/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூனை திருட்டு வழக்கு தள்ளுபடி போலீசார் மீது ஐகோர்ட் அதிருப்தி
/
பூனை திருட்டு வழக்கு தள்ளுபடி போலீசார் மீது ஐகோர்ட் அதிருப்தி
பூனை திருட்டு வழக்கு தள்ளுபடி போலீசார் மீது ஐகோர்ட் அதிருப்தி
பூனை திருட்டு வழக்கு தள்ளுபடி போலீசார் மீது ஐகோர்ட் அதிருப்தி
ADDED : ஜூன் 12, 2025 07:54 AM

பெங்களூரு,: பூனை திருட்டு தொடர்பாக, வழக்கு பதிவு செய்தது மட்டுமின்றி, இது தொடர்பாக குற்றபத்திரிக்கையும் தாக்கல் செய்த போலீசாரின் செயலால், கர்நாடக உயர் நீதிமன்றம் எரிச்சல் அடைந்துள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், ஷிகாரிபாளையாவின், சிராஜ் லே - அவுட்டில் வசிப்பவர் தாஹா ஹுசேன், 31. இவரது பக்கத்து வீட்டில் நிகிதா அஞ்சனா அய்யர், 41, வசிக்கிறார். இவர், 'டெய்சி' என்ற பெயரில் பூனை ஒன்றை வளர்க்கிறார். இந்த பூனை அவ்வப்போது ஜன்னல் வழியாக, ஹுசேன் வீட்டுக்குள் சென்று வருவது வழக்கம்.
'பூனையை தங்கள் வீட்டிற்குள் வர விட வேண்டாம். இதனால் தொந்தரவு ஏற்படுகிறது' என, தாஹா ஹுசேன் பல முறை கூறியும், நிகிதா அஞ்சனா பொருட்படுத்தவில்லை. சில நாட்களாக பூனையை காணவில்லை. பூனையை ஹுசேன் அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதனால் இரண்டு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் நடந்தது.
இதற்கிடையே ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தில், 2022 செப்டம்பரில் நிகிதா அஞ்சனா புகார் அளித்தார். அதில், 'நான் வளர்த்த டெய்சி பூனையை, பக்கத்து வீட்டில் வசிக்கும் தாஹா ஹுசேன், அடைத்து வைத்துள்ளார்.
வீட்டுக்குள் நுழைந்து தொல்லை தருகிறது என்பதால், அப்படி செய்துள்ளார். அவர் வீட்டு ஜன்னலில் என் பூனை இருப்பது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
'என் பூனையை திருப்பி தரும்படி கேட்ட போது, ஹுசேன் தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆபாச சைகை காட்டினார். மீண்டும் என் வீட்டுக்கு வந்தால், கொலை செய்வதாக மிரட்டுகிறார். காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தாருங்கள்' என கோரியிருந்தார்.
இது குறித்து, ஹுசேன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திய போலீசார், ஆனேக்கல்லின் 4வது கூடுதல் சிவில் மற்றும் ஜெ.எம்.எப்,சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தன் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பூனை என் வீட்டு ஜன்னலில் இருந்தது என்பதை வைத்து, தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீது, நீதிபதி நாக பிரசன்னா முன்னிலையில், நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி கூறியதாவது:
மனுதாரரின் வீட்டில் பூனை தென்பட்டதற்கும், பெண்ணின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கும், என்ன சம்பந்தம். தாஹா ஹுசேன் வீட்டுக்குள் பூனை செல்கிறது, வெளியே வருகிறது. அதற்காக அவர் கொலை மிரட்டல் விடுத்தார், பெண்ணின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தினார், அமைதியை குலைத்தார் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது.
இத்தகைய வழக்கு விசாரணையை தொடர அனுமதி அளித்தால், நியாயத்துக்கு களங்கம் ஏற்படுத்தியதாக இருக்கும். இந்த வழக்கை போலீசார், பதிவு செய்ததுடன் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
உண்மையான குற்ற வழக்குகளை கவனியுங்கள் என்றால், பூனை காணாமல் போன வழக்கை, போலீச்சார் விசாரிக்கின்றனர். பூனை அனைவரின் வீட்டுக்குள்ளே செல்வதும், வெளியே வருவதும் சகஜம். பூனை காணாமல் போய்விட்டது என, புகார் அளித்தால் போலீசாரும் விசாரித்து, குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது துரதுஷ்டவசமாகும். தன் மீது பூனை திருட்டு குற்றச்சாட்டு சுமத்திய நிகிதா அஞ்சன் மீது, தாஹா ஹுசேன் வழக்கு தொடரலாம்.
தனிப்பட்ட பகைக்காக, அற்ப காரணங்களுக்காக சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வழக்குகளில், போலீஸ் துறை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகும்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதி நாக பிரசன்னா, தாஹா ஹுசேன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.