PUBLISHED ON : ஜூன் 01, 2025

வள்ளலார் சொற்பொழிவு ஆற்றி வந்த வடலுார் கிராமத்திற்கு செல்ல நினைத்த செல்வந்தர் ஒருவர், மாட்டு வண்டியில் பயணம் செய்தார். மாட்டு வண்டியை ஓட்டுபவரிடம் வேகமாக செல்லும்படி கூறினார், செல்வந்தர்.
சிறிது துாரம் சென்றதும், அவர்கள் ஒரு நதியை நெருங்கினர்.
'எருதுகள் நீர் பருகட்டும். அவை மிகவும் தாகத்துடன் உள்ளன...' என்றார், வண்டி ஓட்டுனர்.
'இல்லை. அதைப் பிறகு பார்க்கலாம். இப்போது நாம் வேகமாக போக வேண்டும்...' என்றார், செல்வந்தர்.
அதன்பின் கொஞ்ச துாரம் சென்றதும், 'எருதுகள் மிகவும் களைப்புற்று இருக்கின்றன. அவற்றைச் சிறிது நேரம் மரத்தடியில் களைப்பாற விட்டு பிறகு செல்லலாம்...' என்றார், வண்டி ஓட்டுனர்.
'நமக்கு அவ்வளவு நேரமில்லை. நாம் வள்ளலாரைச் சந்தித்து, இன்றிரவே வீடு திரும்ப வேண்டும்...' என்றார், செல்வந்தர்.
அவர்கள் வடலுார் வந்து சேர்ந்த போது, சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார், வள்ளலார். வள்ளலாரை வணங்கி, அவர் முன்பு பணிவுடன் அமர்ந்தார், செல்வந்தர்.
எருதுகளை வள்ளலார் வீட்டுப் பின்புறம் அழைத்து சென்றார், வண்டி ஓட்டுனர்.
அவற்றைப் பார்த்த வள்ளலார், திடீரென்று எழுந்து, எருதுகள் உள்ள இடத்திற்கு சென்றார். சொற்பொழிவிற்கு இடையில் என்றும் எழுந்திராதவர், அன்று சென்றதைக் கண்டு ஆச்சரியத்துடன் பக்தர்கள், அவர் பின் சென்றனர்.
எருதுகளிடம் சென்று மெதுவாக அவற்றை வருடி விட்டார். வள்ளலார்.
'நீங்கள் என்னால் துன்பமுற்றீர்கள். தாகம் போக்கிக் கொள்ள வாய்ப்பில்லாமல் போனது...' என, கண்ணீர் வடித்தார்.
'சுவாமி! என்னை மன்னியுங்கள். நான் தான் எருதுகளின் துன்பத்திற்கு காரணமானவன். மலர் உதிர்வதை கண்டு துன்பம் கொள்ளும் தங்களால், உயிருள்ள ஜீவன்கள் துன்புறுவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இதை உணராத நான், வண்டி ஓட்டுனரை மிக விரைவாக ஓட்டும்படி தொந்தரவு செய்தேன்...' என்றார், செல்வந்தர்.
மாடுகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் தண்ணீருக்கு ஏற்பாடு செய்துவிட்டு, சொற்பொழிவாற்ற வந்தார், வள்ளலார்.
'கருணையே கடவுள்...' என்ற உயர்ந்த உபதேசத்தை வழங்கினார்.
இறைவன் அனைத்து உயிர்களிலும் உள்ளார். மற்ற உயிர்களுக்கு நாம் அளிக்கும் துன்பம், இறைவனுக்கு அளிப்பதாகும். அதனால், உயிர்கள் அனைத்தின் மீதும் கருணைக் கொள்ள வேண்டும்.
- அருண் ராமதாசன்