/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்'
/
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்'
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்'
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு :கடலோர மாவட்டங்களுக்கு 2 நாள் 'ரெட் அலெர்ட்'
ADDED : ஜூன் 18, 2025 11:07 PM

மங்களூரு: கடலோர, மலைநாடு மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. வடக்கு அரபி கடலோர பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கர்நாடகாவின் கடலோர, மலைநாடு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
கனமழையால் தட்சிண கன்னடாவின் மங்களூரு, முல்கி, சூரத்கல், கண்ணுார் பகுதிகளில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்ணுார் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஐந்து வீடுகள் மீது மண் விழுந்தது. இதில் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.
அந்த பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு, ஐந்து வீட்டில் வசிப்பவர்களும் சென்று இருந்ததால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பொருட்கள் முழுதும் சேதம் அடைந்தன. முல்கி மென்னபெட்டு என்ற கிராமத்தில் ஜெயஸ்ரீ என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
விடுமுறை
தொடர் கனமழையால் தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓடும் நேத்ராவதி, பல்குனி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோல உடுப்பி மாவட்டத்தில் பெய்யும் மழையால் சுவர்ணமுகி, சவுபர்ணிகா, பீமா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உத்தர கன்னடாவிலும் நேற்று கனமழை பெய்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமட்டா, கார்வார், அங்கோலா, ஹொன்னாவர், பட்கல், சிர்சி, சித்தாபுரா, எல்லாபுராவில் பள்ளி, அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தடுப்பு சுவர்
மலை மாவட்டமான குடகிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி, பாகமண்டலா, திரிவேணி சங்கமம் பகுதிகளில் மழை கொட்டித் தீர்க்கிறது. திரிவேணி சங்கமம் பகுதி வெள்ளக்காடாக மாறி உள்ளது. மடிகேரியில் உள்ள ஹாரங்கி அணையின் நான்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
ஹாசன் சக்லேஸ்பூர் அருகே தோனிகல் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவால், சாலையில் மண் குவிந்தது. இந்த இடம் பெங்களூரில் இருந்து மங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து இருப்பதால், வாகனங்கள் நீண்ட துாரம் அணிவகுத்து நின்றன.
பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மண் அகற்றப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. சக்லேஸ்பூர் ஷிராடி வனப்பகுதி சாலையில், ஆனேமஹால் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
37,000 கனஅடி
சிக்கமகளூரு மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், குதிரேமுகாவில் உற்பத்தியாகும் துங்கா ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஷிவமொக்காவின் காஜனுார் என்ற இடத்தில் துங்கா ஆற்றின் குறுக்கே அணை உள்ளது. இந்த அணையில் இருந்து நேற்று மாலை வினாடிக்கு 37,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஷிவமொக்காவின் ஹொசநகர் தாலுகா குண்டகல் கிராமத்தில் சாலையில் விரிசல் விழுந்தது. சாகரில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மஹாராஷ்டிராவில் பெய்யும் கனமழையால் அங்குள்ள கொய்னா, ராஜாபுரா அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கிருஷ்ணா, துாத்கங்கா ஆறுகளில் பாய்ந்து ஓடுகிறது.
பெலகாவியின் சிக்கோடியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கல்லோலா - யதுார்; மாலிக்வாடா - தத்தவாடா; பராவாட் - குன்னுார்; கரடகா - போஜா ஆகிய கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.