
அன்புள்ள சகோதரிக்கு —
நான், 48 வயது பெண். கணவர் வயது: 54. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நான், 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தனியார் வங்கி ஒன்றில், கடைநிலை ஊழியராக இருந்தார், கணவர். எங்களுக்கு, இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள்.
கணவருக்கு சம்பளம் குறைவு என்பதால், ஒயர் கூடை பின்னுவதை கற்று, வீட்டிலிருந்தபடியே கூடை பின்னி, விற்று, ஓரளவுக்கு குடும்ப செலவை சமாளித்தேன்.
கணவரோ முன் கோபி. ஆணாதிக்கம் கொண்டவர். என்னையும், குழந்தைகளையும் கடுமையாக பேசி, படாதபாடு படுத்துவார். அவரையும் சமாளித்து, குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது என, பொத்தி பொத்தி வளர்த்தேன்.
ஒருநாள், வங்கியில் இருந்தபோது, கணவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக, எனக்கு தகவல் கூறினர்; அலறி அடித்து ஓடினேன்.
'மூளையில் ரத்தக் குழாய் பாதித்து, கோமா நிலையை அடைந்து விட்டார். பிழைக்க, 30 சதவீதம் தான் வாய்ப்பு உள்ளது. அதற்கு தொடர் சிகிச்சை செய்ய வேண்டும். நிறைய செலவாகும்...' என்றனர், மருத்துவர்கள்.
என்னாலும், என் பெற்றோராலும் பணம் செலவழிக்க முடியாத நிலை. என் மகன் அப்போது, 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். வங்கியிலிருந்து என் கணவருக்கு கிடைத்த, 'செட்டில்மென்ட்' தொகை, மருத்துவ மனைக்கு கட்டவே சரியாகி விட்டது.
டாக்டர்கள் அறிவுறுத்தல்படி, கணவரை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். அடிக்கடி வந்து, 'செக்-அப்' செய்து கொள்ள கூறினார், டாக்டர்.
நாங்கள் இருந்ததோ வாடகை வீடு. 'இனி எப்படி மாதாமாதம் வாடகை கொடுப்பீங்க. காலி செய்து விடுங்கள்...' என்றார், வீட்டு உரிமையாளர்.
எப்படியாவது வாடகை கொடுத்து விடுவதாக, நான் கெஞ்சி கேட்டு, அனுமதி வாங்கினேன். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, ஆளாக்கி விட வேண்டும் என, வைராக்கியம் கொண்டேன்.
கணவர் பணிபுரிந்த வங்கியின் மேனேஜரை சந்தித்தேன்.
'உங்கள் வங்கியில், நிறைய பேர் வெளியூரில் இருந்து வந்து, தனியாக தங்கி, ஹோட்டலில் சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளார், கணவர். அவர்களுக்கு நான் சமைத்து தர அனுமதி கிடைக்குமா?' என்றேன்.
'உங்கள் சமையல் அவர்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. எதற்கும் கேட்டுப் பார்க்கிறேன்...' என்றார், மேனேஜர்.
அடுத்த நாள், என்னை அழைத்து, 'இரண்டு நாட்களுக்கு சமைத்து தாருங்கள். சுவை பிடித்திருந்தால், அப்புறம் கூறுவர்...' என்றார்.
அவரிடமே கொஞ்சம் முன் பணம் வாங்கி, சமையல் செய்து கொடுத்தேன். என் வீட்டு சாப்பாட்டின் ருசி பிடித்துவிட, என்னிடமே சமைத்து தர கூறினர், பலர். தனித்தனி கேரியரில், என் மகனிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பினேன்.
இதற்கிடையில், தினமும் கணவர் அருகில் அமர்ந்து, அன்று நடந்த விஷயங்களை அவர் கேட்கிறாரோ இல்லையோ, சொல்ல ஆரம்பித்தேன்.
'ஜடமாக இருப்பவருக்கு என்ன கேட்கும்...' என, கிண்டல் செய்தனர், மகன்கள்.
குடும்பம் ஓரளவுக்கு முன்னேற ஆரம்பித்தது. கல்லுாரியில் படித்து முடித்து என், 'கேட்டரிங்' வேலைக்கு வந்து விட்டான், மூத்த மகன். மகள்கள் இருவரும் கல்லுாரியில் சேர்ந்தனர்; இன்னொரு மகன், பொறியியல் படிக்கிறான்.
வங்கியில் மட்டுமின்றி, வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் எங்களது வாடிக்கையாளர்களாக மாறினர். இடப்பற்றாக்குறையால் வீட்டு உரிமையாளரிடம் கூறி, பக்கத்து போர்ஷனையும் வாடகைக்கு எடுத்தேன். இரண்டு பேரை உதவிக்கு வைத்துக் கொண்டேன். தனியாக, மெயின் ரோட்டில் சிறிய அளவில், ஹோட்டல் ஆரம்பித்தான், மகன்.
கணவரை அவ்வப்போது, மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்று வருகிறோம்.
மகனுக்கும், மகள்களுக்கும் திருமணம் செய்ய வேண்டியுள்ளது. மகளுக்கு, இரண்டு இடத்தில் இருந்து வரன் வந்தும், கணவரின் நிலையை பார்த்து பின்வாங்குகின்றனர்.
'இவரை ஜடமாக வைத்திருப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. டாக்டரிடம் கேட்டு, ஏதாவது ஒரு முடிவு எடும்மா...' என்கிறான், மூத்த மகன்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல ஆலோசனை தாருங்கள், சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
கோமா கணவரின் மருத்துவச் செலவு, உன் குடும்பத்தை மீளமுடியாத கடனாளி ஆக்கி விடக் கூடாது. அவரால், உன் குழந்தைகளின் எதிர்காலம், பாழாகிவிடக் கூடாது. கோமாவுக்கு முன்னும் கோமாவுக்கு பின்னும் கணவரால் இமாலய சிரமங்கள் தொடர வேண்டுமா?
'சென்டிமென்ட்' பார்த்து, கணவர் எனும் காய்கறி குவியலை பாதுகாக்காதே. டாக்டரிடம் கலந்தாலோசித்து, அடுத்து என்ன செய்வது என்று கேள்.
கோமாவிலிருந்து கணவர் மீள்வதற்கான சாத்தியக்கூறுகளை கேட்டறிந்து கொள்.
நீயும், உன் நான்கு குழந்தைகளும் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு போங்கள். குடும்பத்தின் பொது நன்மைக்காக, குடும்பத்து பெரியவரின் கோமா மருத்துவத்தை அறவே நிறுத்துவதாகவும், இதில் ஏதேனும் குற்றம் இருந்தால் மன்னிக்கும்படியும் வேண்டுங்கள்.
ஒரு சுபயோக தினத்தில், கணவருக்கு புகட்டும் மருந்துகளை நிறுத்து. வாய்வழி மருந்துகளும், மருத்துவம் இல்லாமலும், ஓரிரு வாரங்களில் இறந்து விடுவார், கணவர். மருத்துவம் புறக்கணித்து கணவர் இறக்க அனுமதித்தாய், அவ்வளவு தான்; துளியும் குற்ற உணர்ச்சி தேவையில்லை.
மகன், மகள்களின் எதிர்காலத்தை கவனி. பேரன் - பேத்திகளுடன் விளையாடும் பொழுதுக்காக காத்திரு, இரும்புப் பெண்ணே!
— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.