sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2025 ,ஆவணி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பொறுப்பு!

/

பொறுப்பு!

பொறுப்பு!

பொறுப்பு!

1


PUBLISHED ON : ஜூன் 08, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 08, 2025

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்த பூங்காவின் மூலையில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தனர், சிவாவும், ரீனாவும். மாலை நேரத்து தென்றல் இதமாக இருந்தது. ஆனால், ரீனாவிற்கு அதை ரசிக்கும் மனநிலை இல்லை!

''சொல்லு ரீனா. பேசணும்ன்னு சொன்னியே...''

சிவாவின் கேள்விக்கு அவளிடமிருந்து பெருமூச்சு, பதிலாக வந்தது.

''அப்பா முந்தாநாள் பேசினதை நினைத்து வருத்தப்படறியா?'' மெல்ல அவள் கையை எடுத்து, தன் கையோடு கோர்த்துக் கொண்டான்.

''ஹ்ம்ம். ஆமாம். நம்மளை அவங்க தனிக்குடித்தனம் போக சொன்னது, எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க.''

ரீனாவின் கண்கள் கலங்கியது.

''எனக்கே மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. எப்பவும் அண்ணனும், நானும் ஒற்றுமையா இருக்கணும்ன்னு, சொல்வாங்க. ஆனா, இப்ப எனக்கு கல்யாணம் ஆன உடனே, தனியா போக சொல்றாங்க. எனக்கும் ஒண்ணும் புரியலை.''

''நாம காதல் திருமணம் பண்ணிகிட்டதால, அவங்களுக்கு வருத்தம் போல,'' என்றாள், ரீனா.

''அம்மாவும் - அப்பாவும் ரொம்ப நல்லவங்க, ரீனா. நாம இரண்டு பேரும் வேற வேற மதமாக இருந்தாலும், அவங்க நம்ம காதலுக்கு எதிர்ப்பு சொல்லலையே! உன் அப்பா, அம்மாகிட்டயும் போய், அவங்க தான் பேசி சம்மதிக்க வைச்சாங்க. ஆனா, திடீர்ன்னு ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னு தெரியலை.''

''நீங்க என்ன தான் சொன்னாலும், எனக்கு மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. என்னால் தான் நீங்க, உங்க குடும்பத்தை விட்டு பிரிய வேண்டி இருக்குன்னு, நினைச்சா இன்னும் கஷ்டமா இருக்கு.

''நாம காதலிச்சே இருக்க கூடாது. எல்லாம் என் தப்பு. நான் தானே சும்மா இருந்த உங்ககிட்டே வந்து, என் காதலை சொன்னேன்,'' அவள் குரலில் ஆதங்கமும், குற்ற உணர்வும் வெளிப்பட்டது.

''என்ன, ரீனா இது? எனக்கும், உன்னை பிடித்து இருந்தது.''

அவன் கண்களில் காதல் இருந்தது.

''வாங்க வீட்டுக்கு போகலாம். இருட்ட ஆரம்பிக்குது,'' எழுந்து, அவன் கையைப் பற்றி இழுத்தாள், ரீனா.

எழுந்தவனை பின்னாலிருந்து வந்த குரல் தடுத்தது.

''சிவா தம்பி, கொஞ்சம் நில்லுங்க,'' அந்த பூங்காவின் தோட்டக்காரர், ஏறக்குறைய ஓடி வந்து கொண்டிருந்தார்.

''மெல்ல வாங்க அண்ணே,'' என்றான்.

''தம்பி மன்னிச்சுடுங்க. கல்யாணத்துக்கு வரமுடியாம போச்சு. என் மகன், பாலிடெக்னிக் கடைசி வருஷம் படிக்கிறான். அவன் காலேஜில் மேற்கொண்டு, பி.இ., சேர்க்க சொல்லி பெத்தவங்களை வரவைச்சு, 'மீட்டிங்' வச்சாங்க.''

''பரவால்லண்ணே. இதுதான் என்னோட மனைவி, ரீனா,'' மனைவியை அறிமுகம் செய்து வைத்தான், சிவா.

''வாழ்த்துகள்ம்மா,'' ரீனாவிடம் வாழ்த்து தெரிவித்தார்.

''உங்க மகன் படிப்புக்கு ஏதாவது உதவி வேணும்ன்னாலும் தயங்காம சொல்லுங்கண்ணே.''

''ரொம்ப நன்றி தம்பி. தேவைப்பட்டா கண்டிப்பா கேட்கறேன்.''

''போன மாசம், நீங்க கொண்டு வந்து கொடுத்த ரோஜா செடி ரெண்டும் பட்டு போச்சுண்ணே. ரீனாக்கு பிடிக்கும்ன்னு தான், கல்யாணத்துக்கு முன்னாடியே அதை உங்களை கொண்டு வந்து வைக்க சொன்னேன்.''

''அச்சோ! என்ன சொல்றீங்க, தம்பி? அது கூட வச்சது தான் இந்த ரோஜா செடியும்,'' அங்கு செழுமையாக, அழகிய சிவப்பு ரோஜா மலருடன் இருந்த செடியைக் காட்டினார்.

''அட! இவ்ளோ அழகா பூத்திருக்கு? நான் கூடத்தான் செடி செழிப்பா வளர்ந்து, சீக்கிரமாக பூக்கணும்னு நிறைய உரம் போட்டேன். அடிக்கடி தண்ணி ஊற்றி கண்ணும், கருத்துமா பார்த்துக்கிட்டேன். ஆனா, அப்படி இருந்தும் பட்டு போச்சே.''

''அங்க தான் தம்பி, நீங்க தப்பு பண்ணிட்டீங்க. செடிக்கு, தேவைக்கேற்ப உரமும், தண்ணீரும் கொடுக்கலாம். ஆனால், ஏற்கனவே செழுமையா இருக்கிற செடிக்கு அளவுக்கு அதிகமா தண்ணீரும், உரமும் போட்டால் அது பட்டுதானே போகும்.''

''அட கடவுளே! இது தெரியாம நான் தப்பு பண்ணிட்டேனே! சரி இனி பொறுப்பா பார்த்துக்கிறேன்.''

மறுநாள் காலை, ஆபீஸ் கிளம்பி கொண்டிருந்தவனிடம் வந்த அம்மா, ''இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு வந்துடு. ரீனாகிட்டயும் சொல்லி இருக்கேன். இது தலை தீபாவளி உங்களுக்கு. டிரஸ் எடுக்க போகணும்.''

''இல்லைம்மா. நாங்க வரலை,'' பட்டென்று சொன்னான்.

''என்னடா என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?'' என, கேட்டாள்.

''ஒண்ணுமில்லம்மா! நாங்க சாயங்காலம் வாடகை வீடு பார்க்க போறோம். அடுத்த வாரம், உங்க விருப்பப்படியே தனிக்குடித்தனம் போயிடுவோம்,'' எனக் கூறிய மகனின் குரலில் தெரிந்த மாறுதல், அம்மாவிற்கு புரிந்தது.

''தனியா போக சொல்லிட்டோம்ன்னு வருத்தமா, சிவா? எல்லாம் உங்க நல்லதுக்கு தானே சொன்னோம்? உங்க ஆபீஸ் பக்கமே வீடு பார்த்துக்கிட்டா, உங்க ரெண்டு பேருக்குமே ஆபீஸ் போயிட்டு வர்றது சுலபமா இருக்கும். அப்புறம்...'' அம்மா முடிக்கும் முன் குறுக்கிட்டான்.

''ரீனாவை, நீங்க பிரிச்சு பார்க்கறீங்களோன்னு அவள் சஞ்சலப்படறா! நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணியிருந்தாலும், இரண்டு குடும்பமும் சம்மதித்து, உங்க ஆசீர்வாதத்தோடு தானே கல்யாணம் நடந்தது?

''கூட பிறந்தவர்கள் என, யாரும் கிடையாது அவளுக்கு. பெருசா உறவினர்கள் போக்குவரத்தும் இல்லை. வீடு நிறைய ஆட்களோட கூட்டுக்குடும்பமா வாழப் போறோம்ன்னு நினைச்சுகிட்டு தான், அவள் இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள். ஆனா, இப்ப நீங்க கல்யாணம் முடிஞ்ச உடனே தனியா போக சொல்றது நியாயமா?''

''இதுதான் உங்க ரெண்டு பேருக்கும் வருத்தமா? அதான், ரீனா முகம் வாடி இருக்காளா?''

பூங்காவில் நடைபயிற்சியை முடித்துவிட்டு, வீட்டிற்குள் வந்தார், சிவாவின் அப்பா.

''என்னடா... இன்னும் ஆபீஸ் கிளம்பாமல் அம்மாகிட்ட ஏதோ பேசிக்கிட்டு இருக்க? எங்கே ரீனாவை காணோம்?''

''அவளுக்கு இன்னைக்கு ஆடிட்டிங் இருக்கு. சீக்கிரமே கிளம்பி போய்ட்டா,'' என்றான், சிவா.

''அவன் என்கிட்ட கோபப்பட்டுகிட்டு இருக்கான்,'' என, கணவனிடம் குறைபட்டாள், அம்மா.

''உன்கிட்ட, உன் ஆசை மகன் கோபப்படறானா?'' நம்பாமல் மனைவியைப் பார்த்தார்.

''நாம, அவனை தனியாக போக சொல்லிட்டோம்ன்னு வருத்தம்.''

''ஆமாம்பா. நீங்களே சொல்லுங்க. அண்ணன் இந்த வீட்டில் உங்களோட கூட்டு குடும்பமா இருக்கும் போது, நாங்க மட்டும் ஏன் தனியா போகணும்?''

''உனக்கு இதுதான் வருத்தமா? நாங்க, உன் அண்ணனையும் தனி குடித்தனம் போக சொல்லிட்டோம்.''

''என்னது அண்ணனையுமா? உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? ரெண்டு நாளா லேட்டா வேலை முடிஞ்சு வருவதால், அண்ணன்ட்ட பேச முடியலை. காலையில் அவங்க ரெண்டு பேருமே சீக்கிரமா கிளம்பிடறாங்க. போன் கூட பண்ண முடியலை அண்ணனுக்கு!

''நாங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும்ன்னு, அறிவுரை சொல்வீங்க? இப்போ நீங்களே எங்களை தனித்தனியா போக சொல்றீங்களே...'' குரலில் கேள்வி தொக்கி நின்றது.

''நீங்க தனித்தனியா போறதால, உங்கள் ஒற்றுமை குறைஞ்சிடுமா என்ன? கொஞ்சம் பொறுமையா நாங்க சொல்றதை கேளு.

''உன் மாமா ரொம்ப உடம்பு முடியாமல், வாழ்வின் கடைசி தருணத்தில் இருந்ததால், அவசரமாக சின்ன வயசிலேயே முடிவு செய்திருந்தப்படி, அவர் மகள் சுனிதாவை உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணினோம்.

''அப்போது தான் படிப்பை முடித்திருந்தவன், பெருசா எதுவும் சம்பாதிக்கலை! சுனிதாவும் படிச்சுகிட்டு இருந்தாள். அதனால, அந்த சமயத்தில் நாங்க அவனுக்கு ஆதரவாய் நின்றோம். இப்போ அவங்க ரெண்டு பேருமே நல்லா சம்பாதிக்கிறாங்க.

''நீயும், ரீனாவும் அதே மாதிரி நல்ல நிலையில் இருக்கீங்க. தனியா போனா தான் உங்களுக்கும் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வரும். இத்தனை நாட்களாய் அம்மா, வீட்டு பொறுப்பையும், நான், மற்ற செலவுகளையும் பார்த்துக்கிட்டோம்.

''நீயும், உன் அண்ணனும் சம்பாதிப்பது, அவரவர் செலவுக்கு மட்டும் தான். எத்தனை நாட்களுக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படியே இருப்பீங்க? உங்களுக்குன்னு வீடு எல்லாம் வாங்க வேணாமா? வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டாமா?'' என, அப்பா கேட்ட கேள்வி, சிவாவின் மனதில் ஆழமாய் இறங்கியது.

அப்பாவிற்கு பதில் எதுவும் சொல்லாமல், அவரின் வார்த்தைகளை யோசித்தப்படியே நின்றிருந்தவனை, 'தம்பி!' என்று வாசலில் இருந்து வந்த குரல் நினைவுலகிற்கு அழைத்து வந்தது. இரண்டு ரோஜா செடிகளுடன் நின்றிருந்தார், தோட்டக்காரர்.

''தம்பி, தோட்டத்தில் வச்சிடறேன். நம்ம மண்ணுக்கு சட்டுன்னு வளர்ந்துடும், செடி. தேவைக்கு தண்ணீரும், உரமும் கொடுத்தா போதும்,'' என்றபடி தோட்டத்தை நோக்கி போனார்.

''சரியண்ணே,'' என்றவன், மனதிற்குள், ரோஜா செடிக்கு தோட்டக்காரர் சொன்னதை தங்களுடன் பொருத்தி பார்த்தான்.

'அண்ணனுக்கு அப்பாவின் உதவி, அந்த சமயத்தில் தேவைப்பட்டது. அப்பாவும், அம்மாவும் செய்தனர். ஆனால், நாம் ஏற்கனவே நல்ல நிலையில் இருக்கும் போதும், அப்பாவின் ஆதரவை எதிர்ப்பார்த்தது தவறு தானே?'

''ரொம்ப சாரிப்பா! எனக்கு இது இத்தனை நாள் தோணலை. உங்களுக்கு வர, 'பென்ஷன்' பணத்தில், நீங்க எத்தனை பாரத்தை தாங்க முடியும்? உங்களை நாங்க பார்த்துக்கணும். ஆனா, எதையுமே யோசிக்கலை இத்தனை நாட்கள்,'' என, வருத்தப்பட்டான், சிவா.

''உங்களால் தனியா குடும்பத்தை பார்த்துக்க முடியும்ன்னு இருக்கும்போது, உங்க கடமைகளை நீங்க புரிஞ்சுக்கணும்ன்னு தான் இந்த முடிவு எடுத்தோம்,'' என்றாள், அம்மா.

'அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கூட எல்லா பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு தேவைதானே?' என தோன்ற, சரியான நேரத்தில், சரியான முடிவு தான் அம்மாவும், அப்பாவும் எடுத்து இருக்கின்றனர் என, உணர்ந்து கொண்டான், சிவா. ரீனாவும் புரிந்துக் கொள்வாள் என தோன்றியது.

''இத்தனை நாட்கள், குடும்பத்துக்கான எந்த கடமையும், பொறுப்பும் எனக்கு தெரியலை! உண்மையைச் சொன்னால், 'கரன்ட் பில்' எவ்வளவு வருது, மளிகைக்கு ஆகும் செலவு எதுவுமே எனக்கு தெரியாது,'' என, அம்மாவின் கைப்பிடித்து மன்னிப்பு கேட்டான்.

அப்போது துாக்கம் கலைந்து எழுந்து வந்தாள், அண்ணனின் மூன்று வயது மகள். அண்ணன் மகளை துாக்கி கொண்டான்.

''உனக்கு, இந்த தீபாவளிக்கு பட்டுப்பாவாடை வாங்க போறேன். அப்புறம், உன் அம்மாவுக்கு, பாட்டிக்கு, சித்திக்கு எல்லாருக்குமே பட்டுப் புடவை வாங்கப் போறேன்,'' என, மகிழ்ச்சியாய் கூறி, குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான், சிவா.

''டேய் உனக்கு கிறிஸ்துமஸ் கூட உண்டுடா. அதையும், சிறப்பா கொண்டாடணும். கொஞ்சம் பணத்தை மிச்சம் வச்சுக்கோ,'' என, மகனை எச்சரிக்கும் குரலில் சொன்னாள், அம்மா.

''பார்த்தியா உங்க அம்மாவை! தீபாவளிக்கு பட்டு புடவைன்னு சொன்னவுடனே, கிறிஸ்துமஸ்துக்கும் பட்டு புடவை கிடைக்கும்னு ஆசைப்படறா,'' வேண்டுமென்றே தன் மனைவியை வம்புக்கு இழுத்தார், சிவாவின் அப்பா.

''உங்களுக்கு எப்பவும் கேலி தான்,'' என, அம்மா சிரிக்க, அவர்கள் இருவரின் சிரிப்பில் கலந்து கொண்டான், சிவா.

நித்யா பாலாஜி






      Dinamalar
      Follow us