
தேசிய விருதை எதிர்பார்க்கும், விக்ரம்!
பிதாமகன் படத்திற்கு பின், விக்ரம் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள படம், தங்கலான். கோலார் தங்க வயலில், வேலை செய்யும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில், நீண்ட தலை முடி மற்றும் தாடி என்று முற்றிலும் மாறுபட்ட, 'கெட் - அப்'பில் நடித்திருக்கிறார். இந்த படம், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, பாராட்டு பெற்று வருகிறது. அதனால், இப்படம், கண்டிப்பாக தனக்கு தேசிய விருது பெற்று தரும் என, எதிர்பார்க்கிறார், விக்ரம்.
சினிமா பொன்னையா
விஜயை, கடைசியாக இயக்கப் போவது யார்?
வெங்கட் பிரபு இயக்கும், கோட் படத்தில், இரண்டு வேடங்களில் தற்போது நடித்து வரும், விஜய், தன், 69வது படத்துக்கு பிறகு, சினிமாவுக்கு, 'குட் - பை' சொல்லப் போகிறார்.
இந்நிலையில், அவரிடம், வெற்றிமாறன், எச்.வினோத், அட்லி, கார்த்திக் சுப்புராஜ் என, நான்கு இயக்குனர்கள் ஏற்கனவே கதை சொல்லி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களில், வெற்றிமாறன் சொன்ன, சமூக பிரச்னையை பேசும் கதையை, 'டிக்' அடித்துள்ளார், விஜய். எனவே, அவர் தான், விஜயை இயக்கும், கடைசி பட இயக்குனர் என்பது, தெரிய வந்துள்ளது.
— சி.பொ.,
'ரீ - என்ட்ரி' கொடுத்த, மீரா ஜாஸ்மின்!
தமிழில், டெஸ்ட் என்ற படத்தின் மூலம், 'ரீ - என்ட்ரி' கொடுத்திருக்கிறார், மீரா ஜாஸ்மின். இந்த படத்தில், 'நெகட்டிவ்' வேடத்தில் நடிக்கும், இவர், 'அடுத்தடுத்து, படுகவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்...' என்று சொல்லி, தன் 'கிளாமர்' புகைப்பட ஆல்பத்தை, கோலிவுட்டில் சுற்றலில் விட்டுள்ளார்.
— எலீசா
போட்டி போடும் நடிகையர்!
விஜயுடன், பீஸ்ட் படத்தில் நடித்த, பூஜா ஹெக்டேவுக்கு, அதன்பின், தமிழில் படங்கள் இல்லை. என்றாலும், சிவகார்த்திகேயனை வைத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க, முயன்று வருகிறார்.
ஆனால், இதே படத்தை கைப்பற்ற, சீதா ராமன் படத்தில் நடித்து புகழ்பெற்ற, மிருணாள் தாக்கூரும், இன்னொரு பக்கம் வரிந்து கட்டி நிற்கிறார். அதனால், சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்ற, இந்த இரண்டு மும்பை நடிகையருக்கும் இடையே, திரை மறைவில் பெரும் அக்கப்போர் நடந்து வருகிறது.
— எலீசா
இயக்குனராகும் சிம்பு!
மன்மதன் படத்திற்கு கதை எழுதி, இரண்டு வேடத்தில் நடித்த, சிம்பு, அதன் பின், வல்லவன் படத்திற்கு கதை எழுதி, இயக்கி, நடித்திருந்தார். பின்னர், படம் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார்.
அடுத்து, மன்மதன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்கப் போகிறார். தற்போது, தனுஷ் தன், 50வது படத்தை, இயக்கி, நடித்து வருவதால், சிம்புவுக்கும், தான் நடிக்கும் படங்களை இயக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
பாகுபலி வில்லன், தன்னை காதலித்து, கழட்டி விட்டதால், அதன்பின், டோலிவுட் பக்கமே செல்லாமல் இருந்து வந்தார், மூனுஷா நடிகை. தற்போது, அங்குள்ள, மூத்த சூப்பர் ஸ்டார் நடிகருடன் நடிப்பதை அடுத்து, டோலிவுட்டில் மறுபிரவேசம் செய்திருக்கிறார்.
அதோடு, தன் 'மாஜி' காதலருக்கு, ஒரு எதிர்ப்பை, டோலிவுட்டில் உருவாக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு எதிரான நடிகர்களின் அணியில் இணைந்துள்ளார்.
மேற்படி நடிகரின் மார்க்கெட்டை, படிப்படியாக காலி பண்ணி, அவர் செய்த, காதல் துரோகத்துக்கு, தண்டனை கொடுக்க வேண்டும் என்று, சபதம் எடுத்துள்ளார்.
அதன் விளைவாக, முக்கிய இயக்குனர்களை, தன் வசப்படுத்தி, அவருக்கான பட வாய்ப்புகளை தட்டிப்பறித்து, தன் அபிமானிகளுக்கு கொடுக்கும், 'சீக்ரெட்' வேலைகளிலும் இறங்கியுள்ளார், நடிகை.
சினி துளிகள்!
* சில ஆண்டுகளாக, தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல், தெலுங்கில் மட்டுமே நடித்து வந்தார், ரெஜினா. தற்போது, அஜித் நடித்து வரும், விடாமுயற்சி படத்தில், இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார்.
* தற்போது, விஜய் நடித்து வரும், கோட் படத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்த், ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம், ஒரு கேரக்டரில் நடிக்கிறார்.
* லியோ படத்திற்கு பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என, பல மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார், த்ரிஷா.
அவ்ளோதான்!