Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு சகோதரிக்கு -

நான், 44 வயது ஆண். அரசு பணியில் உள்ளேன். அழகான மனைவியும், பள்ளி செல்லும் வயதில், இரு மகள்களும் உள்ளனர். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வேன். உள்ளூரில் இருந்தால், 10 மணி நேரம் அலுவலக பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம்.

எனக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. பணியில் மிகவும் நேர்மையானவன் என்ற பெயர் எடுத்துள்ளேன்.

என் மனைவி மீது அதிகமான பாசம் வைத்துள்ளேன். அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுப்பேன்.

அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், புயல் வீச ஆரம்பித்தது. ஒருமுறை, நான் வெளியூர் சென்றிருந்தபோது, யாரோ ஒரு ஆண் வீட்டுக்கு வந்து சென்றதாக கூறினர், என் மகள்கள்.

தெரிந்தவர்கள், உறவுக்காரர்கள் யாராவது வந்து சென்றிருக்கலாம் என்று நினைத்து அதை மறந்து விட்டேன்.

மற்றொரு சமயமும், இதே போல் யாரோ ஒரு ஆண் வந்து சென்றதாக மகள் கூற, லேசாக சந்தேகம் வர ஆரம்பித்தது. மனைவியிடம் கேட்க, கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். குழந்தைகளுக்காக பொறுத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு முறை நான் வெளியூர் செல்லும் போது, யாராவது ஒருவர் வந்து போவதாக அக்கம் பக்கத்தினர் அரசல் புரசலாக பேச, நிலைமை மோசமாகி விட்டதை உணர்ந்தேன்.

ஒருநாள், மனைவிக்கு உடல்நல குறைவு ஏற்பட, மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அவளை பரிசோதித்த மருத்துவர், விஷயத்தை போட்டு உடைத்து விட்டார்.

யார் மூலமாகவோ கர்ப்பமாகி, வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, இவளாகவே ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிட்டு இருக்கிறாள். அதில், கருச்சிதைவு ஆகியிருக்கிறது. அதிலிருந்து அடிக்கடி உடல்நிலை பாதிப்படைவதும், அதை சரி செய்ய, மருந்து கடையில் ஏதோ மாத்திரை வாங்கி சாப்பிட்டும் வந்துள்ளாள். இப்போது நிலைமை, சீரியசாகவே, விஷயம் வெளிவந்து விட்டது.

அவளது உடல்நிலை தேறினால் போதும் என்று, உரிய சிகிச்சை அளிக்க செய்து, வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

அவளை விட்டு பிரிந்து விடலாம் என்றால், இரு பெண் குழந்தைகளை நினைத்து பேசாமல் இருக்கிறேன்.

ஒவ்வொரு நாள் இரவும், அவள் செய்த துரோகமே என்னை துாங்க விடாமல் செய்கிறது. வேலையிலும் கவனம் சிதறுகிறது.

நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள், சகோதரி.

-இப்படிக்கு, உங்கள் சகோதரன்.

அன்பு சகோதரனுக்கு -

உங்களுக்கு, 40 வயதில் மனைவியும், 18 மற்றும் 16 வயதுகளில் மகள்களும் இருக்கின்றனர் என, கணிக்கிறேன்.

பெண்களின், 40 வயது மிகமிக முக்கியமானது. இந்த காலகட்டம், மெனோபாஸ் பீரியடுக்கு முந்தைய வசந்த ருது காலம்.

கட்டுப்பாடாய் இருக்கும் பெண்கள் கூட, வானவில் தேடி ஓடும் காலம் இது.

ஓர் அணைப்பு, ஒரு சிறு முத்தம், இரண்டொரு காதல் வார்த்தைகள், 40 வயது பெண்களுக்கு தேவைப்படுகிறது. அவற்றை கணவன் கொடுத்தால், பேருவகை தன்னிறைவு அமைகிறது. கணவர் கொடுக்காவிட்டால் வெறுமை பூக்கிறது. பெரும்பாலானோர் அந்த வெறுமையை பதுக்கிக் கொண்டு, லவுகீக வாழ்க்கையை தொடர்கின்றனர். சிலர், அது கிடைக்கும் இடத்தை தேடி அடைகின்றனர்.

நீங்கள் ஒரு பூந்தொட்டியில் ரோஜாச்செடி வளர்க்கிறீர்கள். அதற்கு நீங்கள் தினமும் நீர் வார்க்க வேண்டாமா?

தினமும், 10 மணி நேர அலுவலகப்பணி. -வீ ட்டுக்கு வந்து சாப்பிட்ட பின் துாக்கம் -காலையில் எழுந்து சாப்பிட்ட பின் அலுவலகம்- தவிர அடிக்கடி வெளியூர் செல்லல். இரு மகள்கள் பருவ வயதை நெருங்கி விட்டனர் அல்லது பருவ வயதை அடைந்து விட்டனர். இனி, மனைவிக்கும், தனக்கும் இடையே தாம்பத்யம் தேவையில்லை என, முடிவு எடுத்திருப்பீர்கள்.

தாம்பத்யம் தொடர்ச்சியாக இருந்தால், அது சாதாரண விஷயமாக பாவிக்கப்படும். தாம்பத்யம் இல்லவே இல்லை என்றால், பிரபஞ்சத்தின் மிகப்பெரிய விஷயமாக மாறிவிடும். உங்களிடம் கிடைக்காத தாம்பத்யத்தை வெளியில் தேட ஆரம்பித்து விட்டார், உங்கள் மனைவி.

உங்கள் மனைவிக்கு ஓர் ஆணிடம் திருமண பந்தம் மீறிய உறவா அல்லது பல ஆண்களிடம் திருமண பந்தம் மீறிய உறவா என்பதை உங்கள் கடிதத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை.

இனி, நீங்கள் செய்ய வேண்டியது...

* உங்கள் மனைவி முழு உடல்நலம் பெற தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுங்கள்

* பூரணகுணம் பெற்றதும் உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள். உங்களிடம் குறை இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி தன் துர்நடத்தையை நியாயப்படுத்தி பேசினால், சமாதானமாக விலகிக் கொள்ளலாமா என, கேளுங்கள். உங்கள் மனைவியிடம் தொடர்பு வைத்திருக்கும் நபர், இரு மகள்களையும் குறி வைத்தால், உங்கள் மனைவியின் நிலை என்ன என்பதை கேட்டு பாருங்கள். அந்த நபர் உங்கள் மனைவியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்றால், விவாகரத்து செய்து கொள்வோம் என கூறுங்கள்

* செய்த தவறை உணர்ந்து, உங்கள் தோளில் சாய்ந்து அழுதால், மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்

* மீண்டும் அவளுடன் வாழத் தொடங்கும் போது, அவளுக்கென நேரத்தை ஒதுக்குங்கள். அவளை மகிழ்ச்சிப்படுத்த முயற்சியுங்கள்.

துரோகத்தை மன்னிப்பது மிகப்பெரிய தண்டனை. மன்னித்து நிம்மதி பெறுங்கள்.

--என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap