ADDED : ஆக 03, 2026 12:12 AM

கதக்: ''அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின் காங்கிரசில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைவர்,'' என பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின் காங்கிரசில் அதிருப்தி புயல் எழும். இலாகாக்கள் ஒதுக்கீடு, அமைச்சர் தேர்வு செய்வதில் காங்கிரசில் குழப்பம் நிலவுகிறது.
அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின் அதிருப்தியில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைவர்.
காங்கிரசை சேர்ந்த பல எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அனைவரும் அமைச்சர் பதவிக்காக காத்திருக்கின்றனர்.
எத்னால், ஈஸ்வரப்பா ஆகியோர் பா.ஜ.,வில் மீண்டும் இணைந்தால் கட்சியின் பலம் அதிகரிக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கட்சியை விட்டு வெளியேறுவோரை மீண்டும் கொண்டு வருவதால் கட்சியின் பலம் அதிகரிக்கும்.
கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வந்த காங்கிரஸ் தற்போது மவுனம் காக்கிறது.
கடனை தள்ளுபடி செய்தால் விவசாயிகள் உங்களை எப்போதும் மறக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
