Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

13


PUBLISHED ON : மே 24, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 24, 2026

13


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு,

நான், 32 வயது பெண். படிப்பு: எம்.காம்., பெற்றோருக்கு நான் ஒரே மகள். எங்களது குடும்பம், நடுத்தர வகுப்பை சேர்ந்தது.

எனக்கு திருமணமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஆண், பெண் என, இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் வயது: 36. பெரிய நிறுவனம் ஒன்றில், மேனேஜராக பணிபுரிகிறார்.

கைநிறைய சம்பளம், நல்ல குடும்பம் என்று கூறி, என்னை அவருக்கு மணமுடித்து வைத்தனர்.

ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது அவரது சுயரூபம்.

திருமணமானதிலிருந்தே, அவருக்கு என்னை பிடிக்கவில்லை. கடமைக்காகவும், சமூகத்துக்காகவும் தான் என்னுடன் வாழ்ந்து வருகிறார்.

இவ்வளவு ஆண்டுகளில், ஒருநாள் கூட, என்னிடம் அன்பாகவோ, ஆசையாகவோ நடந்து கொண்டதே இல்லை. 'நான் என்ன தவறு செய்தேன்?' என்று புரியாமல் பல நாட்கள் மனநிம்மதியின்றி இருந்துள்ளேன்.

ஒரு கட்டத்துக்கு மேல் தான், மோசமான ஒரு ஆணாதிக்கவாதியை திருமணம் செய்துள்ளேன் என்று புரிந்தது.

நான் படித்திருந்தும், வேலைக்கு போகக்கூடாது என்று தடை விதித்தார். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை பராமரிப்பது, குழந்தைகளை வளர்ப்பது மட்டுமே என் முழுநேர வேலை. நான், நல்ல மனைவியாக இருக்க விரும்பியதால், இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ஆனால், தினமும் ஒரே மாதிரி, இயந்திரம் போல் இருப்பது வெறுப்பாக உள்ளது.

ஆசையாக ஒரு வார்த்தை பேச மாட்டாரா என, ஏங்குவேன். அவரோ அலுவலகம் முடிந்து வந்த பின்னும், கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து விடுவார்.

காபி, டிபன், சரியான நேரத்துக்கு டைனிங் டேபிளில் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அசிங்கமாக திட்டுவார். குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகளை கூட ரசிக்காமல், 'நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்...' என்று, அவர்கள் மீதும் ஆத்திரப்படுவார்.

இவரது குணம் தெரிந்ததோ, என்னவோ கணவரது பெற்றோர், தனியாக உள்ளனர். என் பெற்றோராலும் எதுவும் செய்ய முடியாத நிலை.

என் மீதும், குழந்தைகள் மீதும் இவ்வளவு வெறுப்பை உமிழ என்ன காரணம்?

அன்பில்லாத இந்த முரடனை திருத்த வழி சொல்லுங்கள், அம்மா. இந்த நரக வாழ்க்கையால் மனநோயாளி ஆகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு,

பொருளாதார நிர்பந்தம், பணி அழுத்தம், ஒரு திருமணமான ஆணை, காய்ந்த கருவாடு ஆக்கி விடுகிறது. அவர்களுக்குள் ஒளிந்திருந்த விளையாட்டு சிறுவன் இறந்து விடுகிறான். அவர்களுக்குள் சுயபச்சாதாபம் பொங்கி வழிகிறது. ரசனை அற்றவர்களாகவும் ஆகி விடுகின்றனர். உணவை சுவைத்து உண்ணாமல், தீக்கோழி போல விழுங்குவர். அவர்களது கண்களுக்கு உலகம், கருப்பு - வெள்ளையாக தான் தெரியும். இவர்களது உழைப்பில் அதீத கற்பனையோ, திட்டமிடலோ இராது. ஒரு விறகுவெட்டி மாங்குமாங்கென்று விறகு வெட்டினாலும் அவர்களது, தின ஊதியம், 500 ரூபாயை தாண்டாது. ஆனால், அந்த விறகு வெட்டிக்கு உலகிலேயே தான்தான் அதிகம் உழைக்கும் விறகுவெட்டி என்ற வீராப்பு இருக்கும்.

உன் கணவர், ஓர் ஆணாதிக்க ஆணல்ல; அவர் ஒரு வேலையில் மூழ்கி போன ஆண்.

உன் கணவர் உன்னை வேலைக்கு அனுப்பாதது ஆணாதிக்க உணர்வால் அல்ல. தான் சம்பாதிப்பது குடும்பத்துக்கு போதும், மனைவி ஏன் ஒரு பக்கம் போய் சம்பாதிக்க வேண்டும்... அவள் வீட்டுக் கடமைகளை சிறப்பாக செய்யட்டும் என, நினைக்கிறார், உன் கணவர்.

மனைவியிடம் அன்பை, காதலை, நன்றியை, மன்னிப்பை, புன்முறுவலை காட்டுவது அனாவசியம் என நினைக்கிறார், உன் கணவர்.

மனைவியை கொஞ்சினால், தன் வேலையின் கவனம் சிதறி விடும் என, நம்புகிறார், உன் கணவர்.

ஒருநாள் நீ தலைவிரிகோலமாய் அமர்ந்து, 'இப்படி கடுமையான வேலையை குடும்ப நலனுக்காக பார்த்து ஓடாய் தேய்கிறாயே புருஷா!' என, ஒப்பாரி வைத்துப் பார்; ரசிப்பார் உன் கணவர்.

உழைக்கும் உன் கணவருக்கு, காபி, டிபன் நேரத்திற்கு டைனிங் டேபிளுக்கு வந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயம்தானே!

பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மகன், மகளை கொஞ்ச தெரியாது. 'பீடை, சனியன், திருட்டுப்பயலே, நாசமாபோவ, உங்கப்பன் இல்லைன்னா நடுரோட்டில நின்று பிச்சை எடுப்ப-...' போன்ற வசவு வார்த்தைகளை அள்ளி வீசுவர்.

ஓரிரு ஆண்கள் இப்படி இருந்தால் திருத்தி விடலாம். ஆனால், ஆண்கள் ஜனத்தொகையில், 80 சதவீத ஆண்கள் இம்மாதிரி, 'கேட்டகிரி'தான்.

கணவரின் நடவடிக்கையால், நீ மனநோயாளி ஆக மாட்டாய். நாளாக நாளாக உனக்கு மரத்துப் போய் விடும்.

நிதானமாக செயல்படு. உன் கணவரின் மனோபாவத்தை மாற்ற முயற்சி செய். ஐம்பது வயதில், உன் கணவர், உன் மடியில் தஞ்சம் புகுந்தாலும் புகுவார்.

பேய்க்கு வாக்கப்பட்டா சுடுகாட்லதானே குடும்பம் நடத்த வேண்டியிருக்கும்?



-என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap