தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஞானானந்தம்: கிளிகள் கூறும் செய்தி!

ஞானானந்தம்: கிளிகள் கூறும் செய்தி!

ஞானானந்தம்: கிளிகள் கூறும் செய்தி!


PUBLISHED ON : ஆக 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடன் ஒருவன், காட்டிற்கு சென்று, கிளிகள் இருந்த ஒரு மரத்தைக் கண்டான். அவன் அவற்றைப் பிடிக்கும் நோக்கத்துடன் மரத்தடியில் வலை விரித்து தானியங்களைத் துாவி, மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே சிறிது நேரத்தில் கிளிகள் வலையில் சிக்கின. அப்போது அந்த வழியாக வந்தார், முனிவர் ஒருவர். வலையில் சிக்கிய கிளிகளைக் கண்டதும், முனிவரின் மனதில் கருணை உண்டாயிற்று.

அவர், வேடனிடம், 'வேடனே, கிளிகளைக் கொல்லாதே...' என்று வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு உடன்படவில்லை, வேடன்.

முனிவரிடம், 'சுவாமி, எனக்கு இந்தக் கிளிகள் தான் உணவு. கிளிகளுக்கு பதிலாக மாற்று உணவு கொடுத்தால் நான் கிளிகளை கொல்லாமல் விடுகிறேன்...' என்றான், வேடன்.

அதற்கு, 'என்னிடம் உணவு இருக்கிறது. அதை, உனக்கு தருகிறேன். கிளிகளை விட்டுவிடு...' என்று கேட்டுக்கொண்டார், முனிவர்.

வேடனும், கிளிகளை விடுவித்தான்.

கிளிகளிடம், 'கிளிகளே, இதுபோல் வேடன் வலை விரித்துத் தானியங்களைத் துாவுவான். அவனது வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்...' என்று கூறி, தன் வழியில் சென்றார், முனிவர்.

நாட்கள் கடந்தன. கிளிகளைப் பிடிக்க மீண்டும் அங்கு வந்தான், வேடன்.

வேடனைப் பார்த்ததும் எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, 'கிளிகளே! வேடன் வலை விரித்துத் தானியங்களைத் துாவுவான். அவனது வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்...' என்று கூறின.

கிளிகள் கூறியதைக் கேட்ட வேடன், 'இந்தக் கிளிகள் முன்பு நடந்ததை இன்னும் மறக்கவில்லை...' என்று எண்ணி, அங்கு வலை விரிக்காமல் வேறு இடம் தேடிச் சென்றான்.

ஒரு மாதம் கடந்தது. மீண்டும் கிளிகள் இருந்த மரத்தடிக்கு வலையுடன் வந்தான், வேடன். அப்போதும் வேடனைக் கண்ட கிளிகள் முன்புபோலவே கத்தின. இதைக் கேட்டதும் வலை விரிக்காமல், நம்பிக்கை இழந்து திரும்பிச் சென்றான், வேடன்.

ஆறு மாதங்கள் கடந்தன. அப்போதும் அவ்வாறே நடந்தது.

அன்றைய தினம் வேடனுக்கு போதாத காலம். வேறு எங்கும் அவனுக்கு வேட்டை அகப்படவில்லை. மிகவும் சோர்ந்து போன அவன், 'கிளிகள் இல்லாவிட்டால் மற்ற பறவைகள் வலையில் சிக்கும்...' என்று எண்ணி வலையை விரித்தான்.

வேடன் தானியம் துாவி முடித்ததும் கிளிகள் எல்லாம் ஒன்றாக, 'கிளிகளே! வேடன் வலை விரித்துத் தானியங்களைத் துாவுவான். அவனது வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்...' என்று கூவியபடி வேடன் விரித்த வலையில் வந்து சிக்கிக்கொண்டன.

அவை, சொன்னதை சொல்லும் கிளிகள்! முனிவர் சொன்னதை அப்படியே திருப்பிக் கூறுகின்றன. ஆனால், அந்தச் சொற்களின் பொருளை அவை அறியவில்லை; எனவே, தற்போது வலையில் விழுந்தன.

அந்தக் கிளிகளைப் போலவே நாமும் இருக்கிறோம். நல்ல விஷயங்களைக் கேட்கிறோம்; படிக்கிறோம். ஆனால், அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை! நல்ல விஷயங்களைக் கேட்கவும், படிக்கவும் வேண்டும். 'நிற்க அதற்குத் தக' என்பதை நம் வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும்!

அருண் ராமதாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us