
முகதி சுபா, நெல்லை: 'பிரதமர் மோடியின் ஆற்றலும், சுறுசுறுப்பும், இந்தியாவுக்கு மிகப்பெரிய சொத்து...' என, காங்., - எம்.பி., சசி தரூர் பாராட்டியுள்ளாரே...
'காங்., தலைமையுடன் மோதல் உள்ளது...' என்றும், சசி தரூர் ஒப்புதல் அளித்துள்ளாரே! பா.ஜ.,வில் சேர்வதற்கு இப்படி பலமாக அடி போடுகிறார் என்பதை, சொல்லவா வேண்டும்!
* வி.பார்த்தசாரதி, சென்னை: அரசியல் நாகரிகம்ன்னு சொல்றாங்களே... அப்படின்னா என்ன?
கட்சியினர் ஒருவருக்கு ஒருவர் ஏசிக் கொள்ளாமல் இருப்பதும்; துாற்றி அறிக்கை வெளியிடாமல் இருப்பதும்; பொது வெளியிலும், நிகழ்ச்சிகளிலும் சந்திக்கும் போது, மரியாதை நிமித்தம் சிரித்து பேசிக் கொள்வதும், அரசியல் நாகரிகம்.
நம் அரசியல்வாதிகளிடம் தான், இது முற்றிலும் கிடையாதே!
எம்.விக்ரம், சென்னை: பா.ம.க., ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே சமரசம் செய்ய, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கூப்பிடலாமா?
அவர் அதற்கும், 'நான் தான் சமரசம் செய்தேன்; எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை...' என, புலம்புவாரே!
ப.சோமசுந்தரம், சென்னை: 'நீட் தேர்வில், ஆதி முதல் அந்தம் வரை, பணம் தான் விளையாடுகிறது...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்...
'நீட்' தேர்வை, ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என, முதல்வர் ஸ்டாலினுக்கு புரிந்து விட்டது; அதனால் அடுத்த தாக்குதலை ஆரம்பித்துள்ளார்!
எஸ்.ஆஷிகா, அதிராம்பட்டினம்: சென்னை ஐ.ஐ.டி.,யில் உயர்கல்வி பயில, பழங்குடி இன மாணவி ராஜேஸ்வரி தகுதி பெற்றுள்ளாரே...
இவரைப் போலவே, மும்பை ஐ.ஐ.டி.,யில் படிக்க தேர்வாகி உள்ளார், விருதுநகரை சேர்ந்த, பட்டாசு தொழிலாளியின் மகள், அரசு பள்ளி மாணவி, யோகேஸ்வரி!
தமிழக மாணவ - மாணவியர், 'நீட்' தேர்விலும் வெற்றி பெறுகின்றனர்!
அவரவர் எதிர்காலத்திற்கு, அவர்கள் உழைக்க தயாராகி விட்டனர்; அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்!
பா.மீனா, சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, நடிகையர், தரகர் பிரசாத், கோகைன்... என்ன நடக்கிறது, தமிழ் சினிமா உலகில்?
சினிமா உலகில் இது காலங்காலமாக நடக்கும் விஷயம் தான். சில ஆண்டுகளுக்கு முன், பிரபல நடிகை ஒருவர் சிக்கினாரே... 'பெரிய சிபாரிசு' வாயிலாக தப்பித்து விட்டார்.
ஸ்ரீகாந்துடையது எல்லாம், 'லேட்டஸ்ட்' கதை!
* டி.சுதாகர், ராமநாதபுரம்: மருத்துவர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரி போன்றோர், தேர்வு எழுதி பதவி பெறுவது போல், 'எம்.எல்.ஏ., - எம்.பி.,களும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றால் தான் பதவி...' என, சட்டம் கொண்டு வந்தால் என்ன?
மிகவும் சிறப்பாக இருக்கும்; ஆனால், தற்போதைய அரசியல்வாதிகளில் ஒருவர் கூட, தேர்வாக மாட்டார்கள்!
வி.பிருந்தா, சென்னை: ஆண்டுதோறும் அந்துமணிக்கு, சம்பளம் கூடுகிறதா?
சமீபத்திய, 'லெக்சஸ்' கார் உட்பட நான்கு கார்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார், பொறுப்பாசிரியர்; சம்பளம் மட்டும் உயர்த்துவதே இல்லை!
நீங்கள் அவருக்கு, சிபாரிசு கடிதம் அனுப்புங்களேன், பிருந்தா மேடம்!