/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அலமாட்டி அணை நீர்மட்டத்தை உயர்த்த மஹா., முதல்வர் எதிர்ப்பு! வெள்ளப்பெருக்கு அபாயம் என கர்நாடக முதல்வருக்கு கடிதம்
/
அலமாட்டி அணை நீர்மட்டத்தை உயர்த்த மஹா., முதல்வர் எதிர்ப்பு! வெள்ளப்பெருக்கு அபாயம் என கர்நாடக முதல்வருக்கு கடிதம்
அலமாட்டி அணை நீர்மட்டத்தை உயர்த்த மஹா., முதல்வர் எதிர்ப்பு! வெள்ளப்பெருக்கு அபாயம் என கர்நாடக முதல்வருக்கு கடிதம்
அலமாட்டி அணை நீர்மட்டத்தை உயர்த்த மஹா., முதல்வர் எதிர்ப்பு! வெள்ளப்பெருக்கு அபாயம் என கர்நாடக முதல்வருக்கு கடிதம்
ADDED : ஜூன் 02, 2025 11:10 PM

கர்நாடகாவின் வட மாவட்டங்களான விஜயபுரா, பாகல்கோட் ஆகியவற்றின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது அலமாட்டி அணை. இந்த அணை, கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை நீர் ஆந்திரா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் பாசனத்துக்கும் பயன்படுகிறது.
இந்த அணையின் மொத்த கொள்ளளவு 123.08 டி.எம்.சி., ஆகும். இதை சட்டப்படி உயர்த்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நேற்று முன்தினம் கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி., பாட்டீல் நீர்மட்டத்தை அதிகப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
வெள்ள அபாயம்
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், மஹாராஷ்டிராவின் சாங்கிலி, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து, துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
அலமாட்டி அணையின் நீர் மட்டத்தை உயர்த்த கூடாது என, மஹா., முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், கடந்த 9ம் தேதி நமது முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். இது அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை. அண்டை மாநிலங்களுடான மோதல்களை விட மாநிலத்தின் நலனே முக்கியம்.
அதிர்ச்சி
மாநிலங்களுக்கு இடையேயுள்ள நதி நீர் பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டம் நடத்த மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் திட்டமிட்டிருந்தார். இந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் நடக்கவில்லை.
இதற்கிடையில், மஹா., முதல்வர் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அலமாட்டி அணையின் உயரம் குறித்து கிருஷ்ணா இரண்டாவது தீர்ப்பாயம் அறிவுறுத்தல்கள் வழங்கிய போது, மஹா., அரசு தரப்பில் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
அப்படி இருக்கையில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கூறி திடீரென கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை நாம் எப்படி சமாளிக்கிறோமா, அதேபோல மஹா., அரசும் சமாளிக்கட்டும். இருப்பினும், தேவேந்திர பட்னவிஸ் எழுதியுள்ள கடிதம் குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் விவாதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் பதில் கடிதம் அனுப்பப்படும்.
பயன் இல்லை
கிருஷ்ணா இரண்டாவது தீர்ப்பாயத்தின் கூற்றுப்படி, மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் மீது முழு உரிமை செலுத்தும் அதிகாரம் உள்ளது.
இந்த விஷயத்தில் தேவைப்பட்டால், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும். மாநிலங்களவை, மக்களவையில் பிரதமர், ஜல் சக்தி துறை அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
மஹா., அரசு இவ்வளவு காலம் சும்மா இருந்துவிட்டு, தற்போது பிரச்னை எழுப்புவதில் எந்த பயனும் இல்லை. ஹேமாவதி அணை தண்ணீரை துமகூரில் இருந்து மாகடி, குனிகலுக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்த திட்டம், குமாரசாமி ஆட்சி காலத்தில் அறிமுகமானது.
இது எடியூரப்பா ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, இது மீண்டும் துவங்கப்பட்டது. இதற்காக, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் வெற்றி அடையக்கூடாது என்பதற்காக பா.ஜ., சதி செய்து வருகிறது. இது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை இல்லை. குனிகலில் உள்ள 91 சதவீதம் மக்கள், குடிநீர் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.
குனிகலுக்கு 2014 முதல் தற்போது வரை 10 சதவீதம் தண்ணீர் கூட போகவில்லை. இத்திட்டம் மூலம் துமகூரில் உள்ளோருக்கு எந்த பிரச்னையும் எழாது.
இவ்வாறு அவர் கூறினார்.