PUBLISHED ON : ஜன 19, 2025

மகாராஷ்டிர மாநிலத்தின் அகில்யா நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம், சவுண்டாலா. கடந்த, 2011ல், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்தக் கிராமத்தில், 1,800 பேர் வசித்தனர்.
மகாராஷ்டிராவின் முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக, சவுண்டாலா திகழ்கிறது.
கடந்த, 2007ல், 'எவ்வித மோதலும் இல்லாத கிராமம்' என்ற விருதை, சவுண்டாலா கிராமம் பெற்றது.
இக்கிராமத்தில், கணவரை இழந்த பெண்கள், மறுமணம் செய்து கொள்ள, கிராம ஊராட்சி சார்பில், 11 ஆயிரம் ரூபாய், ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், கணவரை இழந்த பெண்கள், வளையல் அணியவும், குங்குமம், பூ வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.
முற்போக்கான சவுண்டாலா கிராம ஊராட்சியில், அண்மையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'சவுண்டாலா கிராமத்தில், பெண்களை கண்ணியமாக நடத்துகிறோம். அவர்களின் மரியாதைக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. இக்கிராம பெண்களை அவதுாறாகப் பேசினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்...' என்பது தான், அந்தத் தீர்மானம்.
இதன்படி, வீடு மற்றும் பொது இடங்களில், பெண்களை யாரும் அவதுாறாகப் பேசக் கூடாது. ஒவ்வொரு பெண்ணையும், தாயாக, சகோதரியாக மற்றும் மகளாகப் பாவிக்க வேண்டும் என்று, ஆண்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது, அவ்வூர் பஞ்சாயத்து.
இதன் மூலம், கணவரை இழந்த பெண்களுக்கு எதிரான அநீதிகளை முழுமையாக நீக்கி உள்ளனர். மேலும், கோவில் மற்றும் குடும்ப விழாக்களில், கணவரை இழந்த பெண்களுக்கு முதல் மரியாதை வழங்குகின்றனர்.
ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற கொள்கையை கண்டிப்புடன் பின்பற்றும் சவுண்டாலா கிராமம், மகாராஷ்டிரா மட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரியாக இருக்கிறது.
- ஜோல்னாபையன்
