PUBLISHED ON : ஜன 19, 2025

ராம - ராவண யுத்தம் இரவு பகலாக நடைபெற்றது. இந்திரஜித்துடன் யுத்தம் செய்து கொண்டிருந்தான், லட்சுமணன். அக்னியஸ்திரம், வருணாஸ்திரம், பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம் என, தெய்வீக அஸ்திரங்களை ஒவ்வொன்றாக அவன், பிரயோகம் செய்கிறான்.
எல்லா அஸ்திரங்களுக்கும், பதில் அஸ்திரம் இருந்ததால், அவற்றைத் தகர்த்து விட்டான், இந்திரஜித். இந்த அசுரனை எப்படி அழிப்பது என, லட்சுமணனுக்குப் புரியவில்லை.
கடைசியாக, ஒரு யோசனை வந்தது. இந்திராஸ்திரத்தை எடுத்து, அதை ஒரு குறிப்பிட்ட மந்திரப் பிரயோகத்துடன் ஏவினான்.
தசரத புத்திரரான ராமன், சத்தியம் மற்றும் தர்மமே உருவானவர் என்பது உண்மையென்றால், இந்த அம்பு, இந்திரஜித்தைக் கொல்லட்டும் என்பது தான், அந்த மந்திரம்.
இந்திரஜித்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த மந்திரத்தைப் பொய்யாக்க கூடிய வழிகளை ஆராய்ந்தான். மூன்று வழிகள் அவன் மனதில் தோன்றியது.
* என் தந்தை ராவணன், சத்தியம் மற்றும் தர்மமே உருவானவர் என்பது உண்மையென்றால், இந்த அம்பு என்னைக் கொல்லாதிருக்கட்டும்
* நான், சத்தியம் மற்றும் தர்மமே உருவானவன் என்பது உண்மையென்றால், இந்த அம்பு என்னைக் கொல்லாதிருக்கட்டும்
* தசரத புத்திரரான ராமன், சத்தியம் மற்றும் தர்மமே உருவானவர் என்பது பொய்யென்றால், இந்த அம்பு, என்னைக் கொல்லாதிருக்கட்டும் என, பிரதி சபதம் சொல்வது.
இந்த, மூன்று சபதங்களும் பயனளிக்காது என, அவனது மனசாட்சியே கூறியது. எனவே, எந்தப் பிரதி அஸ்திரமும் விடாமல், லட்சுமணனின் அஸ்திரத்தால் மடிந்து விடுகிறான்.
இந்த கதையில், அற்புதமான தத்துவம் புதைந்திருக்கிறது.
தன் அண்ணன் ராமனின் சத்தியத்தையும், தர்மத்தையும் பணயம் வைத்து, எந்த தெய்வீக அஸ்திரத்தாலும் கொல்ல முடியாத ஓர் அசுரனை வெற்றி கொண்டான், லட்சுமணன்.
ராமனின் சத்தியமும், தர்மமும் பொய்யானது என, விரோதியான இந்திரஜித்தாலும் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. தன் தந்தை ராவணனின் வாழ்க்கை முறையும், தன் வாழ்க்கை முறையும் சத்தியத்திலும், தர்மத்திலும் இல்லையென்றும் அறிந்திருந்தான், இந்திரஜித். இதுதான் சத்தியத்தின், தர்மத்தின் மகிமை.
உலகத்தில் எந்த மந்திரமும், தந்திரமும் மற்றும் அஸ்திரமும், சத்தியம் என்ற ஆயுதத்தின் முன் தோல்வி அடைந்துவிடும். சத்தியப் பாதையில் செல்கிற, தர்மத்தைக் கடைபிடிக்கிற ஒருவனது வாழ்க்கையே ஒளிமயமானது.
எப்படி ஒரு விளக்கு தானும் பிரகாசித்து, தன் சுற்றுப்புறத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, அதுபோல சத்தியம், தன் பாதையில் செல்பவனின் வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய்வதுடன், அவனைச் சார்ந்து வாழ்கிறவர்களின் வாழ்க்கையையும் வெற்றி பெறச் செய்யும்.
இந்த சத்திய விளக்கை வைத்து, தர்மத்தில் நிலைபெற்ற வாழ்க்கையை வாழ்ந்து வெற்றி பெற்றனர், சான்றோர்.
அருண் ராமதாசன்