/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதைக்கப்பட்ட பெண் உடல் நரபலியா என விசாரணை
/
புதைக்கப்பட்ட பெண் உடல் நரபலியா என விசாரணை
ADDED : ஜூன் 20, 2025 11:27 PM

சாம்ராஜ் நகர்: கொள்ளேகாலில் சுவர்ணவதி நதியின் கரையில் புதைக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், கொள்ளேகாலின் ஹலே ஹம்பாபூரா கிராமம் அருகில் உள்ள சுவர்ணவதி நதியின் அருகில் நேற்று முன்தினம் சிலர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கரையின் அருகில் ஒரு பெண்ணின் கை மட்டும் வெளியே தெரிந்ததை, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சசிகுமார் என்பவர், பார்த்தார். அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த போலீசார், அங்கு தோண்டிய போது, ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம். பிரேத பரிசோதனைக்காக சிம்ஸ் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து கொள்ளேகால் ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், உடல் கிடந்த இடத்தில் இருந்து 40 அடி துாரத்தில் விளக்கு, குடிநீர் பாட்டில், மஞ்சள், குங்குமம் இருந்தது. ஒருவேளை புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

