
இலக்கிய சுடர் மூவேந்தர் முத்து எழுதிய, 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற நுாலிலிருந்து:
சிலம்பு செல்வர் ம.பொ.சி., முதலில் அச்சுக் கோர்ப்பவராகத்தான் வாழ்க்கையை துவங்கினார்
* கருணாநிதி, தான் எழுதிய புத்தகங்களை, யார் அச்சுக்கோர்த்தாலும், தப்பு வராமல் இருக்க, முழுவதும் படித்து பார்த்தப் பின் தான், இறுதி பிரசுரத்துக்கு தருவார்
* ராஜ்யசபாவில், அண்ணாதுரை, கன்னிப் பேச்சு பேசிய போது, அதை நேருவும், டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூர்ந்து கேட்டனர். அதைவிட, சுவாரசிய விஷயம் உண்டு.
அண்ணாதுரை பேச வேண்டிய நேரம் முடிந்து விட்டது. இதை உணர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர், பூபேஷ் குப்தா, தன்னுடைய பேச்சு நேரத்தையும், அண்ணாதுரைக்கு கொடுத்தார்.
'என் நேரத்தை அண்ணாதுரைக்கு கொடுக்கிறேன். அவர் பேச்சு, இந்தியாவுக்கு தேவை. அவர் பேச வேண்டும்...' என, காரணம் கூறினார், பூபேஷ்.
இதற்கு மேலாக, அண்ணாதுரையின் பேச்சை, 'டில்லியில் அண்ணாவின் முதல் முழக்கம்...' என, அச்சிட்டு, 10 ஆயிரம் பிரதிகள் வெளியிட்டார், கருணாநிதி. அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
*********
கடந்த, அக்., 1944ல், சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்தார், காந்திஜி. சிறை வாசத்துக்கு பின், மிகவும் தளர்ந்து போயிருந்தார், காந்திஜி.
அப்போது, ராஜாஜி உட்பட பல தலைவர்கள், 'ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்...' என, காந்திஜியிடம் வேண்ட, அவரும் சம்மதித்தார்.
ஆனால், அந்த ஒரு மாதமும் அவர் என்ன செய்தார் தெரியுமா?
பிற மொழிகளை கற்றுக் கொள்வதில் செலவிட எண்ணினார். அதில், தினமும் அரைமணி நேரம், தமிழுக்காக ஒதுக்கி வைத்து, தமிழ் கற்கலானார்.
கவிஞர் பாரதியாரின், 'ஓடி விளையாடு பாப்பா...' என்ற வரியை தினமும் பார்த்து பார்த்து, வெள்ளைக் காகிதத்தில் எழுதி வந்தார். இதற்கு அந்த சேவா கிராமத்திலிருந்த சங்கரன் என்பவர் உதவினார்.
எட்டையபுரத்தில், பாரதியாருக்கு மண்டபம் அமைக்க மக்களிடம், நிதி வழங்குமாறு தமிழிலேயே கையெழுத்து போட்டு கொடுத்தார், காந்திஜி.
******
கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார், ரவீந்திரநாத் தாகூர். ஐம்பதுக்கும் அதிகமானோர், வீட்டில் இருப்பர். வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால், விதவிதமான கொண்டாட்டங்கள் இடம் பெறும்.
அதில் ஒன்று, ஒவ்வொரு பிள்ளை பெயரிலும் ஒரு நோட்டு இருக்கும். அதில், அந்நபரைப் பற்றி குடும்பத்தினர் தங்கள் விமர்சனங்களை இஷ்டம் போல் எழுதுவதுண்டு.
ரவீந்திரநாத் பிறந்தநாள் அன்று, அவருடைய பாட்டி, இப்படி எழுதினார். அது...
'ரவீயைப் பற்றிச் சொல்ல உருப்படியாக எதுவுமில்லை. அவன் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது. ஒரு டாக்டராகவோ, இன்ஜினியராகவோ, பெரிய ஆளாகவோ வருவான் என, தோன்றவில்லை. மற்ற பிள்ளைகள் மாதிரி அவன், புத்திசாலியாக இல்லையே என, வருத்தமாக இருக்கிறது...' என, எழுதியிருந்தார்.
மற்ற பிள்ளைகள் பிற்காலத்தில் இருந்த இடம் தெரியவில்லை. ஆனால், ரவீந்திரநாத் தாகூர், உலகப் புகழ்பெற்ற நபர் ஆனார்; நோபல் பரிசு பெற்றார்; தேசிய கீதம் தந்த கவிஞர் ஆனார்.
**********
பெரம்பூர் க.கந்தன் எழுதிய, 'கலைஞரின் பாதையில்...' என்ற நுாலிலிருந்து:
அறிஞர் அண்ணாதுரை, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி வைத்து ஆற்றிய உரையை, 'திராவிட நாடு' இதழில், 'மரண சாசனம்' என்ற தலைப்பில் வெளியிட்டார், கருணாநிதி.
* லோக்சபாவில், 'தெருவோரத்து மனிதனின் சாதாரண பிரதிநிதி...' என, தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார், அண்ணாதுரை
* தன்னை காரசாரமாய் எள்ளி நகையாடியவர்களை கூட, 'வாழ்க வசவாளர்கள்...' என்றே வாழ்த்தினார், அண்ணாதுரை.
- நடுத்தெரு நாராயணன்