
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 32 வயது பெண். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவள். எனக்கு ஒரு அண்ணனும், ஒரு தம்பியும் உள்ளனர். நான் பி.எட்., படித்து, அரசு பள்ளி ஒன்றில் வேலை செய்கிறேன்.
அண்ணன், தொழிற்சாலை ஒன்றில், 'போர்மேன்' ஆக பணிபுரிகிறார். தம்பி, இன்ஜினியரிங் படிக்கிறான். அண்ணன் சம்பளம், குடும்பம் நடத்தவே சரியாக இருக்கும். எனவே, தம்பியின் படிப்பு செலவை, நான் ஏற்றுக் கொண்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், என்னை பெண் கேட்டு, ஒரு வரன் வந்தது. படித்தவர், நல்ல வேலையில் உள்ளவர் என்ற காரணத்துக்காக, அவருக்கு என்னை திருமணம் செய்து வைத்தார், அண்ணன்.
பிறந்த வீட்டில் இருந்தவரை, வீடு, பள்ளிக்கூடம், வீட்டு வேலை என்று மட்டுமே இருந்து வந்தேன். பெற்றோர் இல்லாவிட்டாலும், அண்ணன், தம்பியுடன் சந்தோஷமாக இருந்தேன்.
திருமணத்துக்கு முன்பே, 'தம்பியின் படிப்பு செலவை நான் ஏற்றுள்ளேன். அவன் படிப்பு முடியும் வரை, என் சம்பளத்தில் ஒரு பகுதியை, அவனுக்கு கொடுக்க விரும்புகிறேன்...' என, கணவரிடம் கூறி, சம்மதம் வாங்கி இருந்தேன்.
ஆனால், திருமணத்துக்கு பின், மாமியாரின் சொல் கேட்டு, அப்படியே மாறிவிட்டார், கணவர்.
கணவருக்கு ஒரு தங்கையும் உண்டு. இன்னும் திருமணமாகவில்லை. அவளுடன் நான், அன்பாக தான் பழகினேன். ஆனால் அவளோ, என்னைப் பற்றி, என் கணவரிடம் ஏதேதோ சொல்லி பிரிவு ஏற்பட வழி வகுத்தாள். அவளது சூழ்ச்சி புரிந்து, விலகி விட்டேன்.
அடுத்து, மாமியார், என்னைப் பற்றி என்ன சொன்னாரோ தெரியவில்லை. தம்பிக்கு பணம் கொடுப்பதை முதலில் தடுத்தார், கணவர். அதோடு, பள்ளி நேரம் போக, 'டியூஷன்' எடுக்கவும் வறுபுறுத்தினார்.
'பள்ளியிலேயே வேலை அதிகம். 'டியூஷன்' எடுக்க இயலாது...' என, பக்குவமாக கூறியும், கோபித்துக் கொண்டு, இரண்டு நாள் எங்கோ சென்று விட்டார். அப்போது, மாமியார் படுத்திய பாடு இருக்கிறதே... அப்பப்பா!
அச்சமயம், நான், கர்ப்பமாக இருந்தேன். முடியாவிட்டாலும், நாலைந்து பிள்ளைகளுக்கு, 'டியுஷன்' எடுக்க ஆரம்பித்தேன். என் சம்பளம் முழுவதையும் வாங்கிக் கொண்டு, ஹோட்டல், சினிமா என, குடும்பமே கூடி கும்மாளமிடும்.
ஒருமுறை என்னைப் பார்க்க, அண்ணன் வந்த போது, என் கையை பிடித்து, ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து, 'அவன் உன் அண்ணனா? கட்டினவன் போல் கையை பிடித்து பேசுகிறான்...' என, கோபமாக பேசினார், மாமியார்.
ஐந்து மாத கர்ப்பமாக இருந்த போது, உடல்நிலை மோசமாகி, மயங்கி விழுந்து விட்டேன். விஷயம் கேள்விப்பட்டு, அண்ணன் வந்து, என்னை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். ஓரளவு உடல்நிலை தேறியதும், கணவர் வீட்டுக்கு வந்து விட்டேன்.
இப்போது, மன அழுத்தத்தால், என்ன செய்கிறேன் என்றே தெரியாமல், எல்லார் மீதும் எரிந்து விழுகிறேன். கையில் கிடைக்கும் பொருட்களை துாக்கி எறிகிறேன்.
கணவரை பார்க்கும் போதெல்லாம் ஆத்திரம் அதிகமாகிறது. வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்குமே என்றும் தோன்றுகிறது.
இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வருவது எப்படி அம்மா?
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
இந்தியாவில், திருமண பந்தம் பலருக்கு விஷமாகவும் வெகு சிலருக்கு அமிர்தமாகவும் இருக்கிறது. முன்னே போனால் கடிக்கிறது, பின்னே போனால் உதைக்கிறது என்றாலும், யாரும் திருமண வாழ்வை எளிதில் அறுத்துக் கொண்டு வெளிவர தயாராய் இல்லை. அதனுள்ளேயே கிடந்து உழல்கின்றனர்.
நீயும் வேலை பார்க்கிறாய். உன் அண்ணனும் வேலை பார்க்கிறார். தம்பியின் கல்வி செலவை ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொண்டால் என்ன?
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது, உன் விஷயத்திலும் நிரூபணம் ஆகிறது.
நாத்தனாரும், நாமும் ஏறக்குறைய சம வயதுக்காரிகள் தானே என, நினைத்து, அவளிடம் எல்லாவற்றையும் கொட்டி விடக் கூடாது. நீ சொன்னதை, கண், காது, மூக்கு வரைந்து, அம்மாவிடம் போய் கொட்டி விடுவர். அவர்களிடம் மத்திமமாய் பழகுவது நல்லது.
அடுத்து, நீ செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுகிறேன்...
எக்காரணத்தை முன்னிட்டும் அரசு வேலையை விட்டுவிடாதே. முதல் இரு குழந்தைகளுக்கு, 180 நாட்கள் சம்பளத்துடன் கூடிய கர்ப்பக்கால விடுமுறையும், மூன்றாவது குழந்தைக்கு, 84 நாட்கள் சம்பளத்துடன் கூடிய கர்ப்பக்கால விடுமுறையும் அரசு தருகிறது.
விடுமுறையை அனுபவி. விரும்பியதை சாப்பிடு. மயங்கி விழும் அளவுக்கு பலவீனமாய் இராதே.
உனக்கென தனியாக வங்கி கணக்கு ஆரம்பி. ஏ.டி.எம்., கார்டு வைத்துக் கொள். உன் சம்பளம், வங்கி கணக்கில் இருக்கட்டும். சம்பள பணத்தில், 40 சதவீதத்தை வீட்டு செலவுக்கு கணவரிடம் கொடு. அதுவும் நீ விரும்பினால் தான், அந்த பணமும் தரப்படும் என, கணவருக்கு உணர்த்து.
உடம்பு ஒத்துழைக்கவில்லை என்றால், குழந்தைகளுக்கு, 'டியூஷன்' எடுக்காதே. வற்புறுத்தினால், முடியவே முடியாது என, ஆணித்தரமாகக் கூறு.
நீ, உன் பிறக்கப் போகும் குழந்தை, உன் வேலை, உன் தினசரி தேவைகள், உன் சுயகவுரவம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாதே.
அரசுப் பணியில் இருக்கும் மனைவி அல்லது மருமகள், தங்க முட்டையிடும் வாத்து. அடுத்த, 10 ஆண்டுகளில் உன் சம்பளம் உயரும். அடுத்த, 20 ஆண்டுகளில் நீ பணிபுரியும் பள்ளிக்கு தலைமையாசிரியை ஆக கூடும்.
அண்ணன் வீட்டிற்கு வரும்போது, அவனை கட்டியணைத்து மாமியாருக்கு, 'போஸ்' கொடு.
'அண்ணன் - தங்கை உறவு இப்படி தான். நீங்கள் வேண்டுமானால் உங்கள் அண்ணனுடன், ஸ்கேல் வைத்து கைகுலுக்கி கொள்ளுங்கள்...' என, போட்டு தாக்கு.
தமிழ்நாட்டு கணவர்மார்களில், மெஜாரிட்டி வடிவேலு போல, வாய் சவடால் உள்ளவர்கள். எதிர்த்து குரல் கொடுத்தால், தொடை நடுங்கி அடி பணிவர்.
மாதம் ஒருமுறை, மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, ஆலோசனை பெறு.
ஆறு பவுண்டு ரோஜாக்குவியலை பெற்றெடுக்க வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.