/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: இனி எல்லாம் இன்பமே!
/
விசேஷம் இது வித்தியாசம்: இனி எல்லாம் இன்பமே!
PUBLISHED ON : ஜூன் 15, 2025

ஜூன் 18 - புதாஷ்டமி
திதிகளில், புதாஷ்டமி என்ற ஒரு தினம் உண்டு. அதாவது, புதன் கிழமையும், திதிகளில் எட்டாவதான அஷ்டமியும் இணைந்து வரும் நாள், புதாஷ்டமி.
பவுர்ணமியை அடுத்து வரும், தேய்பிறை அஷ்டமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை அஷ்டமியாகவும் இருக்கலாம். அதிலும், ஆனி மாதத்தில் அது வருமானால், மிகவும் விசேஷம்.
பொதுவாக அஷ்டமி திதிகளில், பைரவர் வழிபாடு சிறப்பானது. இந்த திதியன்று விரதமிருந்தால், தொலைந்து போனது கிடைக்கும்; கிடைப்பது நல்லதாக அமையும். ஒரு கதை மூலம் இதை விளக்குவர்.
விஜயை என்ற பெண்ணும், அவளது அண்ணனான கவுசிகன் என்பவரும், காளை ஒன்றை அன்புடன் வளர்த்தனர். அது காணாமல் போகவே, பல நாட்களாக தேடி அலைந்தனர்.
பசி வாட்டியது. ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க சென்றனர். அங்கே, தேவ மங்கையர் நீராடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தங்கள் பிரச்னையை கூறினர்.
கவுசிகனிடம், 'புதன் கிழமை தோறும் அஷ்டமி விரதம் அனுஷ்டித்து, பைரவரை வணங்கினால், உன் காளையும் கிடைக்கும்; உன் தங்கைக்கும் ஒரு காளை கிடைப்பான்...' என்றனர், தேவ மங்கையர். அவர்களும் விரதமிருக்க, காளை கிடைத்தது; விஜயைக்கும் ஒரு நல்ல மணமகன் அமைந்தான்.
இந்த நன்னாளில் தான், அசோகமரம் உருவானது. சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் இன்பம். சீதையை கடத்திய ராவணன், அவளை அசோக மரங்கள் நிறைந்த வனத்தில் சிறை வைத்தான்.
அனுமன் எப்போது, அந்த வனத்துக்குள் வந்தாரோ, அப்போதே சீதையின் சோகம் நீங்கி விட்டது. அசோக மரங்கள் பூத்துக் குலுங்கின.
மருத்துவ குணம் கொண்டது, அசோகமரம். இம்மரத்தின் பட்டை, பெண்களின் கர்ப்பப்பை பிரச்னைகளுக்கு மருந்தாக உள்ளது.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதி, ஓசூர், திருவண்ணாமலை ரமணர் ஆசிரமம் ஆகிய இடங்களில், அசோக மரங்கள் உள்ளன.
இலங்கையிலுள்ள நுவரேலியா என்ற இடம் தான், அன்றைய அசோக வனம். சீதை அங்கு இருந்ததை குறிக்கும் வகையில், சீதா கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோவிலில், ராமன், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. சிவனுக்கு, அசோக சுந்தரி என்ற மகள் இருப்பதாக சொல்வர்.
புதாஷ்டமி விரதம் எளிமையானது. அன்று அதிகாலை, 4:30 மணி, காலை 6:00 மணி, 8:00, 10:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 3:00, 6:30, இரவு 8:30 மணிக்கு என, எட்டுமுறை விளக்கேற்ற வேண்டும்.
குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் மற்றும் இனிப்பு வகைகளை பிரசாதமாக கொடுக்க வேண்டும். சிவாலயங்களிலுள்ள, பைரவர் சன்னிதியில் செவ்வரளி மாலை அணிவித்து, வணங்க வேண்டும்.
கடன் தொல்லை ஏற்படாமல் இருக்க, குழந்தைகளுக்கு நோய் நொடி தாக்காமல் இருக்க, கன்னிகளுக்கு தடையின்றி திருமணம் நடக்க, இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். புதாஷ்டமி விரதம் இருந்தால், இனி, எந்நாளும் இன்பமே!
தி. செல்லப்பா