
அவர்களையும் முன்னேற வைப்போமே!
எங்கள் வீட்டு மாடி போர்ஷனில் குடியிருக்கும் தம்பதி, வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் வீட்டு வேலைக்கு உதவியாக, பணிப்பெண் ஒருவர் வந்து தங்கியிருந்தார்.
ஒருநாள் மாலை, என் வீட்டுக்கு, அப்பணிப் பெண்ணோடு வந்த, மாடி போர்ஷன் தம்பதி, 'கேக்' கொடுத்து, பணிப்பெண்ணை வாழ்த்துமாறு கூறினர்.
'எதற்கு வாழ்த்து?' என்றேன்.
'பிளஸ்- 2 முடித்தவுடன், கையோடு, குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைக்கு வந்தார். எங்கள் வீட்டில், வேலை நேரம் போக, 'ஆன்லைனில்' தொழிற்பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்து தந்தோம்; அதை முடித்து, சான்றிதழும் பெற வைத்துள்ளோம்...' என்றனர்.
அதைக்கேட்ட எனக்கு, மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
பணிப்பெண்ணை, தங்கள் சுயநலத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு மத்தியில், அவளின் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டிய அவர்களை மெச்சினேன். பணிப்பெண்ணையும் மனதார வாழ்த்தினேன்.
வாசகர்களே... வீட்டுப் பணியாளர்களுக்கு, கைத்தொழில் கற்க உதவுதல், மேற்படிப்பு பயில உதவுதல், அவர்களின் பிறந்தநாள் மற்றும் மண நாளில், பரிசளித்து வாழ்த்து தெரிவித்தல் என, பல்வேறு வகையில், அவர்களுக்கு ஊக்கமும், உயர்வும் தரும் செயல்களை செய்யலாமே!
-வீ.குமாரி, சென்னை.
உறவினர் வீட்டுக்கு செல்லும் போது...
ஊரிலிருந்து எங்கள் வீட்டுக்கு வரும்போது, போன் செய்தார், உறவினர்.
'நான், வழியில் பேக்கரி ஒன்றில் உள்ளேன். பிள்ளைகளுக்கு என்ன
ஸ்வீட் பிடிக்கும், பெரியவர்களுக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்...' என்ற விபரங்களை கேட்டார்.
'ஒன்றும் வாங்க வேண்டாம்; வாருங்கள்...' என்றேன்.
மறுத்த அவர், பிள்ளைகளிடம் போனை தர சொன்னார்.
பிள்ளைகளிடம் நலம் விசாரித்தபோது, ஸ்வீட் பட்டியலை அடுக்கினர். அத்தோடு, நாங்கள் என்ன விரும்பி சாப்பிடுவோம் என்பதை பிள்ளைகளிடம் கேட்க, அவர்களும் புட்டு புட்டு வைத்தனர்.
கொஞ்ச நேரத்தில் பெரிய, 'பார்சலுடன்' ஆட்டோவிலிருந்து இறங்கினார், உறவினர்.
'ஏன் இவ்வளவு காசு செலவு செய்து, வாங்கி வந்துருக்கீங்க...' என்றேன்.
'நான், 500 கி.மீ., துாரத்திலிருந்து வரேன். வீட்டில் பிள்ளைகள் இருக்கின்றனர். கை வீசி வந்தால் நன்றாக இருக்குமா? ஏனோ தானோன்னு ஸ்வீட் வாங்கி வர எனக்கு உடன்பாடு இல்லை.
'ஏனென்றால், இப்போதுள்ள பிள்ளைகள் பழங்கால ஸ்வீட் வகைகளை விரும்பி சாப்பிடுவதில்லை. பெரியவர்களும் உடல் நிலையை காரணம் காட்டி, சில ஸ்வீட்ஸ்களை தவிர்க்கின்றனர்.
'கடமைக்கு என வாங்கி வந்தால், அது குப்பைக்கு போய் விடும். ஆதலால், விருப்பம் அறிந்து ஸ்வீட் வாங்கி வந்தேன். பிள்ளைகளும் உறவு முறை சொல்லி, அவர் வாங்கி வந்த ஸ்வீட் நன்றாக இருந்தது என, தொடர்ந்து கூறுவர்.
'இதனால் பிள்ளைகளும், உறவினரை மறக்காமல், மேலும் மேலும் அன்பு, பாசம் காட்டுவர்...' என்றார்.
அவரது வித்தியாசமான சிந்தனையை பாராட்டினேன்.
என்ன வாசகர்களே... உறவினர் வீட்டுக்கு செல்லும்போது, அவர்கள் விருப்பம் அறிந்து, தேவையானதை மட்டும் வாங்கிச் செல்வோமே!
கே.புனிதா, கோவை.
அன்பளிப்பு என்றால் என்ன?
ஒரு பழக்கடையில், எனக்கு முன் ஒருவர், ஆப்பிள் எவ்வளவு மாதுளை எவ்வளவு என, ஒவ்வொரு பழங்களின் விலையையும் கேட்டார்.
பின், கடைக்காரரிடம், 'அன்பளிப்பா கொடுக்கணும்; நீங்களே,
'பேக்' பண்ணி தந்திடுங்க...' என்று, எந்த டிசைன் தட்டு என்பதை தேர்வு செய்து, 'ஆப்பிள், மாதுளை இரண்டையும் பேக் பண்ணுங்க...' என்றார்.
'அம்மா, வரிசை வைக்க தானே, 'இந்த பழம், 200 ரூபாய்னா, அது, 150 ரூபா தான். அவங்க இதை சாப்பிட போறாங்களா, யார் கொடுத்தாங்கன்னு பார்க்க போறாங்களா...
'தட்டை எடுத்து வைச்சிட்டு, பழங்களை எல்லாம் வர்றவங்களுக்கு கொடுக்கப் போறாங்க. அதனால, 150 ரூபாய் பழத்தையே வாங்கிக்கோங்கம்மா. இந்த பழங்களின் சுவை, கம்மியாக இருக்கும்...' என்றார்.
'என்னங்க, ஒரு கர்ப்பிணி பெண்ணின் வளைகாப்புக்கு கொடுக்கப் போறேன். அவங்க சத்துள்ள பழங்களை சாப்பிடணும்ன்னு நினைக்கிறேன். நாம கொடுக்குற பொருள் அடுத்தவங்களுக்கு உபயோகமா இருக்கணும். அதை விட்டு, ஏனோதானோன்னு கொடுக்க கூடாது.
'என்றைக்குமே, நம் அன்பு மாதிரி, பழங்களோட சுவையும் அதிகமா இருக்கணும். காசு அதிகமா இருந்தாலும் பரவாயில்லை; நல்ல தரமான பழங்களா, 'பேக்' பண்ணுங்க. எனக்கு மட்டும் இதை சொல்லல, யார் வந்து கேட்டாலுமே அன்பளிப்புன்னா அன்பை கொடுக்கிறது. அதனால, இந்த மாதிரி வேலையை செய்யாதீங்க...' என்று சொல்லி, அதற்கான பணத்தை நீட்டினார்.
அன்பளிப்பு என்பது, அன்பை அளிப்பது தானே. தரமான பொருட்களையே நம் அன்பின் அடையாளமாக அடுத்தவருக்கு கொடுப்பது என்பதை அந்நிகழ்வின் மூலம் புரிந்து கொண்டேன்.
வசந்தி, திண்டிவனம்.