ய, இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்த போகிறோம்...'

ராஜகுரு கூறியதை கேட்டு ஒப்புதலாக தலையசைத்தார் மன்னர்.

'போர் எச்சரிக்கை பிரகடன கூட்டத்தில், நானும் கலந்து கொள்கிறேன்...'

சற்று உறுதியான குரலில் தெரிவித்தார் மன்னர்.

'உங்கள் உடல்நிலை சரியில்லையே...'

'ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு, என் உடல்நிலை தாங்காதா என்ன...'

வைத்தியரை நோக்கினார் மன்னர்.

'அனுமதிக்கலாமா அல்லது நிராகரிக்கலாமா'

கூட்டாளிகள் முடிவு தெரியாததால், தயங்கினார் வைத்தியர்.

'மன்னா... நீங்கள், நீண்ட நாட்களாக படுக்கையில் இருக்கிறீர் அல்லவா... தர்பாரில், சிம்மாசனத்தில், நீண்ட நேரம் அமர சிரமமாக இருக்குமே...'

தேனுாற பேசினார் வைத்தியர்.

'மன்னர், என்ன சொல்லப் போகிறார்' என்ற எதிர்பார்ப்பில் மூழ்கி நின்றனர் வைத்தியர் உட்பட மூவரும்.

- தொடரும்...

ஜே.டி.ஆர்.







      Dinamalar
      Follow us