PUBLISHED ON : ஜூலை 29, 2026

அரைக்கீரை, சிறுகீரை, தண்டு கீரை, முருங்கை என ஒவ்வொன்றும் சத்து மிகுந்தவை தான். அனைத்து வகையான கீரைகளும் சூரிய வெளிச்சத்தில் நன்றாக வளரும். குறிப்பாக 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கீரை சாகுபடிக்கு ஏற்றது.
குளிர்ச்சியான பகுதிகளிலும் கீரைகளை வளர்க்க முடியும். சிறு கீரை, அரைக் கீரை, முளைக்கீரை, தண்டுகீரை, பொன்னாங்கன்னி, பசலி, மணத்தக்காளி கீரைகளை தனித்தனி பாத்திகளில் சாகுபடி செய்யலாம்.
மண் மற்றும் நிலம்
நிலத்தை கட்டிகள் இல்லாமல் உழுது அதில் பாத்திகளை தயார் செய்ய வேண்டும். நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது. அதிக களிமண், முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்ப்பது நல்லது.
எக்டேருக்கு 25 டன் மட்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் கலக்கவேண்டும். பின் 2க்கு 1.5 மீட்டர் என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி செய்யலாம்.
ஒரு எக்டேரில் கீரை சாகுபடி செய்ய 2.5 கிலோ விதைகள் தேவை. விதைகள் சிறிதாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் துாவி அதன் மேல் மண் அல்லது மணலை துாவி மூடவேண்டும்.
நீர் மேலாண்மை
கீரையின் வேர் ஆழமாகச் செல்லாது என்பதால் தினமும் அல்லது மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து நீர்ப்பாய்ச்ச வேண்டும். உப்புநீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால், முளைக்கும் வரை நன்னீர் பயன்படுத்துவது நல்லது.
பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சினால் தான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாது. அடுத்து 3ம் நாள் உயிர்த்தண்ணீரும் அதன் பின் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதைத்த 6 முதல் 8 நாட்களில் முளைத்து விடும். பிறகு 12 முதல் 15 செ.மீ இடை வெளியில் செடிகளை கலைத்து விட்டால் சீராக வளரும்.
ஊட்டச்சத்து மேலாண்மை
எக்டேருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ அளவிற்கான ராசயன உரங்களை அளிக்க வேண்டும்.
ஒரு எக்டேருக்கு 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 2 கிலோ அசோஸ்பைரில்லம் உயிர் உரங்களை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 10 முதல் 15 நாட்களில் களை எடுக்க வேண்டும். விதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் பூச்சிமருந்து தெளிக்காமல் இருப்பது நல்லது.
எனினும் இலை கடிக்கும் புழுக்கள், இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த வேம்பு சார்ந்த வேப்ப எண்ணெய், இயற்கை உயிர் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.
அறுவடை
தண்டுக்கீரையை மீண்டும் மீண்டும் கிள்ளி விடலாம். அரைக்கீரையை விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ.மீ அளவில் கிள்ளி எடுக்க வேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளி என 10 முறை அறுவடை செய்யலாம். அரைக்கீரை எக்டேருக்கு 25 டன் மகசூல் கிடைக்கும்.
முளைக்கீரையை விதைத்த 21 முதல் 25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். இது எக்டேருக்கு 10 டன் மகசூல் கிடைக்கும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். தண்டுக்கீரையை விதைத்த 35 முதல் 40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை செய்யலாம்.
இது எக்டேருக்கு 16 டன் கிடைக்கும். சரியான சந்தைப்படுத்தல், பல வகை கீரைகள் கலப்பு சாகுபடி மூலம் ஒரு ஏக்கருக்கு கணிசமான லாபம் பெற முடியும்.
அரிபுத்திரன்,வேளாண்மை அலுவலர்,உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்,விருதுநகர்.அலைபேசி: 82480 80922
