PUBLISHED ON : ஆக 02, 2026

ஆகஸ்ட் 7 - தேசிய கைத்தறி தினம்
நம் நாட்டின் கலாச்சாரம், கலை மற்றும் உழைப்பின் அடையாளமாக திகழ்வது, கைத்தறித் தொழில். இயந்திரமயமான உலகில், மனிதக் கரங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகளால் உருவான கைத்தறி ஆடைகளின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 7ம் தேதி, தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தத் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மிக முக்கியமான வரலாற்று சிறப்பு உண்டு. ஆகஸ்ட் 7-, 1905ல், கல்கத்தா நகர மண்டபத்தில், 'சுதேசி இயக்கம்' முறையாக துவங்கப்பட்டது.
வெளிநாட்டு துணிகளை புறக்கணித்து, உள்நாட்டு தயாரிப்புகளை, குறிப்பாக, கைத்தறி ஆடைகளை ஆதரிக்க வேண்டும் என்ற அந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், 2015-ல், கைத்தறி தினத்தை துவக்கி வைத்தார், பிரதமர் நரேந்திர மோடி.
இயந்திர துணிகளை விட, கைத்தறி ஆடைகள் அதிக உறுதியும், மென்மையும் கொண்டவை. கோடை காலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியையும், குளிர் காலத்திற்கு ஏற்ற வெப்பத்தையும் இவை வழங்கும்.
காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, திருபுவனம் பட்டு, மதுரை சுங்குடி சேலை, சென்னிமலை போர்வைகள் போன்றவை உலக அளவில் தமிழகத்தின் கைத்தறித் திறமையைப் பறைசாற்றுகின்றன.
கைத்தறித் தொழில், இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் கலை வடிவம். காஷ்மீரின் பஸ்மினா சால்வைகள் முதல் தென்னிந்தியாவின் பட்டுச் சேலைகள் வரை ஒவ்வொன்றும் அந்தந்தப் பகுதியின் நிலவியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தை சுமந்து நிற்கின்றன. இந்திய கைத்தறி ஆடைகள், உலகளாவிய அங்கீகாரத்தை பெற்று வருகின்றன. இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், பாரம்பரியத் தறிகளில் நவீன வடிவமைப்புகளும், மேலைநாட்டுப் பாணி உடைகளும் தற்போது அதிகளவில் நெய்யப்படுகின்றன.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இரண்டாவது பெரிய துறை கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆகும்.
இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். எனவே, கைத்தறியை ஆதரிப்பது, பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும் நேரடியாக வழிவகை செய்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் நெசவாளர்களுக்கென, முத்ரா கடன் திட்டங்கள், நுால் மானியம், காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தி வருகின்றன. இத்தகைய முன்னெடுப்புகள், பாரம்பரியக் கலை அழிந்துவிடாமல், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதை உறுதி செய்கின்றன.
போலி தயாரிப்புகளிலிருந்து கைத்தறியை பாதுகாக்க புவிசார் குறியீடு வழங்கப்பட்டு, தரம் உறுதி செய்யப்படுகிறது. மக்கள் அசல் கைத்தறி ஆடைகளை அடையாளம் காண கைத்தறிச் சின்னம் உதவுகிறது. கைத்தறி ஆடைகளை நாம் வாங்கும்போது, அது, ஏழை நெசவாளர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது.
நம் கலாசாரத்தின் வேர்களைக் காக்க, விசேஷ நாட்களில் மட்டுமன்றி, அன்றாட வாழ்விலும் கைத்தறி ஆடைகளை அணிய நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
ரோஜாதேவி
