/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விற்பனைக்கு வழிகாட்டும் ஒழுங்குமுறை கூடம்
/
விற்பனைக்கு வழிகாட்டும் ஒழுங்குமுறை கூடம்
PUBLISHED ON : ஜூலை 02, 2025

மதுரை திருமங்கலத்தில் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறையின் கீழ் செயல்படும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 18ஆயிரம் விவசாயிகள், வியாபாரிகள் ஒருங்கிணைந்து வேளாண் விளைபொருட்களை விற்கவும் வாங்கவும் செய்கின்றனர். 175 வகையான பொருட்களை விற்று கொடுத்ததன் மூலம் தமிழகத்தில் வேறெந்த விற்பனைக்கூடமும் செய்யாத சாதனையை நாங்கள் செய்துள்ளோம் என்கிறார் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ். அவர் கூறியதாவது:
வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறையின் கீழ் மதுரையில் 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. அதில் திருமங்கலம் விற்பனைக்கூடத்தில் 2023 ஏப்ரலில் மறைமுக ஏலம் மூலம் விவசாயிகளின் விளைபொருட்களை வியாபாரிகளுக்கு விற்று கொடுத்தோம். மத்திய அரசின் இ - நாம் எனப்படும் மின்னணு வேளாண் விற்பனை மூலமும் விற்பனை செய்கிறோம். ஆரம்பத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளே பயன்பெற்றனர்.
அதன்பின் விருதுநகர் மாவட்ட விவசாயிகளும் இங்கு வர ஆரம்பித்தனர். தற்போது தமிழகம் முழுவதும் 3300 விவசாயிகள் இந்த விற்பனைக்கூடம் மூலம் பயன்பெறுகின்றனர். இதுவரை 6300 டன் மதிப்புள்ள விளைபொருட்களை ரூ.25.5 கோடிக்கு விற்று கொடுத்ததை சாதனையாக நினைக்கிறோம்.
இணைந்தது எப்படி
விவசாயிகள், வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமானதால் மொத்தம் 20 வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்கி 18 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம். விவசாயிகள் விளைவித்த பொருட்களை மட்டும் விற்காமல் வியாபாரிகள் கேட்கும் பொருளையும் குழுவில் பதிவிட்டு தேடி வாங்கித் தருகிறோம். இம்முறையில் பாரம்பரிய நெல்லில் 40 வகையான ரகங்கள், எண்ணெய் வித்து, பயறு வகைகள் தொடங்கி வசம்பு, முருங்கை இலை, ஆவாரம் பூ, அவுரி, கஸ்துாரி மஞ்சள், மா இஞ்சி, பூனைக்காலி, வெற்றிலை, நெருஞ்சி, கோரைக்கிழங்கு என மூலிகை வகைகளையும் விற்று கொடுத்துள்ளோம்.
பூனைக்காலி விதைகளை அருப்புக்கோட்டையில் இருந்தும் கோரைக்கிழங்கு விதைகளை சிவகங்கையில் இருந்தும் உலர் திராட்சையை தேனியில் இருந்தும் மிளகை போடியில் இருந்தும் வாங்கி அனுப்பியுள்ளோம். வழக்கமான நெல் தவிடு கேள்விப்பட்டுள்ளோம். முதன்முறையாக சேலம் விவசாயியின் சாமை, வரகு, தினை, குதிரைவாலி தவிடு வகைகளை விற்று கொடுத்தோம்.
காய்கறி, பழங்கள்
சீக்கிரம் அழுகும் நிலையில் உள்ள பழம், காய்கறிகளையும் விற்கச் சொல்லி விவசாயிகள் குழுவில் பதிவிடுகின்றனர். அதற்கேற்ப வியாபாரிகளை பேசி ஆம்னி பஸ்களில் உடனடியாக அனுப்புவதால் விவசாயிகளுக்கு சேதாரமில்லாமல் விலை கிடைக்கிறது.
விளைபொருட்கள் மட்டுமின்றி அவற்றை மதிப்பு கூட்டி அரிசி, மாவு, தின்பண்டங்கள் என தயாரிக்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களையும் குழுவில் இணைத்துள்ளோம். அவர்களின் மதிப்பு கூட்டிய பொருட்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. இடைத்தரகர்களிடம் கைமாறும் போது விவசாயிக்கு குறைந்த விலை தான் கிடைக்கும். அதேநேரத்தில் நுகர்வோருக்கு அதிக விலையில் விற்கப்படும்.
எனவே விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நஷ்டம் தான் ஏற்படும். இங்கே விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பாலமாக செயல்படுவதோடு விற்பதன் மூலம் ஒரு சதவீத வரியை மட்டும் வசூலிக்கிறோம். 175 வகையான விளைபொருட்களை விற்று தருகிறோம்.
கடந்தாண்டு தேங்காய் விலை ஒன்று ரூ.5க்கும் கீழே குறைந்ததால் விற்காமல் போன முழுத்தேங்காயில் இருந்து 500 தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்திருந்தார் ஒரு விவசாயி. சேதாரம் போக 440 கன்றுகளை, தலா ரூ.40க்கு விற்று கொடுத்த போது விவசாயி சந்தோஷமடைந்தார். சில நேரங்களில் தேவைக்கு போக மீதமுள்ள நெல் நாற்றுகளையும் விற்றுத்தர சொல்லி விவசாயிகள் கேட்பதுண்டு.
எந்த பொருளாக இருந்தாலும் வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டதும் அதற்கான தேவை உள்ளோர் உடனடியாக தொடர்பு கொள்கின்றனர்.
சில்லறை விற்பனை உண்டு
திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சில்லறை விற்பனை பிரிவையும் துவக்கியுள்ளோம். இதற்கும் தனிக்குழு உண்டு. இங்கு 50 வகையான விளைபொருட்கள் இருப்பில் உள்ளதால் தேவைப்படுவோர் நேரடியாக வந்து வாங்கலாம். தமிழ்நாடு முழுக்க உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை விற்கவோ மதிப்பு கூட்டியோ விற்பதற்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்.
இவரிடம் பேச: 90251 52075.
-எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை